பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில்!

283

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில்!

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் என்ற ஊரில் உள்ள கோயில் தட்சிணாமூர்த்தி திருக்கோயில். இந்தக் கோயிலில் திருவனந்தல், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, 2ம் காலம், அர்த்தசாமம் என்ற ஆறுகால பூஜைகள், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகை தீபம், மாசி மகம், பிரதோஷம், சிவராத்திரி ஆகிய நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் பின்புறமுள்ள உள்தலத்தில் கிழக்கு நோக்கி பார்த்தவாறே 5 தலை கொண்ட சண்முகநாதர், வள்ளி, தெய்வானை சகிதமாக எழுந்தருளியுள்ளார். இந்தியாவிலேயே பட்டமங்கலத்தில் மட்டும் தான் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி அமைந்துள்ள சன்னதி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயிலை 3 முறை பிரதட்சணம் செய்தால் விரும்பிய காரியம் நடக்கும். 5 முறை பிரதட்சணம் செய்தால் காரிய வெற்றி நடக்கும். 7 முறை செய்தால் நல்ல குணம், எண்ணம், வாழ்க்கையில் அமைதி நிலவும். 9 முறை செய்தால் குழந்தை பேறு கிடைக்கும். 11 முறை செய்தால் ஆயுள் விருத்தி ஏற்படும். 15 முறை செய்தால் செல்வம் பெருகும். 1008 முறை செய்தால் தாம் விரும்பிய பெண்ணையே மனைவியாக அடையலாம் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

தட்சிணாமூர்த்தி சன்னதியையும், அதன்பின் அமைந்துள்ள தெய்வ ஆலமரத்தையும் சேர்த்து சரியாக 108 சுற்றுகள் வலம் வந்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்குவதோடு பெருவளம் ஏற்படும் என்பது நம்பிக்கை. விரும்பிய காரியம், குழந்தை பேறு கிடைக்கவும், வாழ்க்கையில் அமைதி நிலவவும், ஆயுள் விருத்தியடையவும், செல்வம் பெருகவும் இந்தக் கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தால் இறைவன் அருளால் பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம்.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இந்தக் கோயிலின் தல விருட்சம் ஆலமரம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் போன்று இந்தக் கோயில் பொற்றாமை குளத்தை கொண்டுள்ளது. தட்சிணாமூர்த்தி சன்னதி கோயிலின் வெளியே தனியாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

திருமால் பன்றி உருவமாகவும், பிரம்மன் அன்ன வடிவமாகவும் அதற்கு மேலாக மென்மை திருவடியுடன் வீராசனத்துடன் புன்னகை தவழும் சிவந்த திருவாய் மேனியாய், பிறைமதி, கொன்றை, வலது மேற்கரத்தில் அக்னியும், வலது கீழ்க்கரத்தில் ஞான முத்திரையும், இடது மேற்கரத்தில் நாகமும், இடது கீழ்கரம் தொடையில் வைத்தும் தட்சிணாமூர்த்தி இங்கு காட்சியளிக்கிறார்.

தென் முககடவுளான தட்சிணாமூர்த்தி அனைத்து கோயில்களிலும் தெற்கு நோக்கியே அருள் பாலிக்கிறார். ஞானத்திற்கும், யோகத்திற்கும் உரிய கடவுளாக திகழ்கிறார். ஆலங்குடி, திருவாரூர் போன்ற சில கோயில்களில் மட்டும் தட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் காட்சி தருகிறார். ஆனால், இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே கோயிலாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம் மட்டுமே.

இறைவன் நந்தி, பிருங்கி முதலான நால்வருக்கு சிவகதையினை கூறிக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திகை பெண்களான நிதர்த்தனி, அபரகேந்தி, வர்தயேந்தி, டேகேந்தி, அம்பா, துலா ஆகிய 6 பேரும் தங்களுக்கும் அஷ்டமாசித்தியை உபதேசித்தருளும்படி இறைவனிடம் வேண்டினர். ஆனால், இறைவனுக்கோ இதில் சற்று சஞ்சலம் தோன்றியது. அருகிலிருந்த உமையவள் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசிக்கும்படி கூறினாள்.

உமையவள் கேட்டுக் கொண்டதையடுத்து இறைவன் அஷ்டமாசித்தியை உபதேசிக்க துவங்கினார். ஆனால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திராத பெண்கள் கவனக்குறைவாக செவிமடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த இறைவன் நீங்கள் பட்டமங்கை என்ற தலத்தில் கற்பாறைகளாக கடவது என்று சாபம் அளித்தார்.

இதையடுத்து, தங்களது தவறை உணர்ந்த கார்த்திகைப் பெண்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட சாபத்தை நீக்கும்படி இறைவனிடம் வேண்டினர். இறைவன் அவர்களை மன்னித்து அருளினார். நீங்கள் கருங்கற் பாறைகளாக பட்டமங்கை தலத்தில் ஆயிரம் ஆண்டுகள் இருங்கள். அதன்பின் மதுரையிலிருந்து வந்து குருவடியில் காட்சியளித்து உங்களுக்கு சாபவிமோசனம் அளிக்கிறேன் என்றார். அவ்வாறே இறைவன் மதுரையிலிருந்து எழுந்தருளி கார்த்திகைப் பெண்களுக்கு சாப விமோசனம் அளித்த தலமே பட்டமங்கை ஆகும். இதுவே நாளடைவில் பட்டமங்கலம் என்றானது.

கார்த்திகைப் பெண்கள் ஆறுபேருக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்க உமையவள் அவர்களுக்கு ஆதரவாக சிபாரிசு செய்ததால் அவருக்கும் இறைவன் சாபமிட்டார். இதன் காரணமாக அவர் காளி கோலத்தில் நாவல் மரத்தடியில் நவையடிக் காளியாக அருள் பாலித்து வருகிறார். இதையடுத்து, சாபவிமோசனம் வேண்டி நாவல் மரத்தடியில் நவையடிக் காளியாக கடும் தவம் செய்து அம்பிகை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அழகுசௌந்தரியாக அருள் பாலிக்கிறாள். இங்குள்ள சிவலிங்கத்தின் பின்புறத்திலுள்ள உள்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி பார்த்தவாறு 5 தலை கொண்ட சண்முகநாதர், வள்ளி தெய்வானை சகிதமாக எழுந்தருளியுள்ளார்.