பரசுராமரின் தோஷம் நீக்கிய கரும்பீஸ்வரர் ஆலயம்!
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வடக்கு பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் விஷ்ணம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது திருக்கானூர் கரும்பீஸ்வரர் திருக்கோவில்.
ஆலயத்தின் சிறப்பு:
திருக்கானூர் என்ற மணல்மேடு என அழைக்கப்படும் இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இக்கோவிலின் உள்ளே நுழைந்த உடன் வடபுறத்தில் தெற்கு நோக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இறைவன் கரும்பீஸ்வரர். அம்மன் சவுந்தரநாயகி அம்பாள்.
மூலவரின் வேறு பெயர்கள்:
மூலஸ்தானத்தில் கோவில் கொண்டுள்ள இறைவனுக்கு கரும்பீஸ்வரர், செம்மேனிநாதர் தேஜோமயர், இஷுவனேஸ்வரர், செம்பேனியப்பர், முளைநாதர் ஆகிய பெயர்களும் உள்ளன. இக்கோவிலின் தீர்த்தம் கொள்ளிடம் மற்றும் வேத தீர்த்தம் ஆகும். தலவிருட்சம் வில்வ மரம்.
மணல் மூடிய ஸ்தலம்:
கோவிலின் அருகில் உள்ள கொள்ளிடம் நதி பெருக்கெடுத்து ஓடியதால் இந்த கோவிலை மணல்மூடி மக்கள் கண்களுக்கு தெரியாமல் இருந்தது. இந்தநிலையில், மாடு மேய்க்கும் சிறுவர்கள் காலில் கோவில் கலசம் தென்பட்டதை தொடர்ந்து இந்த இடத்தை தோண்டி பார்க்க கோவில் முழுமையும் வெளியே கொண்டு வரப்பட்டது.
பரசுராமரின் தோஷம் நீக்கிய ஸ்தலம்:
இக்கூற்று உண்மை என்பது போல் தற்போது கோவிலின் மதில் சுவரை சுற்றி மணல்மேடு காணப்படுகிறது. இக்கோவில் இருந்த பகுதிக்கு பனிமதி மங்கலம், கரிகாற்சோழர் சதுர்வேதி மங்கலம் என வேறு பெயர்கள் இருந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது.
இக்கோவில் பரசுராமனின் தோஷம் நீக்கிய தலம் ஆகும். அம்மன் சிவ தியானம் செய்ய பூவுலகில் இத்தலத்தை தேர்வு செய்து சிவதியானத்தில் ஆழ்ந்தார். சிவதியானத்தில் இருந்த அம்பாளுக்கு இறைவன் ஒளி வடிவாக காட்சியளித்தார். இதனால் இத்தல இறைவனுக்கு தேஜோமயர், செம்மேனியப்பர், என்றும் அம்பாளுக்கு சிவயோக நாயகி என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் சூரிய ஒளிக்கதிர்கள்:
விஷ்ணம்பேட்டை, திருக்கானூர், மணல்மேடு என அழைக்கப்படும் இக்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. தல மகிமையாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1, 2, 3-ந் தேதிகளில் சூரிய உதயத்தில், சூரியனின் ஒளி மூலஸ்தான இறைவன் மீது படும் வகையில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அபிஷேகம்:
இந்த 3 நாட்களிலும் காலை உதய நேரத்தில் சூரிய கதிர்கள் மூலவர் மீது பட்டு சூரியபகவான் சிவனை பூஜிக்கும் விழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாத மூல நட்சத்திரத்தில் சந்தனக்காப்பு, தை மாத பவுர்ணமியை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பிரதோஷ வழிபாடும் இக்கோவிலில் சிறப்பாக நடந்து வருகிறது. மகாசிவராத்திரி நாளில் 1008 திருவிளக்கு பூஜை நடக்கும்.
திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலுக்கு திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் வருகை தந்து வழிபட்டனர் என்பது அவர்கள் எழுதிய பாடல்கள் வாயிலாக தெரிய வருகிறது.
பண்டைய சோழ மன்னன் கரிகாலன் ஊர் இந்த கோவில் அமைந்துள்ள ஊர் என்றும், யானை மாலையிட்டு கரிகாற் சோழனை அழைத்துச் சென்றது இந்த ஊரில் இருந்துதான் என்றும் ஒரு செவிவழி செய்தி இந்த ஊரை பற்றி தெரிவிக்கிறது. மேலும் இந்த கோவிலுக்கு முதலாம் ராஜேந்திர சோழன் நிலங்களை வழங்கி உள்ளதாகவும் கல்வெட்டு செய்தி கூறுகிறது.
பலன்கள்:
இத்தலத்தில் உள்ள சிவனையும், அம்பாளையும் வணங்கினால் உடல் நலக்குறைவு நீங்கி திருமணத்தடை அகலும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் வளமான வாழ்க்கையை கரும்பீஸ்வரர் அருள்வார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலில் தல விருட்சம் வில்வ மரத்தின் இலைகளால் செம்மேனி நாதருக்கு அர்ச்சனை செய்து வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி சிவகவசம் பாராயணம் செய்தால் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்றும், சவுந்தரநாயகி அம்பாளுக்கு புத்தாடை அணிவித்து, செவ்வரளி மாலை சாற்றி தீபமிட்டு அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்கி, திருமணம் கைகூடும் என்றும், செம்மேனியப்பருக்கும், அம்பாளுக்கும் எருக்கமாலை அணிவித்து பால், தயிர், நெய், தேன், பன்னீர் அபிஷேகம் செய்ய சந்தானபாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
சகல தோஷம் நீங்கும்:
சப்தமி நாளில் இக்கோவிலில் மூலவரையும், அம்பாளையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீ்ங்கும் என இன்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
ஆலய அமைவிடம்:
தஞ்சையில் இருந்து பேருந்து மூலம் திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் திருக்காட்டுப்பள்ளி காவிரி பாலத்தை கடந்து சென்றால் ஆலயத்தை அடையலாம்.