பேசும் தெய்வம் பிரகதாம்பாள்!

480

பேசும் தெய்வம் பிரகதாம்பாள் (அரைக்காசு அம்மன்)!

புதுக்கோட்டையை ஆட்சி செய்த மன்னரோடு நேருக்கு நேர் நின்று பேசியதாக கூறப்படும் நிலையில் பிரகதாம்பாளை பேசும் தெய்வம் என்று அழைக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் என்ற பகுதியில் அமைந்துள்ள கோயில் தான் அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில். இந்த கோயிலின் மூலவராக கோகணேஸ்வரர் உள்ளார். சிவபெருமான் காமதேனுவுக்கு மோட்சம் தரக் காரணமாக இருந்த சிவதலமாக இந்த கோகணேஸ்வரர் விளங்குகிறார். புதுக்கோட்டையை ஆட்சி செய்த மன்னரோடு நேருக்கு நேர் நின்று பேசிய தெய்வம் என்ற் வரலாறு கூறுவதால் பிரகதாம்பாளை பேசும் தெய்வம் என்று அழைக்கின்றனர்.

அரைக்காசு அம்மன் பெயர்க்காரணம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சி செய்து வந்த மன்னர்கள் திருக்கோகர்ணம் பிரகதாம்பாளை வணங்கி வந்தனர். பிரகதாம்பாளை வணங்கி வரும் பக்தர்களுக்கு அரிசி, வெல்லம் மற்றும் அன்றைய காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த அரைக்காசில் அம்பாள் உருவத்தை பொறித்துக் கொடுத்தனர். இதனால், பிரகதாம்பாளுக்கு அரைக்காசு அம்மன் என்று பெயர் வந்தது.

ஒருமுறை புதுக்கோட்டையை ஆட்சி செய்த மன்னர் ஒருவர் தான் தொலைத்த பொருளை திரும்ப பெற வேண்டி இந்த அரைக்காசு அம்மனை நினைத்து வழிபட்டார். மன்னர் தொலைத்த பொருள் கிடைத்துவிட்டது. அன்றுமுதல், தொலைந்து போன பொருள் எதுவாக இருந்தாலும் அது திரும்ப கிடைக்க வேண்டி அரைக்காசு அம்மனை நினைத்து வழிபாடு செய்தால், தொலைந்து போன பொருள் திரும்ப கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

புதுக்கோட்டை சென்று வழிபட முடியாதவர்கள் சென்னை வண்டலூர் அருகாமையில் உள்ள ரத்னமங்கலம் ஸ்ரீ லட்சுமி குபேரர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள அரைக்காசு அம்மன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

17 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் குபேரரின் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றுள்ளது. அன்றைய நாளில் மகாலட்சுமியின் டாலர் பதித்த தங்க ஜெயின் ஒன்று தொலைந்துவிட்டது. அப்போது, ரத்னமங்கலத்தைச் சேர்ந்த மக்கள் புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரைக்காசு அம்மனை நினைத்து காணாமல் போன ஜெயின் திரும்ப கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்தனர்.

பிரார்த்தனை செய்த சிறிது நேரத்திலேயே தொலைந்து போன ஜெயின் குப்பை தொட்டியில் இருந்து எடுக்கப்பட்டது.  ஜெயின் கண்டெடுக்கப்பட்ட அன்று சிலை வடிவமைக்கும் சிற்பியும் ஸ்ரீ லட்சுமி குபேரர் கோயிலுக்கு வரவே, தெய்வ அருளாகவே எண்ணி அரைக்காசு அம்மனுக்கு சிலை வடிவமைக்கும் பணியும் தொடங்கப்பட்டது.

அம்மனுக்கு சிலை வடிவமைக்கும் பணி இரவு, பகலாக நடந்தது. அதன் பின் முற்றிலும் பணி முடிந்து தண்ணீர், தான்யம், பொன், பொருள் ஆகியவற்றில் வைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி அரைக்காசு அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடந்து அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பரிகாரம்:

தொலைந்து போன பொருள் மட்டுமல்லாமல், திருடு போன பொருள், நகை, வாகனம், செல்போன் கிடைக்கவும், தங்களது சொத்து தங்களுக்கு வந்து சேரவும் அரைக்காசு அம்மனை நினைத்து வழிபட்டு வர வேண்டும். அப்படி வழிபட்டு வந்தால், அவர்களது பொருள் திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம். பொருள் திரும்ப கிடைத்த பிறகு வெல்லத்தை பிள்ளையாராக பிடித்து அம்மனாக நினைத்து பிரார்த்தனை செய்யலாம். அதன் பிறகு அந்த வெல்லத்தை பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.