மகாலிங்கேஸ்வரர் கோயில்!

119

மகாலிங்கேஸ்வரர் கோயில்!

திண்டுக்கல் மாவட்டம் விராலிபட்டி தவசி மேடை என்ற பகுதியில் உள்ளது மகாலிங்கேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக மகாலிங்கேஸ்வரர் காட்சி தருகிறார். மேலும், தாயார், மரகதவல்லி மற்றும் மாணிக்கவல்லி ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

தல சிறப்பு:

சிவராத்திரியை ஒட்டிய 30 நாட்களும் சூரிய ஒளியானது மூலவர் மீது விழுகிறது. காலையில் சூரியனின் ஒளிக்கதிரானது சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுகிறது. மகம் நட்சத்திரத்தைச் சேர்ந்த ராசிக்காரர்கள் இந்தக் கோயிலில் வழிபாடு செய்வது சிறப்பு. அதோடு, இந்த நட்சத்திரத்தைத் தவிர மற்ற நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களும் மகாலிங்கேஸ்வரரை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

பொதுவாக எந்தவொரு கோயிலாக இருந்தாலும் சரி, ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பாள் தான் காட்சி தருவாள். ஆனால், இந்த மகாலிங்கேஸ்வரர் கோயிலில் ஒரு சன்னதியில் மரகதவல்லி மற்றும் மாணிக்கவல்லி ஆகியோர் இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இந்தக் கோயிலில் உள்ள சிவலிங்கமானது வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யாரெல்லாம் பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் கண்டிப்பாக இந்தக் கோயிலில் உள்ள மகாலிங்கேஸ்வரரை வழிபட வேண்டும்.

மகம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:

ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட நீங்கள், எப்போதும் கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டு இருப்பீர்கள். நேர்மையானவர்கள். மனத் தூய்மையோடு இருப்பீர்கள். பிறரை மரியாதையுடனும், கௌரவமாகவும் நடத்துவீர்கள். பெரும்பாலும் தலைமைப் பண்பு வகிப்பர். தர்மம் செய்வதில் வல்லவர்.

மகம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க மகாலிங்கேஸ்வரரை வழிபட வேண்டும். ஒவ்வொரு ஆண்டு மாசி மகம் நாளில் சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் விசேஷ பூஜை நடக்கும். மகம் நட்சத்திர நாளில் பிறந்தவர்கள் மாசி மகம் நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம். வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் சிவனுக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர். மேலும், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து நெய் தீபமேற்றி வழிபடுகின்றனர்.

தல பெருமை:

பரத்வாஜ மகரிஷி மகம் நட்சத்திர நாளில் பிறந்தவர் என்பதால், மாதந்தோறும் வரும் மகம் நட்சத்திர நாளன்று இங்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

ஆதி பைரவர்:

ஒவ்வொரு சிவன் கோயிலிலும் பைரவர் வடகிழக்கு திசையில் தான் காட்சி தருவார். ஆனால், இந்தக் கோயிலில் சிவபெருமானுக்கு நேர் எதிரில் காட்சி தருகிறார். இதனால், ஆதிபைரவர் என்று அழைக்கப்படுகிறார். மகாலிங்கேஸ்வரர் அதிக சக்தி வாய்ந்தவர் என்பதால், உக்கிரம் பக்தர்களைத் தாக்காமல் இருப்பதற்கு மகாலிங்கேஸ்வரருக்கு நேர் எதிரில் பைரவரை பிரதிஷ்டை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இவரை, ஆதி பைரவர் என்கின்றனர்.

பைரவருக்கு பின்புறமாக தலைக்கு மேலே சிறிய அளவிலான துளை ஒன்று உள்ளது. இது வழியாக சிவபெருமானை தரிசனம் செய்த பிறகே பைரவரை வணங்கிவிட்டு கோயிலுக்கு செல்கிறார்கள். சிவராத்திரியையொட்டி சூரிய ஒளியானது 30 நாட்களும் மூலவர் மீது விழும். காலையில் சிவன் மீதும் மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பம்சம்.

மரகதவல்லி, மாணிக்கவல்லி:

சிறிய கோயிலாக இருக்கும் இங்கு மகாலிங்கேஸ்வரர் கிழக்கு நோக்கியவாறு அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரது வலது புறமுள்ள சன்னதியில் மரகதவல்லி மற்றும் மாணிக்கவல்லி என்று இரு அம்பிகையர் காட்சி தருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மனின் பெயரால், இவர்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சன்னதியின் மதில் சுவர் ஓரமாக அமர்ந்து காட்சி தருகின்றனர். இவர்கள் இருவரையும் சன்னதிக்குள்ளாக எட்டிப் பார்த்து தான் தரிசனம் செய்ய வேண்டும்.

இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும் அருள்பாலிக்கும் மரகதவல்லி மற்றும் மாணிக்கவல்லி ஆகிய இருவரையும் வழிபட்டால் ஞான சக்தியான இறைவனை அடையலாம் என்பதை உணர்த்தும் வகையில் அம்பிகையர் அருள்பாலிக்கின்றனர். ஒரு தவமேடையில் அமர்ந்து கொண்டு பரத்வாஜ மகரிஷி யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை நினைத்து வழிபட்டமையால், இத்தலத்திற்கு ஒடுக்கம் தவசி மேடை என்று பெயர். சிவனை அரூபமாக வழிபட்டு வரும் யோகிகளுக்கும், தபஸ்விகளுக்கும் பெண்களால் இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக மரகதவல்லி மற்றும் மாணிக்கவல்லி ஆகியோர் வெளியே தெரியாமல் சுவரை ஒட்டு அருள்பாலிப்பதாக வரலாறு கூறுகிறது.

மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்பது பழமொழி. பரத்வாஜ மகரிஷி மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், அவரை குருவாக நினைத்து மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி ஆகிய நாட்களில் மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்க்கையில் நல்ல நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை.

மகாலிங்கேஸ்வரர் கோயிலில் இரு பீடங்கள் உள்ளன. சிவபெருமானை வழிபட வரும் பக்தர்களின் பாதமானது தன் மீது பட வேண்டும் என்பதற்காக பரத்வாஜ மகரிஷி இந்த பீடங்களின் வடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தல வரலாறு:

சீதையை மீட்ட ராமபிரான், ஆஞ்சநேயருடன் அயோத்தி திரும்பிக் கொண்டிருந்த போது பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பைப் பெற்றார். தனக்கு உதவி புரிந்த ஆஞ்சநேயரை கௌரவிக்கும் வகையில் தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கம் உள்ள உணவை ஆஞ்சநேயரை உண்ணும்படி ராம பிரான் கூறினார். மற்றொரு பக்கம் உள்ள உணவை ராமபிரான் சாப்பிட்டார். இதன் காரணமாக இலையின் நடுவில் கோடு வந்ததாக கூறப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மனை பிரதிஷ்டை செய்த 5 முனிவர்களின் பரத்வாஜ மகரிஷியும் ஒருவர்.

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட பரத்வாஜ மகரிஷி, இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது.