மகிழ்ச்சியை வழங்கும் ஸ்ரீ வித்யாஸ்ரமம் கோவில்

273

குறிப்பிட்ட சில ஆலயங்களும், அதிலுள்ள அழகிய தெய்வங்களின் சிலை வடிவங்களும் நம்மை பெரிதும் வசீகரிக்கும். அப்படி ஒரு ஆலயம்தான் சேலம் சங்கர் நகரில் உள்ள “ஸ்ரீ வித்யாஸ்ரமம்”.

கோவில் தோற்றம், வித்யா மகா பராசோடஷிஆன்மிகம் என்பது விரக்தி கொண்ட மனதில் நம்பிக்கையை ஊட்டி நன்மைகளைப் பெருக்குவதிலும், துயரங்களைக் களைவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நம்மை சுற்றி சிறிதும், பெரிதுமாக பல வடிவங்களில் அருள்புரியும் தெய்வங்களின் ஆலயங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட சில ஆலயங்களும், அதிலுள்ள அழகிய தெய்வங்களின் சிலை வடிவங்களும் நம்மை பெரிதும் வசீகரிக்கும். அப்படி ஒரு ஆலயம்தான் சேலம் சங்கர் நகரில் உள்ள “ஸ்ரீ வித்யாஸ்ரமம்”. அங்குள்ள தெய்வங்களின் கருணை ததும்பும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

காண்பதற்கு மிக பிரமாண்டமாக இல்லை என்றாலும், வருபவர்களுக்கு நிம்மதியையும், பிரமாதமான வாழ்க்கையையும் வழங்குவதில் நிகரற்றதாக இருக்கிறது இந்த ஆலயம். இதிலுள்ள தெய்வங்கள் வேறெங்கும் காணமுடியாத சிறப்பைப் பெறுகின்றன .

வரிசையாக இருக்கும் வீடுகளின் இடையில் நானும் உங்களுடன் இருக்கிறேன் எனும் நம்பிக்கையை தரும் வண்ணம் அமைந்துள்ளது, நீள்சதுர வடிவில் நேர்த்தியான வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம். உள்ளே நுழைந்ததும் ‘இந்த உலகமே தனக்குள் அடக்கம்’ என்பதுபோல், வெண்பட்டு வேஷ்டி உடுத்தி கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் ‘உச்சிஷ்ட கணபதி.’ கிழக்கு பார்த்தபடி தன் மனைவி நீலா சரஸ்வதிதேவியை தன் இடுப்பில் அமர்த்தி, தம்பதி சமேதராக காட்சியளிக்கும் இவரை வணங்கினால் திருமணத் தடைகள் விலகும். நம் தலையெழுத்தை மாற்றும் சக்தி கொண்டவராகவும், நல்ல எண்ணம் கொண்டவர் களுக்கு நன்மைகளை அருள்வதிலும் இவருக்கு நிகர் இவரே.

இந்த கணபதியை சுற்றி வரும் போது, மனைவியரை மடியில் அமர்த்திய கோலத்தில் சனி பகவான், பாலசுப்பிர மணியர், ஆஞ்சநேயர், தன்வந்திரி பகவான், ஹயக்ரீவர் ஆகியோர் நம் கவலை களைத் தீர்க்க அமைதியுடன் அமர்ந்தும், நின்றும் அருள்புரிகின்றனர். இவர்களுடன் ஒரு பக்தையின் கனவில் இந்த ஆலயத்தைப் பற்றி தெரிவித்து, அவர் மூலம் பளிங்குச் சிலையாக உருவான சீரடி சாய்பாபா, ஒரு கண்ணாடிப் பேழையில் புன்னகைத்தபடி இருக்கிறார்.

சுற்றி வந்ததும் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்புரிகிறார், ‘மகா பிரத்யங்கராதேவி.’ சிம்ம முகத்துடன் பெண் ரூபத்தில், கைகளில் பாசம், அங்குசம், கபாலம் ஏந்தி அதர்வண பத்ரகாளியாய் காட்சி தருகிறார் இந்த அன்னை. பித்ரு சாபம், குரு சாபம், கோ சாபம் போன்ற பதினாறு வகையான சாபங்களை நிவர்த்தி செய்வதோடு, நாம் அறியாமல் செய்யும் பாவங்களையும் போக்கி சக்தி கொண்டவள் இந்த தேவி.

பிரத்யங்கரா தேவிக்கு எதிரில் மேற்கு நோக்கி வீர சரபேஸ்வரர் காட்சி தருகிறார். நரசிம்ம மூர்த்தி இரண்யகசிபுவை வதம் செய்தபிறகும் நரசிம்மரின் கோபம் தணியவில்லை. அவரை சாந்தப்படுத்த சிவபெருமான் எடுத்த அவதாரமே ‘வீர சரபேஸ்வரர்.’ பறவையான சரப வடிவத்தில் எட்டுக்கால்கள், சிங்கமுகம், நரிவால் கொண்டு அவதரித்தார். இவர் தனது இரு மனைவியரான பிரத்யங்கராவையும், சூலினி துர்க்கையையும் இரு தோள்களிலும் ஏந்தி கைகளில் நாகம், பாசம், அங்குசம், நெருப்புடன் சினத்தை கட்டுப்படுத்த உதவுகிறார் இவர். இவரை வணங்கினால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும், எதிரிகளின் மீதான பயமும் விலகும் என்கின்றனர்.

இந்த ஆலயத்தின் கருவறையில் வீற்றிருக்கும் அம்மன், சிறப்புமிக்க தெய்வமாகிறாள். ஒரு குடும்பம் என்றால் அதற்கு தலைவியோ, தலைவனோ இருப்பார்கள். அவர்களிடம் அனைவரும் பக்தியுடன் இருப்போம் அல்லவா? அதே போல் இங்கும் மொத்த உலகத்தையும் தனக்குள் அடக்கி லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என முப்பெரும் தேவியரும் இணைந்த சொரூபமாய் விளங்குகிறாள், ‘வித்யா மகா பராசோடஷி’ அம்மன். இவர் ஈஸ்வரனின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

அன்னையின் வலதுபுறமும், இடதுபுறமும் மாதங்கியும், வராகியும் இருக்கிறார்கள். தமிழகத்தில் எங்கும் காணக் கிடைக்காத அற்புதமான தோற்றம் கொண்டவர் இந்த அன்னை. பாலாம்பிகை, திரிபுரசுந்தரி, லலிதாம்பிகை, ராஜராஜேஸ்வரி, வித்யா மகா பராசோடஷி என ஐந்து நிலைகள் ஒன்று சேர்ந்து காட்சிஅளிக்கிறாள் இந்த தேவி.

அடுத்து மேற்குப் பார்த்த நிலையில் காலபைரவர், தன் வாகனமான நாயுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். காசியில் உள்ள விஜய பைரவரே, இங்கும் புலித்தோல் வஸ்திரம் சாற்றி சிவாம்சமாக அருள்புரிகிறார். இவரின் எதிரே உள்ள யாக குண்டத்தில் மாதத்தின் சிறப்பு தினங்களான அமாவாசை, அஷ்டமி, பவுர்ணமி தினங்களில், பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கேற்ப யாகங்கள் நடை பெறுகிறது. மற்ற பைரவர் யாகங்களில், எதிரிகளை அழிக்க மிளகாய்களை தீயில் போடுவதுபோல் இங்கு போடுவதில்லை .

இத்தல உச்சிஷ்ட கணபதிக்கு மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தியும், ஆவணி விநாயகர் சதுர்த்தியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடியில் ஆசார நவராத்திரி, தையில் மாதங்கி நவராத்திரி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, பங்குனியில் வசந்த நவராத்திரிகள் இங்கு நல்ல முறையில் நடைபெறுகின்றன.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தை இங்கு ஸ்தாபித்தவர், காளிதாசானந்த மகான் என்று பக்தர்களால் அழைக்கப்படும் சக்தி உபாசகர் ஆவார். இவர் சுவாமி சாந்தானந்தாவின் சீடராக இருந்த அருள் சித்தர். இந்த ஆலயத்தில் உள்ள சிலைகள் அனைத்தும், அழகுக்கும், நேர்த்திக்கும், கீர்த்திக்கும் புகழ்பெற்றவை. இந்த சிலைகள் முழுவதும் ஸ்ரீ கந்தாசிரமத்தில் உள்ள சிலை வடிவங்களின் வழியில் பின்பற்றி நிறுவப்பட்டவை என்று கூறப்படுகிறது.