மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில்!

430

மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரில் உள்ள மடவார்வளாகம் என்ற பகுதியில் உள்ள கோயில் அருள்மிகு வைத்தியநாதசுவாமி கோயில். இந்தக் கோயிலில் வைத்தியநாதசுவாமி மூலவராகவும், சிவகாமி அம்பாள் தாயாராகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இந்தக் கோயிலில் பிரதோஷம், சிவராத்திரி மற்றும் அம்மனுக்குரிய செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய சைவத் திருத்தலம். இந்த கோயிலில் தான் சிவனின் 24 திருவிளையாடல்கள் நடைபெற்றுள்ளது. வைத்தியநாதசுவாமியை வழிபட தீராத வயிற்று வலி தீரும். பெண்களுக்கு சுகப்பிரசவம் கண்டிப்பாக நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மற்றும் பங்குனி மாத பிறப்பின் போது காலையில் சூரியனின் கதிர்கள் மூலவர் மீது பட்டு சூரிய பூஜை சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும் மாலையில், 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயிலில் நடை திறந்திருக்கும்.

ஒரு நாள் மன்னர் திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி உண்டானது. அப்போது, வயிற்று வலி நோய் தீர்ப்பதில், வைத்தியநாதர் வல்லவர் என்பதை அறிந்த மன்னர் தந்தத்தினால் ஆன பல்லக்கில் மடவார்வளாகம் வந்து 48 நாட்கள் தங்கி விரதம் மேற்கொண்டு வயிற்று வலி நீங்கப் பெற்றார். இதனால், தான் வந்த தந்த பல்லக்கை வைத்தியநாதருக்கே கொடுத்துவிட்டு மதுரைக்கு நடந்தே சென்றதாக சொல்லப்படுகிறது.

மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள திருமண மண்டபம் போன்று தனது வயிற்று வலியை தீர்த்த மடவார்வளாகம் வைத்தியநாதருக்கு பெரிய நாடக சாலை போன்ற ஒரு மேடை அமைத்துக் கொடுத்தார். வைத்தியநாதரை விட்டு செல்ல மன்னருக்கு விருப்பமில்லை. எனினும், தனது அரசியல் பணி தடைபட்டு விடக் கூடாது என்பதற்காக புறப்பட்டுச் சென்றார். தினந்தோறும் வைத்தியநாதருக்கு உச்சிகால பூஜை நடந்த பிறகே தான் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

ஆனால், வைத்தியநாதருக்கு உச்சிகால பூஜை செய்யப்படுவதை அறிந்து கொள்வதற்கு அந்த காலத்திலேயே ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலிருந்து மதுரை செல்லும் வழிகளில் எல்லாம் கல் மண்டபங்கள் அமைத்தார். மேலும், அவற்றிலிருந்து முரசு (நகரா) முழங்கச் செய்து அதன் மூலம் வரும் ஒலி மதுரையை அடைந்தவுடன் மன்னர், வைத்தியநாதரை வழிபாடு செய்த பின், மதிய உணவை உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டார். இதற்கு ஆதாரமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை செல்லும் வழியில் ஆங்காங்கே கல் மண்டபங்கள் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

வயிற்று வலி தீர்க்கும் வைத்தியநாதர் என்பதால், வயிறு தொடர்பான நோய்கள் மற்றும் கர்ப்ப சம்பந்தமான நோய்களுக்கு வேண்டிக் கொள்கின்றனர். சுகப்பிரசவம் நிச்சயமாக நடக்கும் என்பதால், சிவனையும், அம்மனையும் அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். தங்களது கோரிக்கைகள் நிறைவேறியவுடன் சிவன் மற்றும் அம்பாளுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்து புதிய வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த வணிகர்கள் கேரளா சென்று மிளகு வாங்கு வந்து அதற்கான கடனை செலுத்தாமல் ஏமாற்றி மிளகை உளுந்து என்று பொய் சொல்லி மதுரை சென்று பார்த்துள்ளனர். அப்போது மிளகு எல்லாம் உளுந்தாக இருந்தது. அவர்கள் மதுரை சொக்கநாதரிடம் சென்று முறையிட்ட போது, அவர் வைத்தியநாதரை வணங்கினால் அருள் புரிவோம் கூறினார். அதன்படி, வைத்தியநாதரை வழிபட அருள் புரிந்தார்.

வெண்குடம் தீர்ந்தது, தாதன் கண் பறித்தது, வணிகன் பொன் மடிப்பையை தந்தது, பிரகசேனன் முக்தி பெற்றது, காசு வாசி வாங்கி கொடுத்தது, அக்கினி சன்மன் பூசித்தது, பாசதரன் முக்தி பெற்றது, சந்திரன் சய நோய் தீர்ந்தது போன்ற 24 திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். இங்குள்ள இறைவனை பிரம்மன், இந்திரன், தேவர்கள், சூரியன், சந்திரன், துருவாசர், அகத்தியர் ஆகியோர் வழிபட்டதாலும், இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு சிவன் வீடு பேற்றை அருளுவதாலும், இத்தலம் கையாலயத்திற்கு சம்மாக கருதப்படுகிறது.

ஆடல் பாடல்களில் வல்லவர்களாக இருவர் இத்தல இறைவன் முன்பு ஆடிப்பாடி மகிழ்வித்ததால் இறைவன் மகிழ்ந்து அவர்களுக்கு பொன், பொருள் தந்து வீடு கட்டித் தர ஆணையிட்டார். அன்று முதல் இந்த இடம் மடவார் வளாகம் என்று அழைக்கப்பட்டது. (மடவார்- பெண்கள், வளாகம் – இடம்).

ஒரு காலத்தில் புனல்வேலி என்னும் பகுதியில் ஏழை சிவபக்தன் தனது மனைவியுடன் சிவபூஜை செய்து வந்தான். அப்போது ஒரு நாள் மனைவிக்கு பேறுகால நேரம் வந்ததும், தனது தாய்க்கு சொல்லி அனுப்பியுள்ளாள். ஆனால், 10 மாதம் ஆகியும் தாய் வரவில்லை. ஆகையால், தானே தனது தாய் இருக்குமிடத்திற்கு சென்றுள்ளாள்.

கொஞ்ச தூரம் சென்றதும், அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தீவிர சிவ பக்தையான, அவள் ஈசனே காப்பாற்று என்று கதறியுள்ளாள். பக்தையின் அழுகுரல் கேட்டு தாயும், தந்தையுமான ஈசன், கர்ப்பிணிப் பெண்ணிற்கு தாயாக இருந்து சிறப்பாக பிரசவம் பார்த்தார். அப்போது அந்தப் பெண்ணிற்கு தாகம் ஏற்பட்டுள்ளது.

தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்கு தனது விரல் நுனியில் பூமியை கீறி அதிலிருந்து வந்த நீரை எடுத்து அந்தப் பெண்ணிற்கு மருந்தாகவும் கொடுத்துள்ளார். ஆனால், தனக்கு பிரசவம் பார்த்தது அந்த ஈசன் வைத்தியநாதர் என்பது அந்தப் பெண்ணிற்கு தெரியாத நிலையில், அவளது தாய் வந்து சேர்ந்தாள். அப்போது, தனது மகளுக்கு எப்படி பிரசவம் நடந்தது என்பதைக் கேட்கவே, வைத்தியநாதர் அன்னை சிவகாமியுடன் விடை வாகனத்தில் காட்சி கொடுத்தார்.

அப்போது, பெண்ணே, உனது தவத்தினால், தான் யாமே உனக்கு பிரசவம் பார்த்தோம். இந்த தீர்த்தம் உனது தாகம் தீர்த்து காயம் தீர்க்கும் மருந்தாக பயன்பட்டதால், இன்று முதல் இந்த தீர்த்தம் காயக்குடி ஆறு என்று அழைக்கப்பட்டது. இந்த ஆற்றில் மூழ்கி என்னை வணங்கி வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்க கூடிய எல்லா பயத்தையும் நீக்கி சுகபோக வாழ்வை அடைவர் என்று அருளினார்.