மடிப்பாக்கம் கல்யாண கந்தசுவாமி கோயில்!

62

மடிப்பாக்கம் கல்யாண கந்தசுவாமி கோயில்!

சென்னை மாவட்டம் மடிப்பாக்கம் பகுதியில் உள்ளது கல்யாண கந்தசுவாமி கோயில். இந்தக் கோயிலில் மூலவராக கல்யாண கந்தசுவாமி காட்சி தருகிறார். தாயார் வள்ளி, தெய்வானை பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இந்தக் கோயிலில் முருகனின் சரவணபவ என்ற 6 எழுத்து மந்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் ஆறுபடிகள் ஏறிச் சென்று முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பு.

கோயில் பிரகாரத்தில் தென் பகுதியில் கருணை கணபதியும், வடக்கில் அங்காரகனும் தனிச்சன்னதியில் அருள் பாலிக்கின்றனர். தொடர்ந்து கோஷ்டத்தில் குரு பகவான், ஜெய துர்கா ஆகியோரும் தனி சன்னதியில் அருள் புரிகின்றனர். நவக்கிரகங்களும் தனி சன்னதியில் அருள் புரிகின்றனர். ராமர், சீதை, லட்சுமணர், அபிதகுசலாம்பிகை சமேத அருணாச்சலேஸ்வரரும் அருல் பாலிக்கின்றனர்.

வேண்டுதல்:

இந்தக் கோயிலில் உள்ள அங்காரகனுக்கு (செவ்வாய் பகவான்) தில பத்ம தானம் (தில என்றால் எள், பத்ம என்றால் தாமரை மலர்) செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கப்பெற்று திருமணத்தில் தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

நிவர்த்திக்கடன்:

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் முருகப் பெருமானுக்கு பால் குடம் எடுத்தல், அலகு குத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகியவற்றை செய்து தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

தல பெருமை:

கோயிலின் நுழைவு வாயிலில் கொடிமரமும், மயில் வாகனமும் அமைந்துள்ளன. மேலும், கருவறையில் வள்ளி தெய்வானை சமேத கல்யாண கந்தசுவாமி பக்தர்களுக்கு அருள் புரிகிறார். இந்தக் கோயிலில் முருகனின் சரவணபவ என்ற 6 எழுத்து மந்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் ஆறுபடிகள் ஏறிச் சென்று தான் முருகப் பெருமானை வழிபட முடியும்.

இந்த 6 படிகளுக்கும் படி பூஜை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் மற்றும் கந்த சஷ்டியன்று முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகப் பெருமானுக்கு அணிவித்த மாலையை வாங்கி திருமணமாகாதவர்கள் அணிந்தால் விரைவில், அவர்களுக்கு திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலில் முருகப் பெருமான் திருமணக் கோலத்தில் வீற்றிருப்பதால், கந்த சஷ்டி நாளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுவதில்லை.

தல வரலாறு:

இந்தப் பகுதியைச் சேர்ந்த முருகப் பக்தர்கள் கந்தகோட்டம், திருப்போரூருக்கு சென்று கந்த சுவாமியை தரிசித்து வந்தனர். ஒரு காலத்தில் இந்தப் பகுதியிலேயே கந்தசுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினர். அதன் காரணமாக இங்கு ஆலயம் உருவாக்கினர். ஆரம்ப காலத்தில் இங்கு விநாயகர் மட்டுமே அருள் புரிந்து வந்துள்ளார். அதன் பிறகு முருகப் பெருமானுக்கு தனி சன்னதி அமைத்து கும்பாபிஷேகம் செய்து கோயிலும் கட்டி முருகரை வழிபட தொடங்கிவிட்டனர்.