மதுவனேஸ்வரர் கோயில்!

175

மதுவனேஸ்வரர் கோயில்!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் என்ற பகுதியில் உள்ளது மதுவனேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவர் மதுவனேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். தாயார், மதுவனேஸ்வரி.

தல சிறப்பு:

சூரியனின் அருகில் பைரவர் அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலில் அனைத்து நவக்கிரகங்களும் சூரியனை பார்த்தவாறு காட்சி தருகின்றன. சனி பகவானி தனி சன்னதியிலும், சூரியன் மற்றும் குரு பகவான் நேருக்கு நேர் பார்த்தவாறும் காட்சி தருகின்றனர். சித்ர குப்தர் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்.

பொதுவான தகவல்:

இந்திரன் உள்பட முப்பத்து முக்கோடி தேவர்கள், சூரியன் ஆகியோர் இந்தக் கோயிலில் உள்ள மதுவனேஸ்வரரை வழிபட்டுள்ளனர். இரண்டு நிலைகளைக் கொண்டு கோபுரமானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் மூலவர் மதுவனேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.

கோயிலுக்குள் உள்ள சிறிய மலையின் மீதுள்ள பிரகாரத்தில் சோமஸ்கந்தர், அண்ணாமலையார், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மலையின் கீழ் உள்ள பிரகாரத்தில் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் என்று தனித்தனி சன்னதிகள் உள்ளன.

தல பெருமை:

இந்தக் கோயில் கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் கட்டிய கோயில்களில் ஒன்று. இந்தக் கோயிலில் தெற்கில் எமன், மேற்கில் வருணன், கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன் ஆகியோர் லிங்கம் அமைத்து பூஜை செய்துள்ளனர்.

தல வரலாறு:

ஒரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையில் யார் பலசாலி என்பதில், கடும் போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தனது தலை வைத்து மேருமலையை பிடித்து, உடலை வைத்து மலையை சுற்றிக் கொண்டார். இதனால், வாயு பகவானால் மலையை அசைக்க கூட முடியவில்லை. இதன் காரணமாக ஆதிசேஷனிடம், வாயு பகவான் தோற்றார். தனது தோல்வியால் கோபமடைந்த வாயு பகவான் காற்றை அடக்கினார்.

இதனால், அனைத்து ஜீவராசிகளும் காற்றில்லாமல் பரிதவித்தன. அதன் பின், தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வாயு பகவான் மற்றும் ஆதிசேஷனுக்கு இடையில் போட்டி மீண்டும் நடந்தது. ஆதிசேஷனின் வலிமையை தேவர்கள் குறைக்கவே ஆதிசேஷனின் தலைகள் 3 குறைந்தது. இதனால், வாயு பகவான் 3 சிகரங்களை பெயர்த்தெடுத்தார். அதில் ஒரு சிகரத்தை மட்டும் தெற்கில் போடுவதற்கு எடுத்துச் செல்லும் போது அந்த சிகரத்தின் சிறிய துளி இந்த தலத்தில் விழுந்ததாக தல புராணம் கூறுகிறது.

முதலில் சமவெளியாக இருந்த இந்த பகுதியில் சிகரத்தின் சின்ன துளி விழுந்த பகுதியானது சிறிய மலையாக மாறி அதன் மீது கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கிருதா யுகத்தில் பிருஹத்ராஜன் என்ற மன்னன் செய்த தவப்பயனின் அடையாளமாக சிவபெருமான் தேஜோ லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

துவாபர யுகத்தில் விருத்திராசூரன் என்ற அசுரன் தொடர்ந்து தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனுக்கு பயந்த தேவர்கள் சிவனை தஞ்சம் அடைந்தனர். தேவர்களை காக்கவே, அவர்களை தேனீக்களாக மாற்றிவிட்டார். மேலும், இங்குள்ள கர்ப்பகிரகத்தில் தேனீக்களை கூடுகட்டி வசிக்கச் செய்து லிங்க வழிபாடு செய்யும் படி கூறினார்.

சிவபெருமான் கூறியதைப் போன்று தேவர்கள் தேனீக்கள் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டதால் மதுவனேஸ்வரர் என்றும் அம்மன், மதுவன நாயகி என்றும் இந்த தலம் மதுவனம் என்றும் அழைக்கப்படுகிறது.

கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள மறைவிடங்களில், கர்ப்பக்கிரகத்திலும் தேனீக்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள தீர்த்தத்தில் மாசி மாதம் நீராடி இறைவனை வழிபடுவோர் அனைத்து நலன்களையும் பெறுவர். இதே போன்று ஏகாதசி மற்றும் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்தால் மோட்சம் அடைவர்.

இந்தக் கோயிலில் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. பிரதோஷம், மாத சிவாரத்திரி ஆகிய நாட்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.