முக்தீஸ்வரர் கோயில்!
திருவாரூர் மாவட்டம் சிதலப்பதி என்ற பகுதியில் அமைந்துள்ளது முக்தீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவர்களாக முக்தீஸ்வரர், மந்தாரவனேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கின்றனர். தாயார் பொற்கொடியம்மை மற்றும் சொர்ணவல்லி ஆகியோர் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.
முன்னோர்களுக்கு முக்தி தருபவராக அருளுவதால் இவரை முக்தீஸ்வரர் என்று அழைக்கின்றனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (சிதலைப்பதி), கயா, திரிவேணி சங்கமம் ஆகியவை சிறந்தவையாக கருதப்படுகிறது.
ராமர் திலம் (எள்) கொண்டு தர்ப்பணம் செய்த தலம் என்பதால், திலதர்ப்பணபுரி என்று அழைக்கப்பட்ட இந்த ஊரானது பிற்காலத்தில் சிதலைப்பதி என்றானது. இந்தக் கோயிலில் விநாயகர் மனித முகத்துடன் மேற்கு பார்த்து தனி சன்னதியில் அமைந்துள்ளார். இவரை ஆதி விநாயகர் என்று அழைக்கின்றனர். இந்த ஆதி விநாயகர் சன்னதியில் மட்டை தேங்காய் கட்டி வேண்டினால், நியாயமான கோரிக்கைகள் என்று எது இருந்தாலும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
சிறிய கோயிலாக இருந்தாலும் கிழக்கு நோக்கிய சன்னதியில் மூலவர் துவிதளவிமானத்தின் கீழ் வீற்றியிருக்கிறார். வலப்பாள் அம்பாள் சன்னதி, பிரகாரத்தில் விநாயகர், இராமன் லட்சுமணன் திருமேனிகள், பைரவர், சிவலிங்கம், ஆறுமுகம், கஜலட்சுமி, நவக்கிரகம், விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சூரியர், சந்திரர், தேவியருடன் பெருமாள் என்று பலரும் காட்சி தருகின்றனர்.
தல பெருமை:
பெருமாள்:
ஒரு சில கோயில்களில் தனி சன்னதியிலோ அல்லது கருவறைக்கு பின்புறத்தில் லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்திலோ பெருமாள் இருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் 3 கோலத்தில் மகாவிஷ்ணு அவதரிக்கிறார். தர்ப்பணம் செய்த ராமர், மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோரை வணங்கி 4 பிண்டங்கள் வைத்து பூஜித்தார். இந்த 4 பிண்டங்கள் லிங்கங்களாக மாறின.
கோயிலின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் ராமர் மற்றும் அந்த லிங்கங்களையும் காணலாம். ராமர், தனது வலது காலை மண்டியிட்டு வடக்கு பார்த்தவாறு திரும்பி வணங்கி காட்சி தருகிறார். இந்த கோயில் பிதுர் வழிபாட்டு தலமாக காணப்படுகிறது. இந்தச் சன்னதிக்கு எதிராக சிவனது கருவறை சுவரில் லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு மகாவிஷ்ணு அருள் பாலிக்கிறார்.
இதே போன்று நவக்கிரக சன்னதி அருகில் மற்றொரு பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் வடக்கு பார்த்தவாறு அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார். இப்படி மகாவிஷ்ணுவின் 3 அவதாரங்களையும் இந்தக் கோயிலில் காணலாம்.
அமாவாசை:
குருஷேத்ர யுத்தத்திற்கு முன்னதாக தான் வெற்றி பெற வேண்டும் என்ற நோகத்தில் துரியோதனன், பாண்டவர்களின் கடைசி சகோதரரான சகாதேவனிடம் சென்று ஜோதிடம் கேட்க சென்றான். வந்திருப்பது தனது எதிரியாக இருந்தாலும், உண்மையின் அடையாளமாக திகழும், சகாதேவன், அமாவாசை நாளில் போரிட்டால் வெற்றி உண்டு என்று கூறி அனுப்புகிறார். ஆனால், கிருஷ்ணரோ அமாவாசைக்கு முதல் நாளே ஒரு குளக்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்கிறார். இதைக் கண்ட சூரியன் மற்றும் சந்திரன் பூலோகத்திற்கு சென்று நாங்கள் இருவரும் ஒன்றாக சேரும் நாள் தானே அமாவாசை. அப்படியிருக்கும் போது நீங்கள் இன்றே தர்ப்பணம் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
இதற்கு கிருஷ்ணரோ, இப்போது கூட நீங்கள் இருவரும் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள். ஆகையால் இன்று தானே அமாவாசை. அதனால், தான் இன்று தர்ப்பணம் செய்கிறேன் என்று கிருஷ்ணர் கூறியுள்ளார். துரியோதனோ இன்று தான் அமாவாசை என்று புரிந்து கொண்டு போரிடுகிறான். ஆனால், போரில் தோல்வியைத் தழுவுகிறான். நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைக்கிறது.
முக்தீஸ்வர்ரை சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வழிபட்டுள்ளதால், இந்தக் கோயிலில் இருவரும் அருகருகில் காட்சி தருகிறார். சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் சந்திக்கும் நாள் தான் அமாவாசை. அப்படியிருக்கும் போது இந்தக் கோயிலில் சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் தினமும் இணைந்திருப்பதால், இந்தக் கோயிலில் மட்டும் தினந்தோறும் அமாவாசை நாளாகும்.
பிதுர் தர்ப்பணம் கொடுக்க நினைப்பவர்களுக்கு அமாவாசை, திதி, நட்சத்திரம் என்று எதுவும் பார்க்கத் தேவையில்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்தக் கோயிலில் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம். நவக்கிரக சன்னதியில் சூரிய பகவான் மட்டும் உயர்ந்த பீடத்தில் காட்சி தருகிறார்.
சொர்ணவல்லி தாயார்:
சொர்ணம் என்றாலே தங்கம் என்று பொருள். ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் தங்கத்தை வாங்கிக் குவிக்க வேண்டும் என்று தானே ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள், இந்தக் கோயிலில் உள்ள சொர்ணவல்லி தாயாரை வணங்கி வழிபட தங்க நகை சேர்க்க உண்டு என்பது ஐதீகம்.
செல்வ செழிப்பு உண்டாகும்:
இதே போன்று தங்க நகை தொழில் செய்யும் வியாபாரிகள் கூட சொர்ணவல்லி அம்பாளை வழிபடலாம். இந்த அம்பிகைக்கு பொற்கொடி நாயகி என்ற பெயரும் உண்டு. அதோடு, இந்த ஊரில் மட்டும் ஓடும் அரசலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாஹினியாக செல்கிறது என்று கூறப்படுகிறது. இது போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடும் நதிகள் உள்ள கோயில்களில் வழிபாடு செய்தால் செல்வ செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம்.
தல வரலாறு:
ராவணன் சீதையை கடத்திச் சென்றான். அப்போது ஜடாயு என்ற கருடன் ராவணனை தடுக்க முயன்றான். ஆனால், ஜடாயுவை தனது வாள் கொண்டு வீழ்த்தினான் ராவணன். அந்த வழியாக வந்த ராமனிடம், ராவணன் சீதையை கடத்திச் சென்றதாக கூறிவிட்டு ராமனின் மடியிலேயே ஜடாயு உயிரை விட்டார். அவருக்கான இறுதி மரியாதையை ராமன் செய்தார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு நாடு திரும்பிய ராமன் அரச பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ராமன் வனவாசம் செய்திருந்த போது அவரது தந்தை தசரதர் இறந்திருந்ததால் அதற்கு சிரார்த்தம் தர்ப்பணம் செய்யவே ராமன் இந்த தலத்திற்கு வந்தார்.
ஓடும் அரசலாற்றில் நீராடி சிவபூஜை செய்தார். மேலும், தந்தை தசரதருக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார். அப்போது தனக்கு உதவி செய்து, தனது உயிரை விட்ட ஜடாயுவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தார். ஆகையால், இந்தக் கோயில் மூலவர் முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி என்றும் பெயர் பெற்றுள்ளது. திலம் என்றால் எள் என்று பொருள்.
ஜாதகத்தில் தோஷம், பிதுர் தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து முக்தீஸ்வரரை வணங்கி வழிபாடு செய்தால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.