மும்மூர்த்திகள் காட்சி தரும் தாணுமாலயன் கோயில்!

195

மும்மூர்த்திகள் காட்சி தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்!

சுசீ என்றால் தூய்மை. இந்திரன் தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என்று அழைக்கப்பட்டது. சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்த கோயில் தான் இந்த தானுமாலயன் கோயில்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள கோயில் தான் தாணுமால்யன் கோயில். ஞான ஆரண்யம் என்ற பெயர் கொண்ட சுசீந்திரத்தில் அத்திரி முனிவர் மற்றும் அவரது மனைவியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும் தவம் செய்தனர். அப்போது, அத்திரி முனிவர் இமயமலைக்குச் சென்றுள்ளார். அந்த சமயத்தில், அனுசுயாவின் கற்பை சோதிக்க மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் பிராமணர் வேஷத்தில் அவரது ஆசிரமத்திற்கு வருகை தந்தனர்.

ஆசிரமத்திற்கு வந்த அவர்கள் உண்ண உணவு வேண்டினர். ஆனால், ஆடை இல்லாமல் தான் பரிமாற வேண்டும் என்றனர். அதாவது, ஆடை அணிந்த ஒருவர் உணவு பரிமாறினால், அதனை உண்ண ஆகாது என்றனர். இதனைக் கேட்ட அனுசுயா அதிர்ச்சியுற்று, தனது கணவர் அத்திரி முனிவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீது தெளித்தார். சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் பச்சக் குழந்தைகளாக மாறினர்.

அதன் பின், அவர்களுக்கு உணவூட்டி, தொட்டிலில் போட்டு, தாலாட்டி தூங்க வைத்துள்ளாள் அனுசுயா. இதற்கிடையில், தங்களது கணவர்கள் பச்சிளங்குழந்தைகளாக மாற்றப்பட்டதை அறிந்து 3 தேவியரும் ஆசிரமம் வந்து அனுசுயாவிடம் முறையிட்டனர்.

தேவியரின் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா மும்மூர்த்திகளுக்கு பழைய உருவம் கொடுத்தார். அந்த சமயத்தில் அத்திரி முனிவரும் அங்கு வந்து, சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மாவின் தரிசனம் பெற்றார். கற்புக்கரசியாக விளங்கிய அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணிய மும்மூர்த்திகளின் இந்த நிகச்சியை நினைவூட்டுவதற்காகவே சுசீந்திரம் கோயில் கட்டப்பட்டுள்ளதாக தல வரலாறு கூறுகிறது.

கொன்றை மரத்தடியில் நின்று அத்திரி முனிவரும், அவரது மனைவி அனுசுயாவும் வேண்டிக் கொள்ள சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதனைக் குறிக்கும் வகையில் மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் அவதரித்து தாணுமாலயன் என்ற பெயரில் சுசீந்திரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

அதாவது, தாணு சிவனையும், மால் என்றால் விஷ்ணுவையும், அயன் என்றால் பிரம்மாவையும் குறிப்பதால், மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் எழுந்தருளியுள்ளதால் இத்தலம் தாணுமாலயன் என்று அழைகக்ப்படுகிறது. அகலிகையால் தேவிந்திரனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்கு வந்து சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் ஒரு முகமாக அவதரித்த தாணுமாலயனை தரிசித்து சாப விமோட்சனம் பெற்றார். சுசீ என்றால் தூய்மை என்று பொருள் உண்டு.

தாணுமாலயன் கோயிலில் அறம் வளர்த்த அம்மனுக்கு என்று தனி கருவறையும் உள்ளது. இந்தக் கோயிலில் பிள்ளையாரை பெண் உருவத்தில் செதுக்கிய சிற்பம் ஒன்று உள்ளது. இந்தப் பிள்ளையாருக்கு விக்கினேசுவரி என்று அழைக்கின்றனர்.

சித்திரை தெப்பத்திருவிழா, ஆவணி பெருநாள், மார்கழி திருவாதிரை, மாசி திருக்கல்யாணம் ஆகிய நாட்களில் தாணுமால்யன் கோயிலில் திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.