ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில்!

83

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள கோயில் ஐயப்பன் கோயில். இந்தக் கோயிலில் ஐயப்பன் மூலவராக காட்சி தருகிறார். கார்த்திகை வழிபாடு, தை மாதம் 1 ஆம் தேதியான மகரஜோதி திருநாளில் உற்சவ மூர்த்திக்கு அலங்காரங்கள் செய்து 18 படிகளில் தீபமேற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இந்தக் கோயிலில் சபரிமலை ஐயப்பன் கோயிலைப் போன்று கன்னி மூலை கணபதி, மாளிகைபுரத்து அம்மன், நாகராஜ சுவாமிகள் சன்னதி, 18 படிகள் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. கோயிலில் 40 அடி உயரமான கொடிமரமும், சுமார் 1500 பேர் அமர்ந்து தரிசிக்கும் வகையிலான பிரம்மாண்டமான தியான அறையும் கொண்டவையாக காணப்படுகிறது.

நினைத்த காரியம் எளிதில் நிறைவேறவும், வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கவும், நிம்மதியும் சந்தோஷமும் பெறவும் இந்தக் கோயிலில் உள்ள ஐயப்பனை வழிபடுகின்றனர். மாலை அணிவித்தும், அபிஷேகம் ஆராதனைகள் செய்து பக்தர்கள் தங்களது நிவர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.

கேரள நாட்டு பாரம்பரிய முறைப்படி 18 படிகளுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 18 படிகளையும் கடந்து சென்றால் சாஸ்தாவான ஐயப்பனை தரிசிக்க முடியும். கேரளா சபரிமலை கோயில் போன்று இந்தக் கோயில் இருப்பதால் இந்தக் கோயிலை வடசபரிமலை என்று அழைக்கின்றனர்.

ஐயப்பனுக்கு மாலை போட்டு, கடும் விரதமிருந்து, பஜனைகள் பாடி, அன்னதானமிட்டு, இருமுடி கட்டி பாதயாத்திரை சென்று சபரிமலை ஐயப்பனை தரிசிப்பது போன்று ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள ஐயப்பனை தரிசிப்பதற்கு பக்தர்கள் விரதமிருந்து மாலை போட்டு வருகின்றனர். மேலும், 18 படிகளைக் கடந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். இருமுடு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு தனிப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோயிலில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் போன்று இந்தக் கோயிலிலும் ஐயப்பனுக்கு நடைபெறுகிறது. ஆனால், சபரிமலையில் வருடத்திற்கு சில நாட்கள் மட்டுமே கோயில் நடை திறந்திருக்கும். இந்தக் கோயிலில் 365 நாட்களும் கோயில் நடை திறந்திருக்கும்.

கார்த்திகை மாதத்தில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. வெளியூர், வெளிநாடுகளிலிருந்து இந்த கோயிலுக்கு பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வழிபடுகின்றனர். செட்டிநாடு அரச பரம்பரையைச் சேர்ந்த தொழிலதிபர் எ.எம்.ஏ.எம். ராமசாமி. கடந்த 73ஆம் ஆண்டு கடும் விரதமிருந்து சபரிமலைக்குச் சென்றார். அப்போது, ஐயப்பனின் அழகில், கோயில் கட்டுமானத்தில் மயங்கி சென்னையில், ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் அதே போன்று ஒரு கோயிலை கட்டினார். அப்படி, அவர் கட்டிய கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் சிலிர்ப்பும், மகிழ்ச்சியும் பொங்கச் செல்கின்றனர்.