வடக்கு வாசல் செல்வி அம்மன்!

211

வடக்கு வாசல் செல்வி அம்மன்!

தென்காசி மாவட்டத்தில் உள்ள இனாம் வெள்ளக்கால் என்ற கிராமத்தில் உள்ள கோயில் தான் வடக்கு வாசல் செல்வி அம்மன்.

இனாம் வெள்ளக்கால் பெயர்க்காரணம்:

வெள்ளக்கால் என்ற கிராமத்திலுள்ள முப்பிடாதி அம்மன் கோயிலில் இருக்கும் ஆல மரம் வெள்ளை நிறத்தில் வளர்ந்து நின்றதால், வெள்ளை ஆல் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் வெள்ளககால் என்றானது. மேலும், இந்த ஊரில் உள்ள கால்வாயில் வெள்ளம் எப்போதும் ஓடுமாம். அதனால், வெள்ளக் கால்வாய் என்று அழைக்கப்பட்டது.

இந்த கால்வாய்யையும், அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் மேடை தளவாய்க்கு ஆங்கிலேயர்கள் இனமாக கொடுத்ததால் இந்த கிராமத்திற்கு இனாம் வெள்ளக்கால் என்று பெயர் வந்தது.

வெள்ளக்கால் பகுதியை ரங்கநாத முதலியார், சுப்பிரமணிய முதலியார் மற்றும் சண்முகநாத முதலியார் ஆகியோர் பராமரித்து வந்தனர். இதில், ரங்கநாத முதலியாரின் மனைவி கல்யாணி செவ்வாய்க்கிழமை அன்று வீட்டு வேலைக்காரியான வேலம்மாளுடன் தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்றுள்ளார். தற்போது செல்வி அம்மன் குடிகொண்டுள்ள புளியமரம் அருகில் வந்த போது ஒரு பாம்பு ஒன்று படம் எடுத்தபடி நின்றுள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்யாணி அப்படியே சிலை போன்று நின்றுள்ளார். இதையடுத்து, அந்த பாம்பானது புளியமரத்திலுள்ள பொந்து பகுதிக்குள் சென்றுள்ளது.

வடக்கு வாசல் செல்வி அம்மன்:

அதன் பிறகு புளியமரத்திலிருந்து ஒரு அசரீரி குரல் கேட்டுள்ளது. அதில், கல்யாணி, எனது பெயர் செல்வி. எனக்கு கோயில் எழுப்ப வேண்டும். அப்படி கோயில் எழுப்பி என்னை வணங்கி வந்தால் எல்லா நலமும், வளமும் அருள்வேன். இதனை உன் கணவனிடம் சொல் என்று ஒலித்தது. மேலும், கல்யாணியின் கண்ணிற்கு புளியமரத்தில் ஒரு அம்மன் வலது காலை குத்த வைத்தும், இடது காலை தொங்கவிட்டவாறும் தெரிந்துள்ளது.

தான் கேட்டதையும், கண்டதையும் தனது கணவனிடத்தில் சொன்னார். இதையடுத்து, வடக்கு வாசல் உடன் செல்வி அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. நாளடைவில் வடக்கு வாசல் செல்வி அம்மன் என்றே அழைக்கப்பட்டது. 8 கைகளுடன் இடது காலை தொங்கவிட்டு, வலது காலை குத்துக்காலிட்டு மக்களுக்கு அருள் பாலிக்கிறார்.

வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் இருக்கும் புளிய மரத்தில் நாகம்மாள் அருள் பாலிப்பதாக கூறுகின்றனர். பொதுவாக புளியமரத்தில் பூ பூத்தாள் காய் காய்க்கும். ஆனால், இந்த புளியமரம் பூக்கும் இதுவரை காய் காய்த்ததில்லை என்று கூறப்படுகிறது.