வடசென்னை ஷீரடி சாய்பாபா கோயில்!
வடசென்னையில் புதிய வண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலை பகுதியில் அரசு அச்சக குடியிருப்பில் அமைந்திருக்கிறது “வடசென்னை ஷீரடி ஸ்ரீ சாய்பாபா” கோயில். சாய்பாபா சீரடி சாய்பாபா உங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த அதிசய அனுபவத்தை நீங்கள் எப்போதாவது சந்தித்து இருககிறீர்களா? நீங்கள் நினைத்தால், அந்த இன்ப அனுபவத்தைப் பெற முடியும்.
அதற்கு நீங்கள் வடசென்னையில் புதிய வண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலை பகுதியில் அரசு அச்சக குடியிருப்பில் அமைந்திருக்கும் “வடசென்னை சீரடி ஸ்ரீ சாய்பாபா” ஆலயத்துக்கு செல்ல வேண்டும். இந்த ஆலயத்தில்தான் சீரடி சாய்பாபா உங்களையே தத்ரூபமாக உற்றுப் பார்க்கும் ஆச்சரியத்தை பெற முடியும்.
தினமும் எத்தனையோ பேர் அந்த அனுபவத்தைப் பெற்றுச் செல்கிறார்கள். தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான சீரடி சாய்பாபா ஆலயங்கள் உள்ளன. பெரும்பாலான ஆலயங்களில் சுமார் 4 முதல் 5 அடி உயரத்துக்கு சீரடி சாய்பாபா சிலையை வைத்து வழிபடுகிறார்கள்.
அந்த கம்பீர சிலைகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு அற்புதத்தைக் கொண்டிருக்கும். சில கோயில்களில் சீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டைக்கு வந்த விதம், பிரதிஷ்டை செய்யப்பட்ட விதம் என பல்வேறு அதிசயங்களைக் கொண்டிருக்கும். சில சமயம் சிலை விஷயத்தில் சீரடி சாய்பாபா நடத்தும் திருவிளையாடல்கள் ஆச்சரியத்தின் உச்சமாக இருக்கும்.
அத்தகைய ஒரு ஆச்சரியமான அம்சத்துடன் வடசென்னை சீரடி சாய்பாபா ஆலயத்தில் உள்ள மூலவர் பாபா சிலை திகழ் கிறது. இந்த சிலையின் கண்கள் மிக, மிக, சக்தி வாய்ந்தவை. பாபாவின் அந்த கண்களை நாம் உன்னிப்பாக பார்க்கும் போது, அவர் நமக்கு விழிகளை உருட்டி காட்டுவது போல இருக்கிறது.
அதிலும் சாய்பாபா சிலையின் இடது புறம் (நமக்கு வலதுபுறம்) அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பி அருகில் நின்று பாபாவை பக்கவாட்டில் பார்க்கும்போது, பாபாவின் இரு விழிகளும் கூர்மையான ஒளியுடன் இருப்பதை உணர முடியும். சில சமயம் பாபாவின் பார்வை பக்தர்கள் திசை நோக்கி கூட சற்று திரும்பி பார்ப்பது உண்டாம். இது சாய்பாபா தினம், தினம் தன் பக்தர்களிடம் நடத்தும் திருவிளையாடல் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
ராயபுரம் கல் மண்டபம் மார்க்கெட் சந்தில் சர்வ மங்கள சீரடி சாய்பாபா ஆலயம் அமைத்து சேவை செய்து வரும் யோகா ஆசிரியர் ரத்தினவேல், நம்மை அழைத்துச் சென்று அந்த ஆலயத்து சாய்பாபா கண்கள் ரகசியம் பற்றி சுட்டிக் காட்டி காண்பித்த போது மெய்சிலிர்த்துப் போனோம். சீரடி சாய்பாபாவின் இத்தகைய மகிமையால்தான் இந்த ஆலயம் வடசென்னை மக்களின் மனதில் நீக்கமற பதிந்து விட்ட ஆலயமாக மாறி உள்ளது.
சிறிய ஆலயமாக இருந்தாலும், அழகோவியம் போல இந்த ஆலயம் அத்தனை அழகாக, சுத்தமாக நிர்வகிக்கப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்துக்கு சீரடி சாய்பாபா வந்து விட்டார். மின்ட் பகுதியில் இருந்த அரசு அச்சகத்தில் பணிபுரிந்து வந்த ராகவன் என்பவர் புதிய வண்ணாரப்பேட்டை அரசு அச்சக குவாட்டர்சில் குடியேறிய போது அவரை சீரடி சாய்பாபா ஆட்கொண்டிருந்தார். பெரிய அளவில் வசதிகள் இல்லாத நிலையில், சாய்பாபா மீது கொண்ட பற்றுதல் காரணமாக ராகவன் ஓலைக் குடிசையில் மிகச் சிறிய ஆலயம் ஒன்றை பாபாவுக்காக உருவாக்கினார்.
அந்த ஓலைக் குடிசைக்குள் முதலில் சீரடி சாய்பாபாவின் படம் ஒன்றை வைத்து ராகவன் வழிபட்டு வந்தார். அந்த குடிசை ஆலயத்துக்கு அக்கம் பக்கத்தில் உள்ள சிலர் வந்து வழிபட்டு சென்றனர். இதையடுத்து சிறிய சாய்பாபா சிலையை வாங்கி வந்து அதை வைத்து ராகவன் வழிபட்டு வந்தார். நாளடைவில் அந்த பாபா ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்தது. பொதுவாக சாய்பாபா ஆலயத்துக்கு புதுமையான ஏதாவது ஒரு பெயரை சூட்டுவார்கள்.
வடசென்னையில் உருவான முதல் சாய்பாபா ஆலயம் என்பதால் பெரும்பாலானவர்கள் அந்த ஆலயத்தை வடசென்னை சாய்பாபா ஆலயம் என்றே அழைத்தனர். நாளடை வில் அந்த பெயரே நிலை பெற்று விட்டது.
சபரிமலை ஐயப்பனுக்கு மிக சிறிய அழகான தனி ஆலயம் அமைத்துள்ளனர். விநாயகர், ஆஞ்சநேயர், தெட்சிணாமூர்த்தி, கிருஷ்ணர் சன்னதிகளும் உள்ளன. இதைத் தொடர்ந்து சீரடியில் இருப்பது போன்றே சமாதி மந்திர், துனி, குருஸ்தான், துவாரகமாயி, சாவடி ஆகியவற்றை அமைக்க டிரஸ்ட் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதற்கான திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்தன.
மாடியில் சாவடி, தியான மண்டபம் அலுவலகம் அமைந்த நிலையில், கீழே தரைப்பகுதியில் துவாரகமாயி, குருஸ்தான் அமைக்க தீர்மானித்தனர். பாபா வீற்றிருக்கும் இடம் அருகிலேயே இயற்கையாகவே ஒரு வேப்ப மரம் உள்ளது. சீரடியில் இருப்பது போன்றே உள்ள அந்த மரத்தடியில் சிறிய பாபா சிலை வைத்து குருஸ்தானாக மாற்றி உள்ளனர். அடுத்து துவாரகமாயி, துனியை எங்கு அமைப்பது என்பது பற்றி ஆலோசித்தனர்.
“துவாரகமாயி” என்பது பாபாவின் இருப்பிடங்களில் முக்கியமானது. சீரடியில் சுமார் 60 ஆண்டுகள் வாழ்ந்த சாய்பாபா தன் வாழ்நாளில் 90 சதவீத நேரத்தை துவாரகமாயில்தான் கழித்துள்ளார். எனவே துவாரகமாயியை எங்கு அமைப்பது என்று ஆய்வு செய்தனர். அந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் இடம் ஒன்று இருந்தது. அந்த இடத்தில் துவாரகமாயியை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக கடந்த ஆண்டு அங்கு கட்டுமான பணிகள் தொடங்கி நடந்தன. சீரடியில் இருப்பது போன்றே துனி தீப புகை கோபுரத்தை உள்ளடக்கியதாக அந்த துவாரகமாயி உருவானது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பணி வேலை நடந்து கொண்டிருந்த போது, சாய்பாபா திடீரென அற்புதம் ஒன்றை நிகழ்த்தினார். துவாரகமாயி சுவரின் மையப் பகுதியில் பாபாவின் முகம் அச்சு அசலாக அப்படியே தத்ரூபமாக தோன்றியது.
தகவல் அறிந்ததும் வடசென்னை பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த அதிசயத்தை பார்த்து சென்றனர். பாபா முகம் தோன்றிய அந்த சுவர் பகுதி கண்ணாடி போட்டு பாதுகாக்கப்பட்டு, தினமும் மாலை சாற்றி வழிபடப்படுகிறது.
சீரடியில் உள்ள துவாரகமாயிலும் ஒரு தடவை சாய்பாபா முகம் தோன்றியது. தற்போதும் சீரடி செல்லும் பக்தர்கள் அந்த அதிசயத்தை பார்த்து வருகிறார்கள். அதே போன்ற அற்புதம் வடசென்னை சாய்பாபா ஆலயத்திலும் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தினமும் மதியம் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வியாழக்கிழமைகளில் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். அன்று மதியம் சுமார் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி வியாழக்கிழமை ஆலயத்துக்கு வரும் அனைவருக்கும் காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை பிரசாதம் வழங்கப்படுகிறது.
தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் ஆலயம் திறந்து இருக்கும். வியாழக்கிழமை நாள் முழுவதும் திறந்திருக்கும். அன்று இரவு 10 மணி வரை வழிபடலாம்.