வடவள்ளி மாகாளி அம்மன் கோயில்!

69

வடவள்ளி மாகாளி அம்மன் கோயில்!

கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி என்ற பகுதியில் உள்ளது மாகாளி அம்மன் கோயில். இந்தக் கோயிலில் மாகாளி அம்மன் மூலவராக காட்சி தருகிறார். சித்திரை திருவிழா, வைகாசி விசாகம், பொங்கல் திருவிழா மற்றும் 5 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் விழா என்று இந்தக் கோயிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அரச மர பிள்ளையார் சிலை முன்பு மூஞ்சுறு மற்றும் நந்தி வாகனங்கள் ஒரே இடத்தில் இருப்பதும், சித்திரை மாத த்தில் ஒரு நாள் மட்டும் சூரிய ஒளியானது அம்மன் மீது விழுவதும் இந்தக் கோயிலின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

இந்தக் கோயிலில் வடக்கு மற்றும் கிழக்கு வாசல் என்று இரு வாசல் இருக்கிறது. கோயிலின் இடது புறம் கிழக்கு பார்த்த அரச மர விநாயகரும், மேற்கு பார்த்த முஞ்சுறு மற்றும் நந்தி வாகனம் ஆகியவை ஒரே இடத்தில் அமைந்துள்ளது. கிழக்கு வாசல் பகுதியில் கிழக்கு பார்த்த விநாயகர், முருகன், சப்த கன்னிமார், கருப்பராயன், மாகாளி அம்மன், மேற்கு பார்த்த சிம்ம வாகனம் அமைந்துள்ளது.

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், நோய் நொடி நீங்கவும், தொழில் உள்ளிட்டவற்றில் நினைத்த காரியங்கள் சிறப்பாக நடைபெறும் இந்தக் கோயிலில் உள்ள மாகாளி அம்மனை வழிபடுகின்றனர். மேலும், தங்களது வேண்டுதல் நிறைவேறியது மாங்கல்ய காணிக்கை மற்றும் பூச்சட்டி எடுக்கின்றனர்.

சிந்துசமவெளி அகழ்வாய்வில் கொற்றையாகிய காளிதேவியின் திருவுருவம் கிடைத்துள்ளது. தொல்காப்பியம் கொற்றையாகிய காளிதேவியை குறிப்பிடுகின்றது. தாரகன் என்ற அரக்கனை அழிக்க ஒரு முறையும், தக்கன் யாகத்தை அழிக்க ஒரு முறையும் காளிதேவி தோன்றினாள் என்று கலிங்கத்துப் பரணியில் முதலிய பரணி நூல்களில் காளிதேவியை வழிபட்ட செய்தி காணப்படுகிறது.

கோவை வடக்கு வட்டம், வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் உழவு தொழில் செய்யும் மக்கள் மரபு வழியாக வாழ்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பழமையான அருள் தரும் மாகாளி அம்மனுக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வந்தனர். இதையடுத்து, தற்போது உழவு தொழிலோடு பிற தொழில்களும் பெருகியுள்ளன. இதனால், இந்தப் பகுதி மக்கள் மாகாளி அம்மனுக்கு புதியதாக கருவறை, அர்த்த மண்டபம், விமானம், முன் மண்டபம், விநாயகர், முருகன், கருப்பராயன், கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களை வடிவமைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.