வரதராஜப்பெருமாள் கோயில்!

98

வரதராஜப்பெருமாள் கோயில்!

தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோவில் என்ற ஊரில் உள்ள கோயில் வரதராஜப்பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக வரதராஜப்பெருமாள் காட்சி தருகிறார். அவருடன் தாயார் பெருந்தேவி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு வரதராஜப்பெருமாளும், தாயார் பெருந்தேவியும் தனித்தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

கேட்டை நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:

கல்வியில் சிறந்தவர்களாக திகழ்வார்கள். தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். அழகாக பேசும் குணம் கொண்டவர்கள். எந்தச் செயலையும் முன் நின்று நடத்திக் காட்டும் சாமர்த்தியம் இவர்களிடம் உண்டு. நகைச்சுவை உணர்வும், குறும்புத்தனமும் இவர்களிடம் உண்டு.

கேட்டை நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

தல பெருமை:

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது நட்சத்திர நாளன்றோ இந்தக் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். இதன் மூலமாக தங்களுக்கு ஏற்படும் அனைத்து தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மார்கழி மாதம் கேட்டை நட்சத்திர நாளில் பெரியநம்பிகள் அவதரித்தார். ஒவ்வொரு மாதமும் வரும் கேட்டை நட்சத்திர நாளின் போது பெரியநம்பிக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

கேட்டை நடசத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு ஏற்படும் ஜாதக தோஷம் நீங்க பெரியநம்பியை வழிபாடு செய்கின்றனர். இவரை வழிபாடு செய்யும் போது வெண்மை நிற வஸ்திரம் சாற்றி, மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை என்று நைவேத்யம் செய்து செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, மருதாணி இலை ஆகிய 3 சேர்ந்த எண்ணெய் கொண்டு தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

தல வரலாறு:

ராமானுஜர், அவரது குரு பெரியநம்பிகள், சீடர் கூரத்தாழ்வார் ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தனர். அப்போது, ராமானுஜர் புகர் அடைவதை பிடிக்காத சோழ மன்னர், அவரை சிறை பிடித்து வர தனது படைகளை அனுப்பி வைத்தார். ஆனால், சோழ மன்ன்னின் படைகளுக்கு ராமானுஜர் யார் என்று தெரியாத நிலையில், அவர்கள் சீடரான கூரத்தாழ்வாரை சிறைபிடித்து சென்றுவிட்டனர். அப்போது, கூரத்தாழ்வார் ராமானுஜரைப் போன்று வெண்ணிற ஆடை அணிந்திந்தார். மேலும், தான் தான் ராமானுஜர் என்று கூரத்தாழ்வார் கூறவே படை வீரர்கள் அவரை சிறைபிடித்து சென்றனர். அவருடன் பெரிய நம்பி மற்றும் அவரது மகள் திருத்துழாயும் சென்றனர்.

பெரிய நம்பி மற்றும் கூரத்தாழ்வார் ஆகியோரிடம் தனது மதமே மிகப்பெரியது என்று எழுதித் தரும்படி சோழ மன்னன் கூறினான். அதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்க அவர்களது கண்களை பறிக்கும்படி கட்டளையிட்டான். அப்போது கூரத்தாழ்வாரோ தனது கண்ணை தானே குத்திக் கொண்டு பார்வையிழந்தார். சோழ வீரர்கள் பெரிய நம்பியின் கண்களைக் குருடாக்கினர். இதையடுத்து, பார்வையில்லாமல் இருந்த இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்து வந்து இத்தலத்தில் தங்கினாள். தனது 105 வயதில் பார்வையிழந்து பெரியநம்பி தவித்து வந்தார். அப்போது அவருக்கு வரதராஜப் பெருமாள் காட்சி கொடுத்தார். மேலும் பெரிய நம்பி தங்கியிருந்த இந்த தலத்திலேயே வரதராஜப் பெருமாள் மோட்சம் கொடுத்தார். இவருடன் பெருந்தேவி தாயாரும் அருள் புரிந்தார்.