வாழைப்பந்தல் பச்சையம்மன் கோயில்!

87

வாழைப்பந்தல் பச்சையம்மன் கோயில்!

வேலூர் மாவட்டம் வாழைப்பந்தல் என்ற ஊரில் உள்ள கோயில் பச்சையம்மன் கோயில். இந்தக் கோயிலில் பச்சையம்மன் மூலவராக காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆடி திங்கள் கிழமையில் இந்தக் கோயிலில் திருவிழா நடக்கிறது. கோயில் கருவறையுல் சுதை வடிவில் அம்பிகை பச்சைத் திருமேனியாய் காட்சி தருகிறாள்.

இவள் சன்னதியில் பக்தர்களுக்கு பச்சை நிற குங்குமம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. பொதுவாக சிவனுக்கு திங்கள் கிழமையும், அம்மனுக்கு வெள்ளிக்கிழமையும் உகந்ததாக சொல்வார்கள். ஆனால், இந்தக் கோயிலில் ஆடி திங்கள் கிழமையில் திருவிழா கொண்டாடுகிறார்கள். இதனை ஆடி சோமவார விழா என்று அழைக்கின்றனர்.

கோயிலில் லிங்கம், பச்சையம்மன், வாமுனி, செம்முனி, ஜமதக்கனி முனிவர், அஷ்ட விக்னேஸ்வரர்கள், நமவீரர்கள், சப்தமுனிகள் ஆகியோரது சிலைகள் உள்ளன. பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து நிவர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

பார்வதி தேவி ஈசனின் இடபாகம் பெற்றிட வேண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வரும் வழியில் முதலில் கண்ட ஊர் முறுகப்பட்டு என்றும், பின்னர் கடைசியாகத் தங்கி பிரயாணப்பட்ட இடம் பிரயாணப்பட்டு என்றும் கூறப்படுகிறது. பிரயாணப்பட்டு தற்போது பெலாம்பட்டு என்று அழைக்கப்படுகிறது.

மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் அன்னை மணல் லிங்கம் பிடித்த இடத்தில் தற்போது சுமார் 4 அடி உயரத்தில் கல் லிங்கம் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவாயிலில் சண்டனும் முண்டனும் வீற்றிருக்கின்றனர். அதற்கு வெளியே பிரமாண்டமான ரூபத்தில் சுதை வடிவில் வாமுனியும், செம்முனியும் அமர்ந்தபடி காட்சி தருகின்றனர்.

கோயிலினுள் துவார கணபதியும் தேவேந்திரனும் நம்மை வரவேற்கின்றனர். ஜடாமுனியும் உடனிருக்கிறார். இங்கு சிவபெருமான் மன்னார் சுவாமியாக கற்சிலை கொண்டு அம்மனின் சன்னதிக்கு வெளியே வலப்பக்கம் சன்னதி கொண்டுள்ளார். இங்கு துவார பாலகர்கள் சிவ விஷ்ணு வடிவமாக வீற்றுள்ளனர். கருவறையுள் சுதை வடிவில் அம்பிகை பச்சை திருமேனியளாய் அருட்காட்சி தருகிறாள்.

இவள் சன்னதியில் பக்தர்களுக்கு பச்சைநிறை குங்குமம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. ஆலயத்தைச் சுற்றிலும் ஜமதக்கனி முனிவர், அஷ்ட விக்னேஸ்வரர்கள், நமவீரர்கள், சப்தமுனிகள் எனப்பலரும் அம்பாளை நோக்கி தவம் புரிந்து கொண்டிருக்கின்றனர். வில்வ மரமும், வேப்ப மரமும் இணைந்து வளர்ந்துள்ளது.

பார்வதி தேவி ஈசனின் இடபாகம் பெற்றிட வேண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வரும் வழியில் முதலில் ஓரிட்த்தில் வாழைப்பந்தல் அமைத்தாள். அங்கு மணலில் லிங்கம் பிடித்து வழிபட எண்ணினாள். அதற்கு நீர் தேவைப்படவே தனது பிள்ளைகளான முருகன் மற்றும் கணேசனை அழைத்து நீர் கொண்டு வரச் சொல்கிறாள். இருவரும் புறப்பட்டனர்.

வெகு நேரமாகிவிடவே அன்னையே தனது கைப்பிரம்பினால், பூமியை தட்டி நீருற்றினை ஏற்படுத்துகிறாள். அந்த நீரினைக் கொண்டு மணல் லிங்கம் பிடித்து முடிக்கிறாள். அதன் பிறகு முருகன் மற்றும் கணேசன் இருவரும் ஆளுக்கொரு நதியோடு அன்னை முன் வந்து நின்றனர். அன்னை உண்டாக்கிய நதியோடு 3 நதிகள் ஆயிற்று. அந்த 3 நதிகளும் இங்கு கூடிடவே இந்த இடம் முக்கூட்டு என்று அழைக்கப்பட்டது.

அன்னை சிவபூஜை செய்யும் வேளையில் அருகிலுள்ள கதலிவனத்தில் (வாழைத்தோப்பு) இருந்த அரக்கன் ஒருவன் இடையூறுகள் பல கொடுத்தான். அதையறிந்த சிவனும், விஷ்ணுவும் வாமுனி செம்முனியாக அவதாரம் எடுத்து அரக்கனை வதம் செய்தனர். பின்னர் அன்னை தனது சிவ வழிபாட்டினை முடித்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் சென்றாள். இவளே பச்சையம்மன் என்று அழைக்கப்பட்டாள். பல இடங்களில் கோயில் கொண்டுள்ள பச்சையம்மனுக்கு எல்லாம் வாழைப்பந்தல் பச்சனையம்மனே முதன்மையானவள் ஆவாள்.