வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்!

69

வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் என்ற ஊரில் உள்ளது திருமறைக்காடர் திருக்கோயில். இந்தக் கோயிலில் மூலவராக வேதாரண்யேஸ்வரர் உடனுறை வேதநாயகி அம்மன் இருக்கிறார்கள். இந்தக் கோயிலில் மேற்கு கோபுர வாசலில் விநாயகர் இருக்கிறார். இராமபிரானை துரத்தி வந்த வீரகத்தியை தனது ஒரு காலை தூக்கி விநாயகப் பெருமான் விரட்டியடித்ததாக வரலாறு கூறுகிறது. வேதாரண்யேஸ்வரர், வேதநாயகி அம்மன் மற்றும் விநாயகர் ஆகியோருக்கு இந்தக் கோயிலில் தனித்தனி கொடிமரம் உண்டு.

பிரார்த்தனை:

வேதாரண்யம் திருமறைக்காடர் கோயிலில் உள்ள வேதாரண்யேஸ்வரரை வழிபட பாவங்கள் விலகும். நாக தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். இந்த கோயிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் புனித நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய நதிகளில் நீராடியதற்கு சமம். இந்த புண்ணிய தீர்த்தத்தில் நீராடி தங்களது பாவங்களை கழுவிக் கொள்வதாக ஐதீகம். பிரம்மஹத்தில் பாவங்களும் நீங்கும். இந்தக் கோயிலுக்கு தெற்குப் பகுதியில் நேர் எதிரில் கிழக்கே உள்ள கடல் ஆதி சேது என்ற கடல் தீர்த்தம். இதில், ஒரு முறை புனித நீராடினால், சேது சமுத்திரத்தில் 100 முறை நீராடுவதற்குச் சமம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் வேதாரண்ய கோயில் கடலிலும், மணிகர்ணிகையிலும், கோடிக்கரை ஆதி சேதுவிலும் புனித நீராடி மணிமக்களாக காட்சி தரும் வேதாரண்யேஸ்வரர் வேதநாயகியை வழிபட்டால் திருமண வரன், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு ஆகியவை கிடைக்கப் பெறும்.

இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள திருமறைக்காடரை வணங்குவோர்களுக்கு வாழ்வில் இருக்கும் துயரங்கள் நீங்கும், மன அமைதி கிடைக்கும், வேலை வாய்ப்பு கிடைக்கும், உத்தியோக உயர்வு கிடைக்கப் பெறலாம், வியாபாரம் வளர்ச்சியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்த்திக்கடன்:

குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த கோயிலுக்கு வந்து குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுகின்றனர். திருமண வரம் வேண்டுவோர், வேதாரண்யேஸ்வரர் வேதநாயகிக்கு கல்யாண மாலை சாற்றி வழிபடுகின்றனர். பரிகார தோஷ நிவர்த்தி தலம் என்பதால், இந்தக் கோயிலில் பல்வேறு தோஷங்களுக்கான நிவர்த்தி பரிகாரங்களை செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

தல வரலாறு:

ரிக், யசூர், சாம, அதர்வண ஆகிய 4 வேதங்களும் மனித உருவம் கொண்டு இந்தக் கோயிலுக்கு அருகிலுள்ள நாலுவேதபதி என்ற ஊரில் தங்கியுள்ளனர். இந்த ஊருக்கு அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்ற ஊரிலிருந்து மலர் எடுத்து வந்து இந்தக் கோயில் இறைவனை போற்றி வழிபாடுகள் செய்துள்ளனர். எப்போது கலியுகம் பிறந்ததோ, அப்போது இனி நல்லவற்றிற்கு காலம் இல்லை என்பதை புரிந்து கொண்டு இனி நாங்கள் இருப்பது நல்லதல்ல என்று உணர்ந்து இந்த கோயில் இறைவனிடம் கூறிவிட்டு கோயிலின் பிரதான வாயிலை அடைத்துவிட்டு சென்றுவிட்டன. இதன் காரணமாக பக்தர்கள் திட்டி வாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர்.

அப்போது, இந்த கோயிலுக்கு வந்த திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் தேவாரம் பாடி கோயில் கதவை திறந்தனர். ரிக், யசூர், சாம, அதர்வண் ஆகிய 4 வேதங்களே இறைவனை வணங்கி வழிபாடு செய்ததால் வேதாரண்யம் என்று பெயர் வந்தது என்பது வரலாறு.

மூடியிருந்த கோயில் கதவு திறந்த கதை:

சைவ சமயத்தின் நாயன்மார்களில் முக்கியமானவர்களான அப்பர் மற்றும் ஞானசம்பந்தர் ஒவ்வொரு சிவன் கோயிலாக சென்று சிவபெருமானை தரிசனம் செய்து வந்தனர். அப்போது, வேதாரண்யம் திருமறைக்காட்டிற்கும் வந்தனர். அப்போது ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய 4 வேதங்களும் வழிபட்ட திருமறைக்காடரை வழிபட கோயிலுக்கு வந்தனர். அப்போது, கோயிலின் பிரதான வாயிற் கதவு மூடப்பட்டிருந்தது. பக்தர்கள் அனைவரும் இறைவனை பக்கத்து வாயிற் கதவு வழியாக வழிபட்டு வந்தனர்.

இதற்கு என்ன காரணம் என்று கேட்கவே, வேதங்கள் வழிபட்டு வரம்பெற்ற பிறகு கோயில் கதவை மூடிவிட்டுச் சென்றனர் என்பது குறித்து அறிந்து கொண்டனர். இதையடுத்து, ஞானசம்பந்தர் வேதங்கள் வழிபட்ட இந்தக் கோயில் கதவை திறந்து இறைவனை தரிசிக்க திருப்பதிகம் பாடியருள வேண்டும் என்று அப்பரிடம் வேண்டிக் கொண்டார்.

அப்பரும் திருப்பாசுரம் பாடியவுடன் கதவு திறந்து கொண்டது. இதையடுத்து, கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்ட பிறகு வெளியே வந்த போது அப்பர், இந்தக் கதவு எப்போதும் மூடவும், திறக்கவும் இருக்க வேண்டும் என்பதற்கு பதிகம் பாட வேண்டும் என்று ஞானசம்பந்தரிடம் வேண்டினார். அவரும், சதுரம் மறை என்று ஒரேயொரு திருப்பதிகம் பாட கோயில் கதவு மூடிக் கொண்டது. இப்படியொரு சிறப்பு வாய்ந்த கோயில் இது.

இந்த கோயில் வெளியில் உள்ள அனைத்து இடங்களிலும் உப்பு தண்ணீரே உள்ளது. ஆனால், கோயிலுக்குள் மட்டும் நல்ல தண்ணீர் உள்ளது. இந்த ஊருக்கு, இந்தக் கோயிலில் இருந்து தான் குடிதண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

வேதநாயகி:

இந்த கோயில் அம்பாளின் பெயர் வேதநாயகி. தமிழில் யாழைப் பழித்த மொழியாள் என்றும், வட மொழியில் வீணாவாத விதூஷணி என்றும் அழைக்கப்படுகிறது. வேதநாயகி அம்மனின் குரலானது, சரஸ்வதியின் வீணை நாதத்தை விட இனிமையானதாக இருந்ததால் வீணாவாத விதூஷணி என்று பெயர் வந்தது.

மாசி மகம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, கந்தர் சஷ்டி, பிரதோஷம், தீபாவளி, தமிழ் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் ஆகிய தினங்களில் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்படுகிறது.