வேல்கோட்டம் முருகன் கோயில்!
கோயம்புத்தூர் மாவட்டம் வேல்கோட்டம் என்ற ஊரில் உள்ளது முருகன் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக முருகனின் வேல் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் பகுதியிலுள்ள மருதமலை அடிவாரத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலானது வேல் கோட்டம் மற்றும் தியான மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
தல பெருமை:
ஆறுமுகனுக்கு பன்னிருகரங்களில் எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும் சிறப்பு மிக்கது என்னவோ வேல் மட்டுமே. இறைவன் கொண்டுள்ள ஆயுதங்களில் தனியே வைத்து வழிபடும் முறை வேலுக்கு மட்டுமே உள்ளது. பழங்காலத்திலிருந்து வேல் வைத்து வழிபடும் ஒரு நடைமுறையானது இருந்து வருகிறது என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றிவேல், வீரவேல், ஞானவேல், சக்திவேல், வைரவேல், கூர்வேல் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் வேலின் சிறப்புகள் பற்றி பல நூற்களில் காணலாம். வேல் பூஜைக்கு மேல் சிறந்த பூஜை என்று எதுவுமில்லை. வேல் வைத்து வழிபடுவோருக்கு வினைகள் தீரும். இதைத்தான் வேலுண்டு விலையில்லை என்று கூறுவர். இப்படி பல சிறப்புகள் கொண்ட வேலுக்கு என்று தனிக்கோயில் கொண்ட தல தான் இது.
தல வரலாறு:
அருணகிரிநாதர் தனது கந்தர் அலங்காரத்தில் வேல் பற்றிய சிறப்புகள் ஏராளமான பாடல்களில் பாடியுள்ளார். உற்றார் உறவினர்கள் என்று அனைவரும் கைவிட்ட நிலையில், தனி மரமாக துணையின்றி தவிக்கும் ஒருவருக்கு உதவியாக வடிவேலும் மயூரமுமே இருக்கும் என்று பொருள்பட பாடலில் குறிப்பிட்டிருக்கிறார். ஞானத்தின் அம்சமாக இருக்கும் வேலை தாங்கியிருக்கும் முருகப் பெருமானை ஞானவேல் என்று போற்றுகின்றனர்.
வேலை வழிபட்டால் ஞானம் உண்டாகும். குமரகுருபரர் நீண்ட் நாட்களாக வாய் பேச முடியாத நிலையில் இருந்தார். மேலும், திருச்செந்தூர் முருகனை வழிபட்டு அவனே கதி என்று இருந்தார். ஒருநாள் தனது பக்தனான குமரகுருபரர் முன் தோன்றி, பக்தா உனக்கு பேசும் திறன் அருளியதோடு எம்மை பாடும் புலமையும் வழங்கியுள்ளோம் என்று அவரது ஞானவேல் கொண்டு எழுதினார். குமரகுருபரர் கந்தர் கலிவெண்பா பாடினார்.
வேலை வணங்கி வழிபடுவோருக்கு கொடிய மிருகங்கள், பறவைகள், தீராத வியாதிகள், கிரகதோஷங்கள் ஆகியவற்றால், எந்தவிதமான துன்பங்களும் வராது என்று ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.
6 ¾ அடி உயரம் கொண்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வேல் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேலின் தண்டுப் பகுதியில் பஞ்ச பூத சக்கரங்கள் செதுக்கப்பட்டுள்ளது. வேலின் முகப்பு பகுதி மீது இயற்கையான வெளிச்சம் விழும் விதத்தில் ஒரு சிறிய துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. பிராணிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கவும், கிரக தோஷங்கள் பாதிப்பு நீங்கவும் இங்குள்ள முருகப் பெருமானை வழிபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கிருத்திகை, பௌர்ணமி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.