ஸ்ரீ தருமபுரி கோட்டை கோயில்!

103

ஸ்ரீ தருமபுரி கோட்டை கோயில்!

தலபெருமை:

கொற்றவை எனும் ஸ்ரீ ராஜ துர்காம்பிகையை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் வார்த்தைப்படி பலரும் நாட்டின் நன்மைக்காக பிராத்தித்து தவம் இயற்றி உள்ளார்கள்.

நாட்டின் இறையாண்மைக்கு ஊறு வரும் போது சூலினிக்கான கொற்றவை வழிபாட்டைச் செய்து தன்னுயிரை மாய்த்துப் பூஜையை நிறைவு செய்து நாட்டை காத்துள்ளார்கள்!

அந்த வகையில் நலகண்டம் என சூலத்மேலிருந்து பூஜித்து வீர மரணம் வரும் வேளையில், மேலிருந்து கீழே வீழ்ந்து உயிர் போகும் நிலையில், கொற்றவை தெய்வம் நேரில் வந்து தன் இடக் கரம் நீட்டி அந்தரத்தில் வாயுஸ்தம்பனம் நிலையில் காத்தருளி அற்புதம் நிகழ்த்தி இருக்கிறாள்.

இதனாலேயே பிற்காலத்தில் சூலத்தில் எழுமிச்சைக்கனியை செருகி வழிபாடு செய்யும் பழக்கம் தமிழ் நாட்டில் இத்தருமபுரி பகுதியிலிருந்தே பரவியுள்ளதாக வரலாறு.

இதை நிரூபிக்க இக்காட்சியை சித்தரித்த தூண் தொங்கும் தூணாக இன்றளவும் இந்த சிவாலயத்தில் அதிசயத் தூணாக காட்சியளிக்கிறது.

சூலினிக்கான பழமையான மூன்று சூலங்களைக் கொண்டு திரு அருள் புரியும் இந்த ஆலயத்தில் தை மாதத்தில் அன்னையின் திருஅருள்படி தை மாதம் மூன்றாவது வெள்ளிக்குப் பிறகு வருடா வருடம் ஸ்ரீ சண்டி யாகம் சூலினிக்கென பக்தர்களால் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பிரதி ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ராகு கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

தருமர் வழிபட்டதால் இந்த ஸ்தலத்திற்கே தருமபுரி என்று பெயர். மேலும் இக்கோயிலுக்கு மாத்ரு மந்திர் என்றும் பெயர். உலகில் தாய் வழிபாட்டின் பெருமையை விளக்க கொலு வீற்றிருக்கும் ஸ்ரீ அன்னை ஜெய ஜெய காமாட்சி, கல்யாண காமாட்சி, ஐக்ய நிலையில் சிவ சக்தி ஐக்ய சொரூபமாக, பஞ்ச பிரம் மாசானத்தில், பிரம்மா விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன் நான்கு கால்களாக சதாசிவர் மேற் பலகையாக, மேல் நின்று அன்னை அனுக்ரஹிக்கும் நிலையில் நாம் தரிசிக்கும் ஒரே தலம், 18 படிகளுக்கு மேல் அன்னையின் திருக்கோயில் கருவறை அமைந்துள்ளது.

பிரதோஷ புண்ணிய காலத்தில் உமையோடு கூடி தம்மை தாமே வலம் வருகையில் சிவசக்தி ஐக்கிய நிலையை உணர்த்தி 18ம் படி அருகே அன்னை கல்யாண காமாட்சி ஆலயத்தை வலம் வந்து திருக்காட்சியை அளிப்பது காணக் கிடைக்காத அபூர்வ தரிசன காட்சியாகும்.

தினசரி பக்தர்கள் திருப்படிக்கும் குடம் குடமாக நீர் சொரிந்து மலரிட்டு வழிபடுகிறார்கள்.

அமாவாசை தினத்தில் பெண்களே கலந்து திருப்படி பூஜை செய்கிறார்கள். அன்னை ஆதி காமாட்சியை திருக்கோயில் வலம்வர திருப்பாதம் தாங்கி வருபவரும் பெண்களே, குடை எடுப்பதும் பெண்களே. தாய்மையின் பெருமையைக் குறித்த ஆலய அமைப்பும், பூஜை முடிவுகளும் அம்பிகைக்கே முதலிடம் ஆதலால் தாய் மண், தாய்மொழி போல் தாய்க்கோயில் மாத்ரு மந்திர் என போற்ப்படுகிறது.

மற்றுமொரு விசேஷம் இந்த காமாட்சி தருமபுரி கல்யாண காமாஷி என்று அழைக்கப்படுகிறாள்.

கல்யாண மாலை வேண்டுவோர் ஆணோ அல்லது பெண்ணோ யாராகிலும் 5 அஷ்டமிகளில் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தால் கோரிக்கை நிறைவேறும். திருமண பாக்கியம் கிடைக்கும்.

தல வரலாறு:

ஸ்ரீ தருமபுரி கோட்டை கோயில் என்று அழைக்கப்படும் கல்யாண காமாட்சி கோயிலில், தருமர் முதலானோர் வழிபட்ட சூலினி ராஜதுர்கை தரிசிக்க வேண்டியவள்.

மகிஷனை வதம் செய்யும் நிலையில் சூரன் மனித உடலும், எருமைத்தலையும் கொண்டு, கத்தி கேடயம் ஏந்தி கீழே விழுந்த நிலையில் மூன்று வகை சூலங்களைக் கொண்டு அற்புதமாகக் காட்சி தருகிறாள். இது தமிழகத்தில் சூலினிக்கான ஒரே கோயிலாகும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: தமிழகத்தில் சூலினிக்காக அமைக்கப்பட்ட கோயில் என்பதும், அம்மன் 18 படிகளுக்கு மேல் நின்று அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பு.