ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர் கோயில்!

231

ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர் கோயில்!

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். தாயார் பெரியநாயகி பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

சிவபெருமானின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். பிரகாரத்தைச் சுற்றிலும் பொற்பனை விநாயகர், அரங்குள விநாயகர், வீணாதர தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், நந்தி, சக்தி விநாயகர், விசாலாட்சி, மகாலட்சுமி, சரஸ்வதி, சப்தமாதர்கள், காசி விஸ்வநாதர், நவக்கிரகம், பைரவர், சூரியன், சந்திரன், நடராஜர் சன்னதிகள் உள்ளன.

பூரம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:

ஒழுக்கமாகவும், தைரியத்துடனும் காணப்படுவார்கள். புத்திக்கூர்மையோடு செயல்படுவார்கள். விவசாயப் பணிகளில் அதிக நாட்டம் கொண்டவர்கள். வியாபாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்வீர்கள். நீதி, நேர்மை, நியாயம் என்று இருப்பீர்கள். எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவீர்கள்.

தல பெருமை:

இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள 150 கிமீ பரப்பரளவில் உள்ள மக்கள், இத்தல இறைவனை குல தெய்வமாக வழிபாடு செய்கின்றனர். பெரியநாயகி அம்மன் 4 திருக்கரங்களுடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். இந்தப் பகுதியில் வாழ்ந்த கட்டுடையான் செட்டியார் வம்சத்தில் பெரியநாயகி அம்மன் பெண்குழந்தையாக பிறந்து வளர்ந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, இந்த வம்சத்தைச் சேர்ந்த பெண்கள் கோயிலுக்கு வந்தால் தங்களது வம்ச பெண்ணின் மாப்பிள்ளையாக சிவனை நினைத்து முக்காடு போட்டு வழிபாடு செய்யும் ஒரு பழக்கம் உள்ளது.

சிறப்பம்சம்:

பூர தீர்த்தம் என்பது அக்னி லோகத்தில் உள்ள புனித தீர்த்தம். பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், நாக தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் ஆகிய 7 தீர்த்தங்கள் உள்ளன. இந்த 7 தீர்த்தங்களும் இந்தக் கோயிலில் இருப்பதால், இந்த தலம் பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலாக திகழ்கிறது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்தநாள் அன்றோ, மாதந்தோறும் வரும் நட்சத்திர நாளிலோ, திருமண நாளின் போது அல்லது ஆடிப்பூரம் நாளிலோ இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யலாம்.

தல வரலாறு:

சோழ மன்னனான கல்மாஷபாதனுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. சிவன் மீது அதிக பற்று கொண்டிருந்தார். தனக்கு பின், சிவ சேவை செய்வதற்கு ஆள் இல்லை என்று ஒவ்வொரு நாளும் மனம் வருந்திக் கொண்டிருந்தார். இதன் காரணமாக அகத்திய முனிவரிடம் முறையிட்டார்.

கல்மாஷபாதனின் குறை நீங்க திருவரங்குளம் சென்று சிவலிங்கத்தை வணங்கும்படி அகத்திய முனிவர் அறிவுரை கூறினார். அவர் கூறியதைக் கேட்டு இத்தலத்திற்கு வந்த மன்னன், சிவபெருமானை தேடி அலைந்தான்.

இதன் காரணமாக, மன்னன் மீது இரக்கம் கொண்ட சிவபெருமானோ இத்தலத்தில் தான் இருக்கும் இடத்தை அவருக்கு உணர்த்த திருவுளம் கொண்டார். அப்போது, அந்தப் பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் மூலமாக ஒரு தகவல் தெரிந்து கொண்டான். அதாவது, அந்தப் பகுதி வழியாக யாரேனும் பூஜை பொருட்கள் கொண்டு வந்தால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தவறி கீழே விழுவதாக அவர்கள் கூறினர்.

இதையடுத்து, மன்னனோ அவர்கள் கூறிய இடத்திற்கு சென்று அங்கு தோண்டிப்பார்த்தான். அப்போது பூமியிலிருந்து ரத்தம் வந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல், அந்த இடத்தில் ஒரு லிங்கமும் தென்பட்டுள்ளது. அப்போது, தோண்டும் போது தெரியாமல் சிவனின் தலையில் கீறிவிட்டோமோ என்று மனம் வருந்திய மன்னன் தற்கொலை செய்து கொள்ள முயன்றான்.

அப்போது மன்னனை தடுத்து நிறுத்திய சிவபெருமான் பார்வதியுடன் திருமணக் கோலத்தில் தரிசனம் கொடுத்தார். அப்படி, அவர் தரிசனம் கொடுத்த இடத்தில் எழுந்த கோயில் தான் இது. பூர நட்சத்திர நாளில் இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, இறைவனின் அருளால் மன்னன் கோயில் கட்டினான். அவனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள பொற்பனை மரத்தில் கிடைக்கும் பொன், பழங்கள் மூலம் பணம் பெற்று இந்தக் கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. இத்தல தீர்த்தமானது சிவனின் தலையிலிருந்து உருவானதால் ஹர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த தலம் திருவரங்குளம் என்றானது.

பூரம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்க அவர்களுக்குரிய கோயிலான இந்தக் கோயிலுக்கு சென்று ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரரை வழிபடுகின்றனர். கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நாக தோஷம் உள்ளவர்கள், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், இந்தக் கோயிலுக்கு சென்று தீர்த்தேஸ்வரரை வழிபாடு செய்கின்றனர். மேலும், அம்மனிடம் உள்ள ஸ்ரீசக்கரத்தை நினைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.