1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோவில்

346

மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோவில் சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் தேவாரப்பாடல் பெற்ற தலமும் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோவில்
மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோவில்
இந்த திருத்தலம் சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் தேவாரப்பாடல் பெற்ற தலமும் ஆகும். சென்னைக்கு அருகில் உள்ளது. முன்பு இந்த இடம் அடர்ந்த வனமாக இருந்தாதாம். இங்கு இரண்டு அசுரர்களாகிய வாணன், ஓணன் இருவரும் இந்தப்பகுதியில் உள்ள முனிவர்களையும் மக்களையும் துன்புறுத்தி வந்தனர்.

முனிவர்கள், அப்பொழுது இந்த பகுதியை ஆண்டு வந்த மன்னன் தொண்டைமானிடம் முறையிட்டனர். மன்னனும் இந்த அசுரர்களிடம் போரிட்டு அவர்களை ஒழிக்க முயன்றான். ஒடுக்கினான். அதைச் செய்துவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருந்த பொழுது பட்டத்து யானை இங்குள்ள முல்லைக் கொடியில் கால் பதித்து எடுக்க முடியாது திணறியது.

மன்னன் யானையின் மீது அமர்ந்தவாறு, முல்லைக் கொடியைத் தன் வாளால் வெட்டினான். அந்த இடத்திலிருந்து ரத்தம் பெருகி ஓடியது. கீழே இறங்கி வந்து கொடிகளை நீக்கி பார்த்த பொழுது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்டும் அந்த லிங்கத்தின் தலையிலிருந்து ரத்தம் வருவதைக்கண்டு நடுங்கி, தான் செய்த தவறுக்கு வேறு பிராயச்சித்தம் இல்லை என்று கூறி தன் உயிரையே மாய்க்க தீர்மானித்து கத்தியை எடுத்து தன் உயிரை போக்க முற்பட்டபொழுது சிவபெருமான் காட்சி தந்தார்.

“தொண்டைமானே, கலக்கம் வேண்டாம், வெட்டுப்பட்டாலும் தூயமணியாகவே இருப்போம்” என்றார் அவரை கத்தியுடன் இருந்த தொண்டைமானை பாதுகாக்க வந்ததாலே அம்பாள் உடன் வரவில்லை. இந்த சம்பவம் முடிந்த பின்னர், அம்பாள், சுவாமியுடன் வலது புறத்தில் எழுந்து அருளித்தார்.

தொண்டைமானின் வேண்டுகோளை ஏற்று நந்தியை தொண்டைமானுடன் அனுப்பி அவர்களை அழைத்து வரச்செய்தார். அசுரர்களிடம் இருந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை எடுத்து வந்து இந்த தலத்தில் மாசிலாமணி ஈஸ்வரருக்கும் அன்னை கொடியிடை நாயகிக்கும் கோவில் எழுப்பியதாக வரலாறு. இன்றும் கருவறை முன்பு இந்த தூண்கள் இருப்பதை காணலாம்.

நந்தி அசுரர்களை அழிக்கச் சென்றதால் சுவாமியைப் பார்த்தபடி மற்ற தலங்களில் காட்சி தரும் நந்தி இத்தலத்தில் எதிர்த்திசையில் உள்ளார்.

முல்லைக் கொடியுள்ள வனத்திற்கு அம்பாள் அருள்பாலித்ததால், கொடியிடை நாயகி என்று பெயர் பெற்றிருக்கின்றனர். பிரகாரத்தில் சூரியன் மட்டுமே தனிச் சன்னதியில் உள்ளார். மற்ற நவ கிரகங்கள் இல்லை மற்றும் சோழபுரீஸ்வரர், லவகுசர்கள் வழிபட்ட குசல புரீஸ்வரர், வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் வீற்றிருக்கின்றனர். விநாயகர் வலம்புரி விநாயகராக அருள் பாலிக்கிறார்.

இத்தலம் வந்து ஈஸ்வரரையும் அம்பாளையும் வழிபட்டால் பாவங்கள் நீங்கப்பெற்று முக்திபெறலாம் என்பதும் இத்தல வரலாற்றைக் கேட்டாலே முக்தி கிட்டும் என்பது ஐதீகம்.

இங்கு சிவபெருமான் சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். லிங்கத்தில் தலை மீது வெட்டுக்காயம் இருப்பதால், ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அருள்பாலிக்கின்றார். இவருக்கு அபிஷேகம் செய்ய இயலாததால் பாதரசத்தால் உருவாக்கப்பட்ட லிங்கத்திற்கு அபிஷேக பூஜை, ஆராதனை செய்கின்றனர்.

பிரதோஷம் தோறும் சிறப்பு பூஜை, மற்றும் பௌர்ணமி அமாவாசை, கிருத்திகை தைப்பொங்கல், தீபாவளி, சிவராத்திரி, தமிழ், ஆங்கில வருடபிறப்பு நாட்களிலும் விசேச பூஜைகள் உண்டு.

தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரையும் கோவில் திறந்து இருக்கும்.

அருள்மிகு மாசிலாமணி ஈஸ்வரர் கோவில்,
திருமுல்லைவாயில்,
சென்னை 609113

தொலைபேசி : 044 26376151

சென்னையிலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவு, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து ஆவடி சென்றால் அங்கிருந்து பஸ்கள் உண்டு.