50 ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்க்கை காளியம்மன் கோவில்

123

சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூரில், 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற துர்க்கை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூரில், பிரசித்தி பெற்ற துர்க்கை காளியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் கணபதி, கட்டு முனியப்பன், முத்து முனியப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் அருள்பாலிக்கின்றன. இயற்கை எழில் சூழ்ந்த நகரமலை அடிவாரத்தில் வடக்கு திசை நோக்கி துர்க்கை காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தினமும் காலை 6 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நித்திய பூஜைகள் நடைபெறும். பின்னர் மாலை 6 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும்.

சிம்ம வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் துர்க்கை காளியம்மன் சாந்த ரூபிணியாகவே பக்தர்களுக்கு காட்சி தருகிறார். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள் துர்க்கை காளியம்மனுக்கு, புதன்கிழமை தோறும் அபிஷேகம் செய்து, 18 நெய் தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால் அவர்களின் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும். மேலும் தொழில் வளம் பெருகவும், திருமணத்தடை அகலவும் மற்றும் குழந்தைப்பேறு கிடைக்கவும் அம்மனின் பாதத்தில் எலுமிச்சை பழத்தை வைத்து பக்தர்கள் பெற்றுச் செல்கிறார்கள். அதை வீட்டில் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள். இதேபோல் நீண்ட நெடுநாள் வேண்டுதல் நிறைவேறியவுடன் துர்க்கை காளியம்மனுக்கு புடவை, எலுமிச்சை மாலை, தேங்காய், பழம், பூ ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்குவதுடன் பொங்கல் வைத்து நைவேத்தியம் படைத்தும் அம்மனை தரிசித்து செல்கிறார்கள்.

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி பவுர்ணமி அன்று திருவிழா நடைபெறும். அப்போது மேளதாளம் முழங்க மாவு விளக்கு மற்றும் முளைப்பாரியை ஏந்தி பெண்கள் கோவிலுக்கு ஊர்வலமாகச் செல்வார்கள். பின்னர் துர்க்கை காளியம்மனுக்கு ஆடு, கோழி ஆகியவை பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இந்த விழாவில் அழகாபுரம், பெரியபுதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்துச் செல்வார்கள். தற்போது இந்தக் கோவில் மிகவும் பழுதடைந்து உள்ளதால் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.