காக்களூர் ஆஞ்சனேயர்

165

கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் ஒரு மாதவ பிராமணரினால் கர்நாடகத்தில் பல ஆஞ்சனேயர் சிலைகளும் ஆலயங்களும் அங்காங்கே அமைக்கப்பட்டு இருந்தன என்றும் அவற்றில் உள்ள ஹனுமாரின் வாலில் மணி கட்டப்பட்டு இருக்கும், வால் சுருண்டு தலைக்கு மீது இருக்கும். கையில் ஒரு தாமரை மலரை ஏந்தி வடக்கு நோக்கி ஹனுமான் பார்த்தபடி இருப்பார்.
இப்படியாக சுமார் 700 ருக்கும் மேற்பட்ட ஆலயங்களில் உள்ள ஹனுமானின் சிலைகளை வடிவமைத்து உள்ளார் கிருஷ்ண தேவ ராயரின் அமைச்சரவையில் இருந்தவர் ஒருவர் என்றும் அவர் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் முன் அவதாரப் புருஷர் என்றும் கூறுகிறார்கள். மேலும் அவர் நிறுவிய அத்தகைய ஹனுமார் ஆலயம் கர்நாடகத்தில் மட்டும் அல்ல தமிழ்நாட்டில் சென்னையிலும் உள்ளது.
சென்னையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூரில் காக்களூர் ஆஞ்சனேயர் என்ற பெயரில் உள்ளதாம். அந்த ஆலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் சுமார் 14 ஆண்டுகள் தங்கி இருந்து தியானம் செய்து உள்ளாராம். சிறியதே ஆனாலும் கீர்த்தி மிக்க இந்த ஆலயத்தில் உள்ள சுமார் ஒன்பது அடி உயரமான ஆஞ்சனேயர் வடக்கு நோக்கிப் பார்த்தவாறு நின்று இருக்க சன்னதியைத் தவிர பக்தர்கள் தரிசிக்கக் கூடிய வகையில் கட்டப்பட்டு உள்ள முக மண்டபம் மட்டுமே உள்ளது. அந்த ஆலயத்தின் எதிரில் மிகப் பெரிய அரச மரம் ஒன்றும், வேப்ப மரம் ஒன்றும் ஒன்றுக் கொன்று சுற்றிக் கொண்டு ஒரே மரத்தைப் போலக் காட்சி அளிக்கிறதாம். அந்த மரத்தின் அடியில் நின்று கொண்டு அங்கிருந்தே ஆஞ்சனேயரிடம் நம் வேண்டுகோளை வைத்து பிரார்த்தனை செய்தப் பின் ஆலயத்துக்குள் சென்று அவரை வணங்கித் துதித்தால் நினைத்தது நடக்கின்றதாம்.
ஆலயம் கட்டப்பட்டதின் காலம் கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலம் மற்றும் ராகவேந்திர ஸ்வாமிகள் வாழ்ந்த மத்திய வயது காலத்தை சேர்ந்தது. ஆனால் மிக சிறியதாக கட்டப்பட்டு இருந்த ஆலயத்தை பல ஆண்டுகளுக்கு முன் உள்ளூர் மாதவா பிராமணர் ஒருவர் நன்கொடைகள் வசூலித்து நல்ல முறையில் புனர் அமைத்து உள்ளாராம். ஒருவர் வாழ்க்கையில் அவசியம் காண வேண்டிய ஆலயம் இது என்கிறார்கள்.