தீராவினை தீர்க்கும் திருக்கோவில்

450

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் திண்டல் மலையில் அமைந்துள்ளது திண்டல் முருகன் கோவில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில்.

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் திண்டல் மலையில் அமைந்துள்ளது திண்டல் முருகன் கோவில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் திண்டல் மலை வேலாயுத சுவாமி கோவிலும் ஒன்று. இந்த திண்டல் மலை முழுவதும் உயர்ந்த மரங்கள் நிறைந்து காணப்படுகிறது.

திண்டல் மலை மீது தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். இங்கு தீபத்திருநாள் அன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவிலில் மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலில் உள்ள இடும்பனார், பஞ்சம் ஏற்பட்டபோது மழை பொழிய வேண்டியதாகவும் வேண்டுதலை கேட்டு மழை பொழிந்ததாகவும் வரலாறு கூறுகிறது. ஆகையால் இங்கு உள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளை பெருவது இன்றும் நடைமுறையில் உள்ளது.

தீராவினை தீர்க்கும் வேலுடன் காட்சி தருகிறார் திண்டல்மலை முருகன். கருவறையின் வடமேற்கு பகுதி மலைச்சரிவில் சற்று தாழ்வான பகுதியில் தன்னாசி குகை உள்ளது. இந்த தன்னாசி குகையில் கார்த்திகை தீபத்தன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்தக் கோயிலில் இரண்டு எலுமிச்சை பழங்களை வைத்து பூஜிக்கும் பக்தர்கள், அதில் ஒன்றை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். அதை நறுக்கி வீட்டின் நான்கு பக்கங்களிலும் வீசினால், துஷ்டர்களாளும் எதிரிகளாலும் ஏற்படும் ஆபத்துகள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. பங்குனி உத்திரம், கந்தசஷ்டி முதலான விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.