வாழ்வை பிரகாசமாக்கும் சூரிய பகவான்

49

கொளப்பாக்கம்
நவகிரகங்களுக்குள் சூரியனே எல்லாவற்றிற்கும் மையம் ஆகும். ஜோதிடத்தில் சூரியனை ஆத்மகாரகன் என்று அழைப்பர். தந்தை, அரசாங்க பதவி, ஆட்சி, கண்கள், தலை போன்ற முக்கிய விஷயங்களை ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தில் சூரியன்தான் தீர்மானிக்கிறான். சூரியன் சரியான நிலையில் இல்லையெனில் மேலே சொல்லப்பட்ட விஷயங்களில் பிரச்னைகள் வரும். இந்தப் பிரச்னைகள் சூரியனுக்கென்று அமைந்துள்ள கொளப்பாக்கம் தலத்தை தரிசிக்கும்போது அகலுகின்றன. இத்தல இறைவன் அகத்தீஸ்வரருக்கு, வாகீச மகாதேவர் என்றும் பெயர் உண்டு. இறைவி, ஆனந்தவல்லி. தெற்கு நோக்கி அருளும் அம்பிகையின் கருவறை கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், துர்க்கை, பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்கின்றனர். இத்தலத்தில் உள்ள மரகத மயிலின் எழிலுருவம் மனதை ஈர்க்கிறது. 1300 ஆண்டுகள் பழமையான, அதற்கு முன்னரே சூரிய பகவான் வழிபட்ட தலம் இது.
ஆலயத்தில் தனிச் சந்நதியில் சூரிய பகவான் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறார். கருவறையின் மேல், ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கர ரதத்தை சூரியபகவான் செலுத்தும் கதைச் சிற்பம் அமைந்துள்ளது. ஈசனை நோக்கிய வண்ணம் சூரியன் காட்சி தருகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் சூரிய தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சூரியபகவானுக்கு சிவப்பு நிற உடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து, அவருக்குரிய தானியமான கோதுமையை அவர் காலடிகளில் வைத்து மனமுருக வேண்டிய தங்கள் தோஷங்கள் நீங்கப் பெறுகின்றனர். எடுத்த காரியங்களில் வெற்றியும், மேனியில் தெய்வீகப் பொலிவு கிட்டுவதும் இவர் அருளே. சூரிய பகவான் மட்டுமல்லாமல் அகத்தியரும், வாகீச முனிவரும் இத்தல ஈசனை வழிபட்டிருக்கிறார்கள். அதனாலேயே ஈசன், வாகீச மகாதேவர். பிரதோஷ நாட்களிலும், சிவராத்திரி நேரங்களிலும் பக்தர்கள் இத்தலம் வந்து, அம்மை-அப்பர் அருளோடு, சூரிய பகவானின் திருவருளையும் பெறுகின்றனர்.
கொளப்பாக்கம் சென்னையிலிருந்து 18 கி.மீ., போரூர் சந்திப்பிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது. ராமாவரத்திலிருந்தும் வரலாம். ஆலயத் தொடர்புக்கு: 094431 07809.