ஆன்மாக்களின் பயத்தையும், தோஷத்தையும் போக்க!

0 708

எம்பெருமான் பரமேஸ்வரன் ஆன்மாக்களுக்கு அருள்புரிய நடன மூர்த்தியாக ஆடிய திருநடனங்கள் பலவாகும். அவற்றுள் சில திருநடனங்கள் திருமுறைகளிலும், புராணங்களிலும் புகழ்ந்து போற்றப்படுகின்றது.அவைகள்,

1)பாண்டரங்க நடனம் :

           சிவபெருமான் திரிபுரசம்ஹாரம் செய்ய எழுந்தருளும் பொழுது, பரமேஸ்வரனின் தேர்சாரதியாய் இருந்ந ப்ரம்மதேவன் தமது தேவியான சரஸ்வதியின் பிரிவால் வருந்த, அவ்வருத்தத்தை யொழிக்கும்பொருட்டு எம்பெருமான் தமது திருமேனி முழுவதும் திருவெண்ணீரு அணிந்து, பிரம்மனின் முன்பு ஆடிய நடனம்.

      இந்நடனம் ஆன்மாக்களின்  கவலையை, துக்கத்தை போக்கவல்லது.

2)கொடுகொட்டி  நடனம் :

                  எம்பெருமான் சிவபரம்பொருள் திரிபுரசம்ஹாரமஃ தகனஞ்  செய்தவிடத்திலே நின்று, அருட்சக்தியான பார்வதிதேவி தாளம் போடத், எம்பெருமான் தமதிருக்கரங் கொட்டி ஆடிய நடனமாகும்.

    இந்நடனம் ஆன்மாக்களின்   ஆணவத்தை நீக்கவல்லது.

3)சந்தியா நடனம் :

   பிரதோஷகாலத்தில் எம்பெருமான் உமையம்மை பார்க்க, முப்பத்துமுக்கோடி தேவர்களும், பிரம்ம விஷ்ணுக்கள் தரிசனம் செய்ய, பெருமான் தம் கரத்திலே டமருகங் கொண்டு, சூலாயுதத்தை சுழற்றி ஓர் சாமகால அளவு கையிலையில் புரிந்த திருநடனமாகும்.

      இந்நடனம் ஆன்மாக்களின்  பயத்தையும், தோஷத்தையும் போக்கவல்லது.

4)சண்ட தாண்டவம் :

 எம்பெருமான் திருவாலங்காட்டிலே சுநந்தர், கார்க்கோடகர் என்ற ரிஷிகள் தரிசனம் செய்ய, வைரவ வடிவங்கொண்டு, அபிநயம் நவரசம் விளங்க, துத்தம் கைக்கிளை போன்ற வாத்யங்கள் கோஷிக்க, காளியுடன் ஆடி அவள் அஹங்காரத்தை அடிக்கிய திருநடனமாகும்.

      இந்நடனம் ஆன்மாக்களின் அஹங்காரத்தை போக்கவல்லது.

5)கௌரி தாண்டவம் :

 எம்பெருமான் மோகினி வடிவங் கொண்ட விஷ்ணு மூர்த்தியோடு தாருகாவனத்தில் திருநடனஞ் செய்தமைகாரணமாக, உமையம்மை ஊடல் கொள்ள, அம்பிகையின் ஊடல் நீங்க கைலைமலையில்,அம்பிகை மகிழ்வுற  அத்தாருகா நடனத்தை ஆடி காட்டிய நடனமாகும்.

      இந்நடனம் ஆன்மாக்களுக்கு இன்ப போகத்தை தந்து  மகிழ்விக்கவல்லது.

6)ஆனந்த தாண்டவம்.:

         எம்பெருமான் தில்லையிலே பதஞ்சலி, வியாக்ரபாதர் தரிசனம் செய்ய, கணங்கள் தாளம் முழங்கவும், தேவர்கள் குடமுழாக் கொட்டவும், பிரமன் தாளம் போடவும், திருமாள் மத்தளம் அடிக்கவும், திருக்கரத்தில் உள்ள டமருகம் ஒலிக்க, பாம்புகள் இரைக்க, மான் கதற, கொண்றை மாலையில் வண்டினம் முளர, பாலச்சந்திரன் அசைய, கங்கை குலுங்க, வேதச்சிலம்பொலிக்க, முயலகன் நெளிய அன்னை சிவகாமிதேவி கண்டு அகம் மகிழ ஆடும் திருநடனமாகும்.

    இந்நடனம் ஆன்மாக்களுக்கு ஆனந்தத்தையும், ஞானச் செல்வத்தை அளிக்கவல்லது.

7)மஹா சம்ஹார நடனம் :

            இவ்வுலகமானது  மஹாப்பிரளய காலத்தில் எல்லாம் எம்பெருமானிடம்  ஒடுக்கம் கொள்ளும்பொழுது, எம்பெருமான் ஒருவன் மட்டும் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் வடிவமாக எழுந்தருளி ஆடும் திருநடனமாகும்.

இந்நடனம் ஆன்மாக்களுக்கு முக்தியை அளிக்கவல்லது.சிவார்ப்பணம்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.