அகிலாண்டேசுவரியின் காதில் 2 தோடுகள் அணிந்திருப்பதின் ரகசியம் என்ன தெரியுமா?

21

அகிலாண்டேசுவரியின் காதில் 2 தோடுகள் அணிந்திருப்பதின் ரகசியம் என்ன தெரியுமா?

திருவானைக்காவல் அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரியின் ஒவ்வொரு காதிலும் 2 தோடுகள் இருக்கும். பஞ்ச பூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் மூலவர் ஜலகண்டேசுவரராகவும், அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரியாகவும் வீற்றிருக்கின்றனர். ஆரம்ப காலத்தில் அகிலாண்டேஸ்வரி உக்கிர மூர்த்தியாக இருந்தாள்.

இதன் காரணமாக கோயிலுக்கு பூஜை செய்பவர்கள் உள்ளே செல்லாமல் வெளியிலேயே இருந்து வழிபாடு செய்து வந்துள்ளனர். இதையடுத்து, இது குறித்து அறிந்த ஆதிசங்கரர் மனம் வருந்தினார். அதோடு இரண்டு ஸ்ரீ சக்கரங்கள் செய்து அதில் அம்மனின் கோபம் இறங்க வேண்டினார். அதன்படியே அம்பாளின் கோபம் ஸ்ரீ சக்கரத்தில் இறங்கியது.

ஆதி சங்கரர் இந்த இரண்டு ஸ்ரீசக்கரத்தையும் அகிலாண்டேசுவரியின் காதில் தோடுகளாக மாட்டிவிட்டார். எனவே, இந்த அம்பாளின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம்.

ஒன்று சிவச்சக்கரம், மற்றொன்று ஸ்ரீசக்கரம். இந்த சக்கரங்கள் மற்ற அம்பாளின் சந்நிதியில் இல்லாத சிறப்பம்சம் பெற்றவை ஆகும்.

மேலும், அம்பாளுக்கு எப்போதும் கோபம் ஏற்படாதவாறு பிரசன்ன விநாயகரை அம்பாளுக்கு முன்னேயும், முருகனைப் பின்னேயும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து விட்டார்.