அன்னதுவேஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

61

அன்னதுவேஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

பஞ்சபூதங்களின் சேர்க்கையின் பலனாக அன்னம் கிடைக்கப் பெறுகிறோம். அன்னம் தான் இறைவடிவம் என்பதற்கேற்ப ஈஸ்வரனே அன்னத்தின் வடிவில் இருக்கின்றார். சிவசகஸ்ர நாமாவளி, அன்னரூபியாக இருப்பவர் என்றால் ஓம் ஹவிஷே நம என்றும், அனைவருக்கும் உணவளிப்பவர் என்றால் ஓம் போஜனாய நம என்றும் சிவபெருமானை போற்றும். இந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

சிவபெருமான் திருமேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒவ்வொரு சிவலிங்கமாக கருதப்படுகிறது. அன்னதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும், உணவு மீது வெறுப்பு உண்டாக்கும் நோயான அன்னதுவேஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசனம் செய்தால் அன்னதோஷம் நீங்குவதோடு, அன்னதுவேஷமும் நீங்கும் என்பது ஐதீகம்.

ஜாதகத்தில் அன்னம் என்பதற்குரிய காரக கிரகம் சந்திர பகவான். அன்னம் எனப்படும் மாத்ரு காரகனும் சந்திர பகவான் தான். உலகிற்கு எல்லாம் படியளக்கும் அன்னபூரணியான பார்வதி தேவியை வணங்க காரக கிரகமாக இருப்பதும் சந்திர பகவான் தான். இவ்வளவு ஏன் அன்பு, பாசம் ஆகியவற்றிற்கும் கூட காரக கிரகமாக இருப்பதும் சந்திர பகவான். மேலும், இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரன் மாத்ரு காரகன் என்றும், பகலில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பகவான் மாத்ரு காரகன் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஜோதிட ரீதியாக சாதாரண உணவின் காரகன் சந்திரன். இதுவே சுவையான உணவாக இருந்தால் சுக்கிரன். ஜாதகத்தில் சந்திர பகவான் 6, 8 மற்றும் 12 ஆகிய மறைவு ஸ்தான்ங்களில் தொடர்பு பெற்றோ அல்லது பாதகாதிபதி தொடர்பு பெற்றோ அல்லது நீச்சமடைந்து நின்றாலோ அந்த ஜாதகாரருக்கு பால், தயிர், அரிசி, சோறு ஆகியவற்றை அடிக்கடி வீணடிப்பதால் அன்னதோஷம் பாதிப்பு ஏற்படும்.

ஜாதகத்தில் 2ஆம் பாவத்தில் சூரியன் அசுப பலன் பெற்றிருந்தால் கோதுமை, தக்காளி, கேரட், மற்ற காய்கறிகள், கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை வீணடிப்பார்.

இதுவே ஜாதகத்தில் செவ்வாய் அசுப பலன் பெற்று 2ஆம் பாவத்தில் நின்றால் அந்த ஜாதகர் வத்தல் வகைகள், ஊறுகாய், சூடான சாப்பாடு ஆகியவற்றை வீணாக்குவார்.

இப்படி சாதத்தை வீணாக்குவதும், வெறுத்து ஒதுக்குவதாலும் அன்னதோஷமும், அன்னதுவேஷமும் பாதிப்பு ஏற்படுகிறது. அன்னாபிஷேக நாளின் போது சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசனம் செய்தால், இந்த தோஷ பாதிப்பு நீங்கும். அதுமட்டுமல்லாமல், பச்சரிசி வாங்கி கொடுப்பது அல்லது குறைந்த து 5 பேருக்காவது அன்னதானம் கொடுக்கலாம். இதன் மூலமாக அன்னதோஷ பாதிப்பு நீங்கும் என்பது ஐதீகம். சந்திரன் மற்றும் சுக்கிர பகவான் ஆகிய இருவரையும் குறிக்கும் அன்னபூரணியை வணங்கி வந்தால் உணவு வீணாக்கப்படுவது குறையும். மேலும், ஆயுள் இருக்கும் வரையில் உங்களுக்கு உண்டு தட்டுப்பாடு ஏற்படாது.

முன்னோர்களுக்கு செய்யப்படும் தர்ப்பணம் நாளின் போது பிராமணர்களுக்கு அன்னதானம் அளித்தால் அன்னதோஷத்தோடு பித்ரு தோஷமும் நீங்கும்.

உணவுக்கு காரக்னான சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி, வெள்ளை அல்லி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதோடு, பக்தர்களுக்கு வெண்பொங்கல் பிரசாதமாக அளித்தால் சந்திர பகவானின் பரிபூரண அருளும் கிடைக்கும். மேலும், உணவு தட்டுப்பாடும் உங்களுக்கு வராது.

சந்திரன் மற்றும் சூரியன் ஆகியோர் சப்தம பார்வை பெற்ற இந்த ஐப்பசி பௌர்ணமியில் வரும் அன்னாபிஷேகம் மற்றும் சந்திர ஜெயந்தி நாளில் சிவனையும், பார்வதி தேவியையும் தரிசித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். அதோடு, உணவு பஞ்சமும் நீங்கும் என்பது ஐதீகம்.