அலி தோஷம் நீங்கப் பெற்ற புதன் பகவான்!

76

அலி தோஷம் நீங்கப் பெற்ற புதன் பகவான்!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் (சுவேதாரண்யேசுவரர்) கோயில் உள்ளது. இந்த கோயிலில் நவக்கிரகங்களில் ஒன்றான புதன் பகவான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பொதுவாக புதன் பகவானை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத கிரகம் என்று தான் சொல்வார்கள். அதாவது, அலி கிரகம். ஆனால், இந்த திருவெண்காட்டில் உள்ள ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் புதன் பகவான் ஆண் கிரகமாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்த கோயிலில் கல்வி, தொழில்காரகனான புதன் பகவானுக்கு என்று தனிக்கோயிலும் உள்ளது. கல்வியில் மேன்மையடைய, தொழில் சிறக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், பிள்ளைப்பேறுக்காக காத்திருப்பவர்கள் இந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள புதன் பகவானை வழிபட்டால் நன்மை உண்டாகும்.

நேர்த்திக்கடன்:

நவக்கிரகங்களில் ஒன்றான புதன் பகவானுக்குரிய கோயில் இந்த சுவேதாரண்யேஸ்வரர். இந்த கோயிலில் புதன் பகவானுக்கு என்று தனி சன்னதி உள்ளது. கல்வி, தொழில்காரகனான புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி, வெண்காந்தாள் மலர் கொண்டு, பாசிப்பயிறு பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும். உடலில் உள்ள நரம்பு தொடர்பான வியாதிகள், திருமண தடை, குழந்தை பேறு கிடைக்க புதன் பகவானுக்கு 17 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.

மேலும், மஞ்சள் பொடி, திரவிய பொடி, தேன், சந்தனம், பால், தயிர், விபூதி, தைலம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மா ஆகியவற்றால் கூட அபிஷேகம் செய்யலாம்.

சுவேதாரண்யர் (திருவெண்காடர்):

இவர் லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என்ற பல பெயர்களைக் கொண்டுள்ளார்.

அகோர மூர்த்தி:

சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இந்த கோயிலில் காணலாம். இவர், மருத்துவ அசுரனை அழிப்பதற்காக சிவனின் ஈசானிய முகத்திலிருந்து தோன்றியவர்.

சிவபெருமானின் வீரச் செயல் நிகழ்ந்த கோயில் இது. இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு இல்லாமல் வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. தன்னை நம்பி வந்து தன்னிடம் சரணடைந்தவர்களைக் காப்பதில் இவருக்கு நிகர் இவரே. ஆகையால், அகோர மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு இந்த அகோர மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

புதன் பகவான்:

அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்கு உட்பட்டவர் வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான். இவர், தாயின் அரவணைப்போடும், சேய் போன்றும் அன்னையர் கோயிலுக்கு இட து பக்கத்தில் தனது கோயிலை அமைத்துக் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

அலி தோஷம் நீங்கப் பெற்ற புதன் பகவான்:

புதன் பகவான் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. இவர் ஒரு அலி வடிவம் பெற்றிருந்தார். அலி தோஷம் நீங்க இந்த கோயிலில் உள்ள திருவெண்காடரை வழிபட்டு அவரது அருளால் ஆண் வடிவம் பெற்று நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு. இவர், செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் 5ஆவது காண்டத்திற்கு அதிபதியாக ஆனார். இதனால், புதன் பகவானுக்குரிய நவக்கிரக தலங்களில் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் சிறப்பு பெற்றது.

தனி சன்னதி கொண்ட புதன் பகவான்:

கல்வி, அறிவு, புத்திக்கூர்மை, பேச்சுத்திறமை, ஜோதிடம், இசை, கணிதம், மருத்துவம், சிற்பம், மொழிகளில் புலமை, புலவர் ஆகியவற்றில் சிறப்பு பெற்றவர் புதன் பகவான். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் புதன் பகவானுக்கு என்று தனி சன்னதியும் உள்ளது. இந்த சன்னதிக்கு நேர் எதிரில் புதன் பகவானின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும் உள்ளது.

ஒருவரது ஜாதகத்தில் புதன் சரிவர அமையாவிட்டால் அறிவுக்குறைபாடு ஏற்படும். நரம்புத்தளர்ச்சி வரும். புத்திர பாக்கியமும் கிடைக்காமல் போய்விடும். இந்த குறைபாடுகள் கொண்டவர்கள் தங்களது தோஷ நிவர்த்திக்காக இந்த கோயிலுக்கு வந்து புதன் பகவானின் சன்னதிக்கு எதிரில் உள்ள சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, புதன் பகவானை வழிபட்டால் நன்மை உண்டாகும். மேலும், இசைக்கலைஞர்கள், திரைப்பட கலைஞர்களும் புதன் பகவானை வழிபட நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். காசிக்கு சமமான ஆறுதலங்களில் திருவெண்காடு தலமும் ஒன்று. காசியிலுள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அகோர பூஜை:

புதன் பகவானுக்கு தனி சன்னதி கொண்டுள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் அகோர மூர்த்தியான சிவபெருமானுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அனைத்து விதமான துன்பங்களையும் அழிக்க கூடிய சக்தி இந்த அகோர பூஜைக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்க்கது.