ஆடிப்பட்டம் தேடிவிதை: ஆடி 18ஆம் பெருக்கு!

159

ஆடிப்பட்டம் தேடிவிதை: ஆடி 18ஆம் பெருக்கு!

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் வரும் 18ஆம் நாள் தமிழகத்தில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடும்.

மற்ற பெயர்கள்:

ஆடி பெருக்கினை பதினெட்டாம் பெருக்கும் என்றும், ஆடி 18 என்றும் கூறுவர். ஆடி மாதத்தில் வரும் 18 ஆவது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு இந்த ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. மற்ற விழாக்கள் கிழமை மற்றும் விண்மீண்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது.

தென்மேற்கு பருவக்காலத்தில் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும். இதனையே ஆற்றுப் பெருக்கு என்பர். இந்த நாளில் உழவர்கள், விவசாயிகள் விதை விதைப்பர். இந்த ஆடி மாத 18 ஆம் பெருக்கில் விவசாயிகள் நெல், கரும்பு போன்றவற்றை விதைப்பார்கள். அதன் பிறகு 6ஆவது மாதம் தை திருநாளில் அறுவடை செய்வார்கள். இதற்கு வற்றாத நதிகளும் கை கொடுக்கும். இதைத் தான் ஆடிப்பட்டம் தேடிவிதை என்று பழமொழி கூறுவார்கள்.

பழங்காலத்தில் ஆறு பெருக்கெடுத்து ஓடுவதை மக்கள் கூடி நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள். கோயில்களில் வழிபாடு செய்வார்கள். வெற்றிலை, பாக்கு, பழங்கள், கொண்டு, பத்தி, கற்பூரம் ஏற்றுவார்கள். பின், விளைச்சல் அமோகமாக இருக்க தடையில்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக வாழை மட்டையில் விளக்கு ஏற்றி அதனை ஆற்றில் விடுவார்கள். அதோடு மட்டுமல்லாமல் பெரும்பாலும் சர்க்கரைப் பொங்கல் படைத்து குடும்பத்துடன் சாப்பிடுவார்கள்.

பழங்காலம் போன்று இன்றைய காலகட்டம் இல்லை. ஆதலால், அனைத்து ஆறுகளிலும் நீர் இல்லை. எனினும், ஆடி 18 ஆம் பெருக்கு அன்று காவிரி ஆறுகளில் அணைகளைத் திறந்து ஆறு பெருக்கெடுத்து ஓட செய்கின்றனர்.

பெண்கள் வழிபாடு:

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18 ஆம் தேதி காவிரி நதிக்கரை, முக்கொம்பு படித்துறை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை போன்றவற்றில் குடும்ப பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள் என்று அனைவரும் காவிரித் தாயை வழிபடுவார்கள். மேலும், சந்தனம், வெற்றிலை, பாக்கு, பழம், பத்தி, சாம்பிராணி, கற்பூரம், பூக்கள், நாணயங்கள், தேங்காய், குங்குமம், பச்சரிசி, வெல்லம், பன்னீர், வாழை இலை என்று பலவற்றைக் கொண்டு சென்று வழிபாடு செய்வார்கள். இப்படி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஆடி 18ஆம் பெருக்கை கொண்டாடி மகிழ்கின்றனர்.

தமிழர் பண்டிகைகளில் ஆடி 18ஆம் பெருக்கு முக்கியமானதாக கருதபடுகிறது. ஒரு சிலர் குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.