ஆடி அமாவாசை விரதம் இருக்கும் முறை!

289

ஆடி அமாவாசை விரதம் இருக்கும் முறை!

பொதுவாக வருடத்திற்கு 12 அமாவாசைகள் வரும். அதில், ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை ஆகியவைம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜோதிட ரீதியாக, சூரியன் (பிதுர் காரகன்) தந்தை காரகனையும், சந்திரன் (மாதுர் காரகன்) தாய் காரகனையும் குறிக்கிறது. இந்த இரு கிரகங்களும் ஒன்றாக வரும் நாள் தான் அமாவாசை.

உயிரோடு இருப்பர்களுக்கு அவர்கள் பிறந்த நட்சத்திரம் அன்று அவர்களது பெயரில் கோயிலில் அர்ச்சனை செய்வார்கள். இதுவே இறந்தவர்களாக இருந்தால், அவர்கள் மோட்சம் அடைய வேண்டி அவர்கள் இறந்த திதி அன்று தர்ப்பணம் செய்கின்றோம்.

ஆடி மாதம் தக்‌ஷணாயன காலத்தில் அமாவாசை முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அன்றைய நாளில் ஆறு, நதி, ஏரி, கடல் போன்ற இடங்களில் வைத்து அவர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பொழுது அவர்கள் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு மோட்ச நிலையை அடைவார்கள் என்பது புராணக் கதைகளில் சொல்லப்பட்டுள்ளது.

சரி, ஆடி அமாவாசை அன்று விரதம் மேற்கொள்ளும் முறைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்…

ஆடி அமாவாசையன்று காலையில் 4 மணிக்கே எழுந்து குளித்து முடித்து விட்டு உணவு மற்றும் பதார்த்தங்கள் தயார் செய்ய வேண்டும். வீட்டின் பூஜையறை சுத்தம் செய்து கோலமிட்டு, ஒரு மரத்திலான பீடம் வேட்டியையும், அம்மாவாக இருந்தால் புடவையையும் வைக்க வேண்டும்.

அதன் பிறகு பீட த்திற்கு பக்கத்திலேயே வீட்டில் இரண்டு குத்துவிளக்குகள் இருந்தால் இரண்டையும் ஏற்ற வேண்டும். இல்லையென்றால் ஒரு குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். தயார் செய்த உணவு மற்றும் பதார்த்தங்களை ஒரு வாழை இலையில் படையலாக வைத்து தீபங்கள் காட்டி, வழிபட வேண்டும்.

இந்த பூஜை செய்யும் போது காலையில் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது. பூஜை முடிந்த பிறகு படையலில் சிறிதளவு எடுத்து காகங்களுக்கு உணவளிக்க வேண்டும். அதன் பிறகு உங்களது குல தெய்வத்தை வேண்டி வணங்கி நீங்கள் உணவை சாப்பிட்டு உங்களது விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் விரதமிட்ட பிறகு அன்னதானமோ அல்லது உங்களால் முடிந்த ஆடையோ அல்லது வேறு ஏதாவது தான, தர்மங்கள் செய்தால் முன்னோர்களின் ஆசி உங்களுக்கும், உங்களது சந்ததிகளுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.