ஆணவம் அழிய வழிபட வேண்டிய கோயில்!

136

ஆணவம் அழிய வழிபட வேண்டிய கோயில்!

அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும்.

முருகப்பெருமான், அசுரர்களை எதிர்த்து நிலம், ஆகாயம், கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார். அவர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். இவ்வகையில் அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும்.

கந்தசுவாமி திருக்கோவில் :

அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்டபோது, மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர்புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் கண்டறிந்து முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இவ்வாறு மறைந்திருந்த அசுரர்கள், முருகப் பெருமானின் கண்களில் அகப்பட்ட இடமே இன்றும், கண்ணகப்பட்டு (கண் அகப்பட்டு) என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது.

இந்த ஊரில்தான் திருப்போரூர் கந்தசுவாமி திருக் கோவிலை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் நிர்மாணித்த மகான் சிதம்பர சுவாமிகளின் திருமடம் அமைந்துள்ளது. மதுரையில் சங்கப்புலவர் மரபில் அவதரித்தவர் சிதம்பர சுவாமிகள். இவர் மதுரை மீனாட்சி சொக்க நாதரை அனுதினமும் உள்ளத்தில் இருத்தி தியானித்து வந்தார். மீனாட்சி அம்மனின் மீது கலிவெண்பாவும் பாடியுள்ளார்.

ஒருமுறை சிதம்பர சுவாமிகள் தியானத்தில் அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி, ‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் உள்ளது.

அங்கே குமரக் கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோவில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்து. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருளி மறைந்தார்.

மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன் காட்டிய திசையில் பயணித்து, யுத்தபுரி, சமராபுரி, போரிநகர் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்போரூரை அடைந்தார் சிதம்பர சுவாமிகள். அப்போது அங்கு ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் மட்டுமே இருந்தது. மற்ற பகுதிகள் பனங்காடாக காணப்பட்டது. அந்தப் பகுதியில் முருகப்பெருமான் திருவுருவத்தை தேடித்திரிந்தார். இறுதியில் ஒரு பெண் பனை மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமான் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தார்.

சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் தோன்றி, சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார்.

அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோவிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோவில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

ஒருமுறை திருப் பணிக்காக வைத்திருந்த பொருட்களை திருடர்கள் கவர முயற்சிக்க, அவர்கள் பார்வை இழந்து வருந்தினர். சுவாமிகளை வணங்கி மீண்டும் கண் பார்வை பெற்ற கள்வர்கள், தாங்கள் வைத்திருந்த பொன், பொருட்களை திருப்போரூர் ஆலய திருப்பணிக்கு கொடுத்து விட்டு சென்றனர்.

அந்த காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது, நவாப் மனைவிக்கு திருநீறு பூச, அவரது வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று அழகிய திருக்கோவில் எழுந்தது. அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில் ஆகும்.

ஆலயத்தின் தெற்கே அமைந்துள்ள திருக்குளமான ‘வள்ளையார் ஓடை’ என்னும் சரவணப் பொய்கையில் நீராடி, கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கீழே ஒரு சிறு பீடத்தில் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம், அபய வரத திருக்கரங்களுடன் பிரம்ம சாஸ்தா வடிவில் வள்ளி- தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். மூலவர் சுயம்பு என்பதால் இந்த சிறிய மூர்த்தியை சிதம்பர சுவாமிகள், அபிஷேக வழிபாட்டிற்காக அமைத்துள்ளார்.

கருவறையில் உள்ள மூலவருக்கு புனுகுச் சட்டம் சாத்தி, கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக் கிறார்கள். எதிரில் யானை வாகனமும், பலிபீடமும் உள்ளன. கணபதி, தண்டாயுதபாணி, பிரம்ம சாஸ்தா, துர்க்கை, அகத்தியர், நாகராஜா, வீரபாகு, வீரபத்திரர் சன்னிதிகளும் ஆலய உட்பிரகாரத்தில் உள்ளன. கருவறை பின்புறம் பஞ்சலோகத்தில் அமைந்த விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பிரம்மா, தேவேந்திரன், நந்தி, த்வனி சண்டேசர், மாத்ரு சண்டேசர், அஸ்திரதேவர், உபதேச மூர்த்தி சன்னிதிகளும் அமைந்துள்ளன.

சிவபெருமானது மடியில், தந்தையின் திருமுகத்தைப் பார்த்தபடி முருகன் அமைந்திருக்க, சிவபெருமானோ தன் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அதி அற்புத திருவடிவே உபதேச மூர்த்தி ஆகும். இந்த உபதேச மூர்த்தி திருவுருவுக்கு மரிக்கொழுந்து சாத்தி, நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளது. இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிரிகள், பகைவர்கள் தொல்லை விலகும்.

கோவில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர், தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். எனவே இத்தல விநாயகரையும், சனீஸ்வரரையும், கந்தசுவாமியையும், பைரவரையும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக் கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகன்று விடும் என்று கூறப்படுகிறது.

ஆலய தலமரமான வன்னி மரத்தின் அருகே வன்மீகநாதர், புண்ணியகாரணி அம்பாள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வன்னிமர விநாயகர் சன்னிதிகள் உள்ளன. மேலும் இடும்பன், சூரியன் சன்னிதிகளும் இருக்கின்றன. இத் தலத்தில் பைரவர் நாய் வாகனம் இல்லாமல், தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் எழுந்தருளியிருப்பது சிறப்பு அம்சமாகும்.

திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம் முதலிய இடங்களில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தூரத்தில் திருப்போரூர் அமைந்துள்ளது.