ஆயில்யம் நட்சத்திரம்: தோஷங்கள் நீங்க கற்கடேஸ்வரர் வழிபாடு!

127

ஆயில்யம் நட்சத்திரம்: தோஷங்கள் நீங்க கற்கடேஸ்வரர் வழிபாடு!

தஞ்சாவூர் மாவட்டம் திருந்துதேவன்குடி என்ற பகுதியில் உள்ளது கற்கடேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக கற்கடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். தாயார் அபூர்வநாயகி மற்றும் அருமருந்துநாயகி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இருவரும் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இந்தக் கோயிலில் கற்கடேஸ்வரர் சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டப்பட்ட காயமும் இருக்கிறது.

இத்தலத்தில் உள்ள விநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். கோயில் பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சுப்பிரமணியர், நடராஜர் இருக்கின்றனர். நவக்கிரகங்களுக்கு சன்னதி கிடையாது. சிவபெருமானை வணங்கிய இந்திரன் தனது தவறை உணர்ந்து திருந்தியதால் இத்தலம் திருந்துதேவன்பட்டி என்று பெயர் பெற்றது. ஆனால், இந்த பெயர் சொன்னால் இந்தப் பகுதி மக்களுக்கு தெரிவதில்லை. உண்மையில் நண்டு கோயில் என்று தான் இந்தப் பகுதி சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

ஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:

கோபமும், வேகமும் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு, செல்வந்தர்களாகவும் இருப்பார்கள். எப்போதும் நியாயமான தர்மங்களை மற்றவர்களுக்குப் போதிப்பர். பணம் சம்பாதிப்பதிலும், நகை அணிந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கிரக தோஷங்கள் நிவர்த்தியாக கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். இந்த எண்ணெய் உட்கொண்டால் நோய் நீங்குவதாக நம்பிக்கை உண்டு.

தல பெருமை:

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ இந்த கோயிலுக்கு சென்று வழிபடலாம்.

பிணி நீக்கும் சிவன்:

ஒரு காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சுயம்பு லிங்கம் மண்ணிற்குள் மறைந்தது. ஒரு சமயம் இந்த பகுதியை சோழ மன்னன் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுக்கு வாதநோய் உண்டானது. எவ்ளோ வைத்தியம் செய்தும் நோய் குணமாகவில்லை. ஆனால், உண்மையில் சிவ பக்தனான அந்த மன்னன் நோய் தீரும்படி தனக்கு அருளும்படி வேண்டினான்.

ஒரு நாள் வயதான மருத்துவ தம்பதியினர் மன்னனின் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த விபூதியை தீர்த்தத்தில் கரைத்து கொடுத்தனர். அந்த மருந்தை குடித்த உடனே மன்னன் நோய் நீங்கப்பட்டு எழுந்தான். அந்த வயதான மருத்துவ தம்பதியினரை தனது அரசவையில் ராஜ வைத்தியராக தங்க சொன்னான். ஆனால், அவர்கள் விரும்பவில்லை. மாறாக அங்கிருந்த கிளம்ப தயாரானார்கள். இதையடுத்து அவர்களுக்கு மன்னன், பொன்னும் பொருளும் கொடுக்க எடுத்து வந்தான். ஆனால், அதையும் அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.

எனினும், தாங்கள் விரும்புவது எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள், நான் அதனை நிறைவேற்றி வைக்கிறேன் என்று மன்னன் அவர்களிடம் வேண்டினான். பின்னர், அவர்கள் இந்த இடத்திற்கு அழைத்து வந்து ஏற்கனவே சாமி இருந்த இடத்தில் கோயில் கட்டும்படி கேட்டுக் கொண்டனர். மன்னனும் ஒப்புக்கொள்ளவே, லிங்கத்தின் அருகில் சென்ற வயதான மருத்துவ தம்பதியினர் லிங்கத்திற்குள்ளாக ஐக்கியமானார்கள்.

அதன் பின்னர் உணர்ந்த மன்னன் வந்தது சிவனும், பார்வதியும் என்பதை உணர்ந்து கொண்டான். கோயிலும் கட்டி முடித்தான். சிவனை வேண்டிக் கொள்ள பிணிகள் நீங்கும். சம்பந்தரோ, இவரை பிணி நீக்கும் சிவன் என்று பாடியிருக்கிறார்.

இரட்டை அம்பிகை:

பொதுவாக கோயில் என்றாலே ஒரு அம்மன் மட்டுமே இருக்கும். ஆனால், இந்தக் கோயிலில் அபூர்வநாயகி, அருமருந்துநாயகி ஆகிய இரட்டை அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகின்றனர். சோழ மன்ன்ன் இந்த இடத்தில் கோயில் கட்டியபோது ஏற்கனவே இருந்த அம்மனை காணவில்லை. ஆகையால் புதிதாக ஒரு அம்பிகையை பிரதிஷ்டை செய்தான்.

தனக்கு மருத்துவர் வடிவில் வந்து அருளியவள் என்பதால் அருமருந்து நாயகி என்று பெயர் சூட்டினான். அப்படியிருந்த நிலையில் சில நாட்களிலேயே அந்த காணாமல் போன சிலையும் கிடைத்தது. ஆதலால், அதனையும் இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்தான். அவள் அபூர்வநாயகி என்று பெயர் பெற்றாள்.

யோக நிலை, யோக சந்திரன்:

புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கான பரிகார கோயிலாக இந்த கற்கடேஸ்வரர் கோயில் திகழ்கிறது. சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டப்பட்ட காயமும் இருக்கிறது. கோயிலின் நுழைவு வாயிலில் சந்திரனுக்கான சன்னதி உள்ளது. அதுவும் யோக நிலையில், யோக சந்திரனாக காட்சி தருகிறார். ஜாதகத்தில் சந்திர திசை உள்ளவர்கள் யோக நிலையில், யோக சந்திரனாக காட்சி தரும் சந்திர பகவானுக்கு வெண்ணிற வஸ்திரம் சாற்றி வழிபட்டால் தோஷம் நீங்குவதாக ஐதீகம்.

சிறப்பம்சம்:

ஆயில்ய நட்சத்திரத்திற்கு சிறந்த மருத்துவ குணம் உண்டு. இவர்களால் தெய்வ பக்தியுடன் எதையும் சாதிக்க முடியும் என்ற குணம் இருக்கிறது. மனக்குழப்பத்தையும், நோய்களையும் தீர்க்கவல்லது. ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாள் மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் இந்த கோயிலில் உள்ள கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் கொண்டு வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெருகும், உடலும், உள்ளமும் வளம் பெறும்.

ஒவ்வொரு அமாவாசை அன்றும், வாரந்தோறும் வரும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் இங்கு வழிபாடு செய்யலாம். நோயுள்ள மற்ற நட்சத்திரக்காரர்களும் இந்த நாட்களில் கற்கடேஸ்வரரை வழிபாடு செய்யலாம். மேலும், அருமருந்து நாயகியையும் வழிபட்டு மருந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

ஒரு நாள் சிவபெருமானுக்கு பூஜை செய்துவிட்டு துர்வாச மகரிஷி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் நடையைப் பார்த்து நீங்கள் நண்டு ஊர்ந்து செல்வது போன்று நடந்து செல்கிறீர் என்று கேலி கிண்டல் செய்தான். அதோடு, அவரைப் போன்று நடந்தும் காட்டி அவமானம் செய்தான். இதனால் ஆத்திரமடைந்த துர்வாச மகரிஷி அவனை நண்டாக பிறக்கும்படி சாபமிட்டார்.

இதையடுத்து மனம் வருந்திய கந்தர்வன், துர்வாச மகரிஷியிடம் மன்னிப்பு வேண்டினான். துர்வாச மகரிஷியின் அறிவுரையின்படி இந்த கோயிலில் நண்டு வடிவிலேயே சிவபெருமானை பூஜித்து சாப விமோட்சனம் பெற்றான். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையை இப்போதும் காணலாம்.

கற்கடகம் என்றால் நண்டு என்பது பொருள். ஆகையால், கற்கடகத்திற்கு (நண்டு) விமோட்சனம் தந்தவர் என்பதால், இத்தல இறைவன் கற்கடேஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்திரன் தனது ஆணவம் நீங்குவதற்கு இத்தலத்தில் சிவனுக்கு பூஜை செய்தான். இத்தலத்தில் உள்ள புஷ்கரணியில் ஒவ்வொரு நாளும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து வழிபாடு செய்தான். மேலும், தனது தவறை உணர்ந்து திருந்தினான்.

இதனால், இந்த ஊர் திருந்து தேவன்குடி என்று பெயர் பெற்றது. ஆனால், இந்த ஊரின் பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரிவதில்லை. நண்டு கோயில் என்று குறிப்பிட்டால் இந்தக் கோயில் பற்றியும், இந்த ஊர் பற்றியும் தெரியாதவர் எவரும் இல்லை.