ஆயுள் பலம் அதிகரிக்க நவக்கிரகங்கள் வழிபாடு!
சென்னை மாவட்டம் பாரிஸ் (பாரிமுனை) பகுதியில் உள்ளது கச்சாலீஸ்வரர் (கச்சபேஸ்வரர்) கோயில். இந்தக் கோயிலில் மூலவராக கச்சாலீஸ்வரர் காட்சி தருகிறார். தாயார் அழகாம்பிகை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.
கோயில் சிறப்பு:
இந்தக் கோயிலில் நவக்கிரகங்கள் தனி மண்டபத்தில் நின்ற வடிவில் உள்ளன. நவக்கிரகங்களுக்கு மத்தியில் உள்ள சூரிய பகவான் தனது மனைவிகளான உஷா மற்றும் பிரத்யுஷா ஆகியோருடன் காட்சி தருகிறார். கோயிலின் மண்டப மேற்கூரையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 4 யுகங்கள், அஷ்டதிக் பாலகர்கள் ஆகியோர் சிற்ப வடிவில் உள்ளனர். கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலில் வழிபாடு செய்தால் பாதிப்பு நீங்கும் என்பது ஐதீகம். 60ஆம் கல்யாணம் செய்பவர்கள் இந்தக் கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் முன்பு வந்து செய்து கொள்கிறார்கள். இதன் மூலமாக ஆயுள் பலம் கூடும் என்பது நம்பிக்கை.
பொதுவான தகவல்:
இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் வரசித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். திருமணத் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் இந்தக் கோயிலில் வந்து வழிபாடு செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். கச்சாலீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தோஷம் நீங்கும், நினைத்த காரியம் நிறைவேறும். அம்பாளுக்கு தைலக்காப்பு செய்து வழிபட குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தல பெருமை:
அழகாம்பிகையின் சன்னதிக்கு இருபுறம் சரஸ்வதி மற்றும் லட்சுமி தேவி காட்சி தருகின்றனர். ஒரே நேரத்தில் அழகாம்பிகை, சரஸ்வதி மற்றும் லட்சுமியை வழிபட ஆற்றல், கல்வி, செல்வம் பெறலாம். சபரிமலை ஐப்பன் சன்னதி தீக்கரையான போது தமிழகத்திலிருந்து புதிய சிலை எடுத்து செல்லப்பட்டது. அந்த புதிய சிலையை இந்தக் கோயிலுக்கு பூஜைக்காக எடுத்து வந்தனர்.
பூஜை முடிந்த பின்னர் சிலையை இந்தக் கோயிலிலிருந்து எடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால், ஒரு சில காரணங்களால் தடை ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து 3 நாட்கள் சிலையை கொண்டு செல்ல முடியவில்லை. ஆதலால் சிலை இங்கேயே இந்தக் கோயிலிலேயே இருந்தது. அதன் பிறகு அந்த 3 நாட்களும் ஐயப்பனுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அதன் நினைவாக இந்தக் கோயிலில் ஐயப்பனுக்கு என்று தனி சன்னதியும் கட்டப்பட்டது. எப்போது சபரிமலை ஐயப்பன் கோயில் ஜோதி தரிசன விழா நடைபெறுகிறதோ அப்போது இங்கேயும் ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது.
இத்தல இறைவனான கச்சபேஸ்வரருக்கு முன்புறம் சிங்க வாகனத்தின் மீது 5 முக ஹேரம்ப விநாயகர் காட்சி தருகிறார். இவருக்கு அருகாமையில் சித்தி, புத்தி நின்ற கோலத்தில் உள்ளனர். ஹேரம்ப விநாயகரை வழிபட வணங்கினால் கணவன் மனைவி இடையில் ஒற்றுமை பெருகும் என்பது ஐதீகம்.
தல வரலாறு:
காஞ்சிபுரத்தில் உள்ள கச்சாலீஸ்வரரை வணங்கி விட்டு பக்தர் ஒருவர் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். பாலாற்றை கடந்து தான் அவரது ஊருக்கு வர வேண்டும். ஆனால், அவர் திரும்பும் வழியில் கன மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. அவருக்கோ ஊரில் ஏகப்பட்ட வேலைகள் இருந்தது. இப்படி மழை பெய்கிறதே! எனக்கோ ஊரில் வேலைகள் பாக்கியிருக்கிறது. என்னால் எப்படி அதனையெல்லாம் முடிக்க முடியும் என்று இறைவனிடம் முறையிட்டார். விடாது ஒரு வாரம் பெய்த கன மழையால் ஒரு வாரம் வரையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு இருந்தது.
ஒரு வாரத்திற்குப் பிறகு தான் மழையும் நின்றது. வெள்ளமும் சரியானது. அதன் பிறகு பாலாற்றில் இறங்கி வேகமாக ஓடி தனது ஊருக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், அவரது முடிக்க வேண்டிய வேலைகள் அனைத்து முடிக்கப்பட்டு இருந்தது. தனது பக்தனுக்காக அவனது வடிவில் வந்து இறைவனே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டார். இதையடுத்து அந்த ஊரிலேயே சிவனுக்கு பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த ஊரிலேயே சிவபெருமானுக்கு கோயில் எழுப்பப்பட்டது.
ஐந்து வாகன சிவன்:
பாற்கடலை கடைந்த போது மத்தாகப் பயன்படுத்தப்பட்ட மந்திரமலை கடலில் மூழ்கியது. இதன் காரணமாக மகாவிஷ்ணு ஆமை வடிவம் எடுத்து பாற்கடலை கடைவதற்கு மத்தாக பயன்பட்டார். அவர் வழிபட்டது என்னவோ சிவன் என்பதால், கச்சபேஸ்வரர் என்றும், கச்சாலீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கச்சபம் என்றால் ஆமை என்று பொருள். இந்தக் கோயிலில் உள்ள சிவலிங்கமானது, கூர்மம் (ஆமை), நாகம், சிம்மம், யுகங்கள், பத்மம் ஆகிய 5 ஆசனங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஞ்ச வாகனங்களில் சிவபெருமான் காட்சி தருவது என்பது மிகவும் அரிதான ஒன்று.
நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், எதிரிகள் தொல்லை நீங்கவும் இத்தல இறைவனான கச்சாலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட வழிபடலாம். இந்த லிங்கத்திற்கு பின்புறம் உள்ள சுவரில் சதாசிவ மூர்த்தி காட்சி தருகிறார். ஒரே கருவறையில் சிவனின் உருவமான இந்த வடிவத்தையும், அருவுருவமான லிங்கத்தையும் வழிபட பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.