இன்று நவராத்திரி 3ஆவது நாள்: சந்திரகாண்டா தேவி வழிபாடு!

71

இன்று நவராத்திரி 3ஆவது நாள்: சந்திரகாண்டா தேவி வழிபாடு!

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் இந்த நவராத்திரி விரதம். நவராத்திரி என்றாலே 9 இரவுகள். நவம் என்பது 9ஐ குறிக்கும். இதற்கு மற்றொரு பொருளும் இருக்கிறது. அதாவது நவம் என்றால் புதுமை.

நவராத்திரி என்றாலே 9 இரவுகள். இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்).

ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியை போற்றும் விரதமாக இந்த நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது மனிதனுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படக் கூடிய ஆற்றலைக் கொடுக்கிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும்.

பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, சைலபுத்ரி, காத்யாயினி, ஸ்கந்தமாதா, மகாகௌரி, சித்திதாத்திரி, காளராத்திரி ஆகிய 9 தேவிகளையும் இந்த 9 நவராத்திரி நாட்கள் பூஜித்து வழிபடுவது. நவராத்திரி நிறைவு பெறும் நாளாக விஜயதசமி அன்று தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழா வட இந்தியாவில் அதிகளவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 7ஆம் தேதி தொடங்கிய நவராத்தியானது வரும் 15 மற்றும் 16ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் இந்த நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது. சரி, நவராத்திரியின் போது வழிபடும் 9 தேவிகள் குறித்து இந்தப் பதிவில் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். இதற்கு முன்னதாக நவராத்திரி முதல் மற்றும் 2ஆம் நாளுக்கான தேவியான சைலபுத்ரி வழிபாடு, பிரம்மச்சரணி தேவி குறித்து பார்த்தோம்.

இந்தப் பதிவில் நவராத்திரி 3ஆம் நாளில், நவதுர்க்கையின் 3ஆவது அம்சமான சந்திரகாண்டா தேவி குறித்து பார்ப்போம். நவராத்திரி 3ஆம் நாளில் சந்திரகாண்டா தேவி வழிபாடு செய்யப்படுகிறது. நீதியை நிலைநாட்டி சந்திர பிறையை அணிந்து கொண்டவள். சந்திர என்றால் நிலவு, காண்டா என்றால் மணி என்று பொருள். சந்திர பிறையானது இவளது நெற்றியில் மணி போன்று இருப்பதால், சந்திரகாண்டா என்று அழைக்கப்படுகிறாள்.

சிங்க வாகனத்தில், 3 கண் மற்றும் 10 கரங்களுடன் காட்சி தருகிறாள். சந்திரகாண்டாவின் 2 கரங்கள் பக்தர்களுக்கு அருள் செய்யும் விதமாக உள்ளன. போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருவதால், தனது பார்வையின் மூலமாக பக்தர்களின் துன்பங்களை நீக்கி அவர்களுக்கு இன்பத்தை அளிக்கிறாள்.

கடும் கோபமும், ஆக்ரோஷமும் கொண்டிருக்கும் சந்திரகாண்டா தேவியை வழிபட சிங்கத்தைப் போன்ற வீரம் கிடைக்கும், பாவம் அழியும், அனைத்து சௌகரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சந்திரகாண்டா மந்திரம்:

ப்ரிடிஞ்சபர வரூதா சந்திரகோபஸ்த கரியுதா, பிரசாதம் தந்துனே மகாயும் சந்திரகண்டெதி விஸ்ருதா

இந்த மந்திரத்தை சொல்லி சந்திரகாண்டா தேவியை வழிபட அனைத்து நன்மைகளும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சந்திரகாண்டா கோயில் உள்ளது.