இரட்டைப் பிள்ளையார் வழிபாட்டின் சிறப்பு!

118

இரட்டைப் பிள்ளையார் வழிபாட்டின் சிறப்பு!

பிள்ளையார் மிகவும் எளிமையான கடவுள். விநாயகரே முழுமுதல் கடவுளாக கருதப்படுகிறார். எந்த காரியத்தை தொடங்கினாலும் பிள்ளையாரது அருள் இல்லாமல் அந்த காரியம் வெற்றி அடைவது இல்லை. சிவ பெருமான் கூட, பிள்ளையாரை வணங்கி விட்டுதான் காரியத்தை செய்ய தொடங்குவார் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஒரு பிள்ளையாரை வணங்கினாலே நமக்கு பலன் கிடைக்கிறது என்றால் இரட்டை பிள்ளையாரை வணங்கினால் இருமடங்கு பலன்கள் கிடைக்கும்.

இரட்டை பிள்ளையார் உருவான கதை:

விக்கினன் என்ற அசுரன் ஒருவன் இருந்தான். பொதுவாக, அசுரர்கள் அரக்க குணம் உடையவர்கள். அவர்கள் தான் எல்லாவற்றிலும் முதலில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். ஆதலால் அவர்கள் தேவர்களையும், முனிவர்களையும் தொல்லை கொடுத்து வந்தனர்.

அசுரர் குலத்தில் பிறந்த விக்கினன் மட்டும் மாறுபட்டவனா? அவனும் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவன் தொல்லையை பொறுக்க முடியாத முனிவர்களும், தேவர்களும் விநாய பெருமானிடம் சென்று அவனிடமிருந்து தங்களை காக்கவேண்டி சரணடைந்தனர்.

விநாயகரும் அவனை அழிக்க புறப்பட்டார். முதலில் விநாயகர் சிறு பிள்ளைதானே! அவரால் என்ன செய்து விடமுடியும்? என ஏளனமாக இருந்த விக்கினன் பிறகு விநாயகரிடம் மன வலிமையிலும், உடல் வலிமையிலும் தோற்று போய், கடைசியில் தன்னை மன்னித்து அருள்புரியுமாறு சரணடைந்தான் .

விநாயகர் அவனை மன்னித்தார். அவன் விநாயகரிடம்,’நீங்கள் என் பெயரை முதலில் சூட்டி கொள்ள வேண்டும். அதுதான் என் ஆசை’ என்று வேண்டுகோள் விடுத்தான். விக்கினன் கேட்டுக் கொண்டபடி, அன்று முதல் விநாயகர் ‘விக்னேஸ்வரன்’ என்று அழைக்கப்பட்டார்.

விக்கினன் தடைகளை செய்பவன். ஆனால் விநாயகர் வரவிருக்கும் தடைகளை நீக்குபவர். அதன்படி விநாயகரை வணங்காமல் எந்த செயலை யார் செய்தாலும், என்ன யாகம், பூஜை நடத்தினாலும் விக்கினன் தடையாக இருப்பான்.

விநாயகரே விக்கினனிடம், என்னை முதலில் வணங்குபவருக்கு நீ எந்த தடையும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். முருகன் சூரபத்மனை அழித்து, அவன் வேண்டுகோளின் பொருட்டு, உடலின் ஒரு பகுதியை சேவலாகவும், மற்றொரு பகுதியை மயிலாகவும் தன்னிடம் வைத்து கொண்டார்.

விநாயகரும் விக்கினனை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டார். பக்தர்கள் விநாயகரை வழிபடும்போது எல்லாம் விக்கினனையும் வழிபட வேண்டும் என்று விநாயகர் கூறுகிறார். விநாயகரும், விக்கினனுமே இரட்டை பிள்ளையாராக உருவானார்கள். இதுவே இரட்டை பிள்ளையார் உருவான கதையாயிற்று.

​இரட்டைப் பிள்ளையார் வழிபாட்டின் பயன்கள்:

சில திருத்தலங்களில் ஒரே சன்னிதியில் இரண்டு பிள்ளையார்கள் எழுந்தருளியிருப்பதைத் தரிசிக்கலாம். இந்த இரட்டைப் பிள்ளையார் பிரதிஷ்டைக்கு ஒரு ஐதீகம் உள்ளது.

விநாயகர் மட்டுமே இரட்டையாக இருப்பார். ஒருவர் விக்னராஜர். மற்றொருவர் விநாயகர். விநாயக ஷோடச நாமங்களில் விக்னராஜோ விநாயக என்று இப்பெயர் உள்ளன.

விக்னராஜா தடைகளை உண்டாக்குவதில் கெட்டிக்காரர். விநாயகர் தடைகளை போக்குவதில் வல்லவர். இந்த இருவரின் நோக்கமும் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்பதற்காக. அதாவது,தடையும் நானே, அதை போக்குவதும் நானே என்கிறார்கள் இரட்டை பிள்ளையார்கள். இதுவே இரட்டைப் பிள்ளையார் வழிபாட்டின் தத்துவம்.

ஒரே சன்னிதியில் இரட்டைப் பிள்ளையார் அருள்புரியும் திருத்தலங்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளன.

இரட்டை பிள்ளையார் திருவண்ணாமலையில் மிக பழமையான கோவில்களில் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் இரட்டை பிள்ளையாரை காணலாம்.

சங்கடஹர சதுர்த்தியன்று, விரதமிருந்து இரட்டை பிள்ளையாரை வழிபடுவதால் லக்ஷ்மியின் அருளும் கிடைக்கும். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினை தீரும் என்பது ஐதீகம்.