இறைவனைத் தாண்டி அரக்கர்கள் எப்படி வந்திருக்க முடியும்?

61

இறைவனைத் தாண்டி அரக்கர்கள் எப்படி வந்திருக்க முடியும்?

நல்லவர்களையும் படைத்து, கெட்டவர்களையும் ஏன் படைக்க வேண்டும்? என்று கேட்டால் இதுதான் எழுதி வைக்கப்பட்ட விதி என்கிறார்கள். நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருப்பது நமது காரியமா? அல்லது அது இறைவன் அதாவது விதியின் காரியமா?

மனதில் தோன்றும் தீய எண்ணங்கள் தான் அரக்கர்களே தவிர, ஆயிரம் தலைகள் கொண்ட அரக்கர்கள் என்பதெல்லாம் கற்பனைக் கதைகளே. ஆதியில் மனிதன் விலங்குகளோடு விலங்காகதான் வாழ்ந்து கொண்டிருந்தான். அதற்குப் பிறகு அதை விட சற்று அறிவில் மேம்பட்டு விளங்கிய கால கட்டங்களில் மனிதனுக்கு கடவுள் பற்றிய அறிவையும், நம்பிக்கையையும், அவன் வாழ்வில் அமைதியையும் உருவாக்குவதற்காகச் சொல்லப்பட்ட கதைகளே அரக்கர்கள் கதைகள்.

நம் நாட்டில் மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலும் இது போன்ற புராணக் கதைகள் உண்டு. பயம் என்றால் என்னவென்றே அறியாமல் காட்டு மிராண்டியாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதனுக்கு கடவுள் குறித்த நம்பிக்கையை உண்டாக்கி, அவன் மனதில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இது போன்ற கதைகள் சொல்லி வைக்கப்பட்டன. ஒழுக்கம், கட்டுப்பாடு, நெறி முறை கொண்டு வாழ வேண்டும் என்பதற்காக கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் பயத்தை உண்டாக்கினார்கள். இதைத்தான் தமிழில் பயமே பக்தி என்பார்கள்.

ஆனால், இன்றைய நிலை வேறு. அந்த கட்டத்திலிருந்து மனிதன் தன் அறிவில் பல பரிணாம வளர்ச்சிகளைக் கடந்து இன்று அறிவில் சிறந்தவனாக வளர்ந்து நிற்கிறான். சந்திரனில் கால் பதித்து விட்டான், செவ்வாய் கிரகத்தில் போய் சுகமாக வாழ முடியுமா என்று ஆராய்ச்சி செய்கிறான் இவ்வளவு ஏன், கடவுள் துகளையே கண்டு பிடித்து விட்டான் என்கிறார்கள். எனவே ஏன்? எப்படி? எதற்காக? என்று யோசிக்கிற முழுமையான திறனும் மனிதனுக்கு வந்து விட்டது. சொல்லப் போனால் பரிணாமத்தின் உச்ச கட்டமே இன்றைய மனிதன்தான் என்று நாம் சொல்லிக் கொள்கிறோம்.

நமக்கு மிஞ்சிய சக்தியை மனிதன் உணர்ந்தாலும், படைப்பு எவ்வாறு நடந்தது? ஏன் நடந்தது? கடவுள் எப்படி இருப்பார்? என்றெல்லாம் யோசித்து விடை காண முடியாத காலங்களில், அவர்களிடையே வாழ்ந்த அறிவில் மேம்பட்டவர்கள் கடவுள் நம்மைப் போலவே இருப்பார் என்று சொல்லி வைத்தார்கள்.

பிறகு வந்த அறிவாளிகள் நமக்கு மிஞ்சிய அந்த வல்லமையான சக்தியின் செயல்பாடுகள், இயக்கங்கள் அனைத்தையும் கூர்ந்து கவனித்து, அவற்றை தத்துவார்த்தமாக விளக்கும் விதமாக பலவிதமான வடிவங்கள், பெயர்களைச் சூட்டினார்கள். ஆனால், நமக்கு இப்பொழுது படைப்பை பற்றிய விஞ்ஞான விளக்கம் தரப்பட்டு விட்டது. அதையே வேதமும் விளக்குகிறது.

கடவுள் ஒருவரே. அவர் வல்லமையானவர், எல்லையற்றவர், அவரே அனைத்திற்கும் ஆதியானவர் என்று வேதம் சொல்கிறது. இன்றைய கட்டத்தில் விஞ்ஞானமும் உலகில் காணும் அனைத்திற்கும் மூலப் பொருள் ஒன்றுதான் என்று ஒத்துக் கொள்கிறது. அதையே நம் முன்னோர்கள் பரம்பொருள் என்றார்கள்.

அந்தப் பரம்பொருள் தான் விளையாடுவதற்காக ஒரு உலகைப் படைக்க வேண்டும் என்று எண்ணி இந்த உலகத்தையோ அல்லது அண்ட சராசரங்களையோ படைக்கவில்லை. அந்த வல்லமையான இருப்பு நிலையில் ஏற்பட்ட ஒரு விதமான சலனத்தால் விளைந்த மாற்றமே இந்த அண்ட சராசரங்களாக விரிந்தது. அந்த மாற்றங்களும், விரிவு நிலையும் ஒரே நாளில் நடந்து விடவில்லை.

கோடிக் கணக்கான ஆண்டுகளாக, ஒன்றிலிருந்து ஒன்று என்று தன்னை மறுசீரமைத்துக் கொண்டு, மாறி மாறி இன்று நாம் காணும் யாவுமாகவும் பரிணமித்து நிற்கிறது. இந்த மாற்றம் முடிந்து விட்டது என்று யாரும் சொல்ல முடியாது. அது வரப் போகும் கோடிக் கணக்கான யுகங்களிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.