உறவினர்களால் வஞ்சிக்கப்படுபவர்கள் வழிபட வேண்டிய நாகம்மன் கோயில்!
இத்தலம் தொன்மையான வரலாறும் பெருமையும் கொண்டு விளங்குகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் திருவாமாத்தூர் பகுதியில் ஒரு வசதியான குடும்பம் வாழ்ந்து வந்தது. அண்ணன், தம்பி என இருவர் மட்டுமே குடும்ப வாரிசுகள். தம்பி வெளியூர் சென்ற சமயத்தில், தந்தை நோய்வாய்பட்டு இறந்துவிடுகிறார். அண்ணனோ அனைத்துச் சொத்துக்களையும் விற்று காசாக்கி, மறைத்து வைத்து விடுகிறான்.
தந்தையின் மறைவுக்குப் பின்னர் ஊர் திரும்பிய தம்பி, தன் அண்ணனிடம் தனக்குரிய பங்கைக் கேட்கிறான். அண்ணனோ முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறான். தந்தையின் சொத்து ஏதும் இல்லை எனப் பசப்புகிறான்.
தம்பி, ஊர்ப்பெரியவர்களிடம் முறையிடுகிறான். ஊரார் தம்பிக்குப் பரிந்துபேசியும் பயன் இல்லை. அண்ணன் மனம் இளகுவதாக இல்லை. வேறு வழியில்லாமல், திருவாமாத்தூரில் உள்ள திருவட்டப்பாறைக்குச் சென்று, அதன்மீது கை வைத்துச் சத்தியம் செய்யட்டும் என முடிவு செய்கிறார்கள். அண்ணனும் அதற்கு ஒப்புக்கொள்கிறான்.
நீதி தரும் திருவட்டப்பாறை:
அந்தப் பகுதியில் மிகவும் சிக்கலான வழக்கு ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால், திருவாமாத்தூர் வட்டப்பாறையில் சத்தியம் செய்துவிட்டால் போதும். அது பொய் சத்தியமாக இருக்குமானால், சத்தியம் செய்தவன் உடனே செத்துவிடுவான் என்பதைக் கண்கூடாக அப்பகுதி மக்கள் கண்டு வருகின்றனர். எனவே, ஊர்ப்பெரியவர்களுடன், அண்ணன், தம்பி இருவரும் வட்டப்பாறைக்கு வந்து சேர்கின்றனர்.
வட்டப்பாறையை அடைந்ததும் தன் கையிலிருந்த தடியைத் தன் தம்பியின் கையில் கொடுத்துவிட்டு, “எங்கள் குடும்பத்தில் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து எதுவுமே என்னிடத்தில் இல்லை. இது சத்தியம்”, என்று வட்டப்பாறையில் கை வைத்து சத்தியம் செய்கிறான்.
ஆனால், ஊரார் எதிர்பார்த்தபடி அண்ணனுக்கு ஒன்றுமே நடக்கவில்லை. திருவட்டப்பாறையில் நீதி பொய்த்ததே என வேதனையோடு கலைந்தனர். தம்பி கையில் கொடுத்த தடியைத் திரும்பப் பெற்றுக்கொண்ட அண்ணன், ஏக மகிழ்ச்சியில் அருகேயுள்ள தும்பூர் தாங்கல் கிராமம் நோக்கி நடக்கலானான்.
“பொய் சத்தியம் செய்த என்னை, தெய்வம் என்ன செய்து விடும்; திருவட்டப்பாறை தெய்வம் சீறி கொத்துமோ…”என ஏளனமாகச் சொல்லி வாய் மூடுவதற்குள், பூமியிலிருந்து பீறிட்டு எழுந்த கருநாகம் ஒன்று அவனைச் சீறி கொத்தியது. அவனும் இறந்து போனான். அவன் கையில் இருந்த தடி உடைந்து, அதில் மறைந்து வைக்கப்பட்டிருந்த பொற்காசுகளும் நவரத்தினங்களும், அங்கேயே கொட்டி சிதறிக் கிடந்தன.
முன்னோர் சொத்தை எல்லாம் விற்று அவற்றை பொற்காசுகளாகவும், நவரத்தினங்களாகவும் தடியில் மறைத்து வைத்து, தம்பியிடம் தடியை தந்து பொய் சத்தியம் செய்த அண்ணனை அழித்து, தர்மத்தையும் நீதியையும் காத்தது, திருவாமாத்தூர் தெய்வம். அண்ணன் உயிர் துறந்த இடம் தும்பூர் தாங்கல்.
இங்குதான் சுயம்பு வடிவான நாகம்மன் கோயில் அமைந்துள்ளது, தசையாய் இருந்த நாகம் இன்று கல்லாக மாறியது மட்டுமின்றி, தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது என்பதும், இது மிக நீளமான கல் நாகம் என்பதும், அண்மையில் திருப்பணி மேற்கொள்ள முயன்றபோது தெரிய வந்தது.
துன்பம் துடைத்தவள்:
ஆலயத் திருப்பணிக்கு முன்னர் நிகழ்ந்த அம்மனின் திருவிளையால் இது. புதுச்சேரியைச் சார்ந்த ஒரு அடியார் தனக்கு ஜாதகப்படி நடந்த ஏழரை நாட்டுச் சனியால் பல்வேறு தோல்விகளைக் கண்டு விரக்தி அடைந்து, சன்னியாசம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதற்கு முன்பு தும்பூர் தாங்கல் நாகம்மன் சன்னதிக்கு வந்து வழிபட்டார். அப்போது ஒரு ஊனமுற்றவர் அவரிடம் வந்து, உங்களை அதோ ஒருவர் கூப்பிடுகிறார் என்று கூறினார். கூறிய திசையை நோக்கியபோது, அங்கே எவருமே இல்லை.
சொன்னவரைப் பார்த்தால் அவரும் அங்கே இல்லை. இது ஏதோ நாகம்மன் செய்த திருவிளையால் என முடிவு செய்தார். எனவே, மீண்டும் ஒருமுறை இவ்வாலயம் வந்து சேர்ந்தார். அங்கே அருள்வாக்கு சொல்லிக் கொண்டிருக்க, இவரைப் பார்த்ததும் உடனே அருகில் அழைத்து, அடியாரின் கையில் என்னவென்று தெரியாத ஒரு பொருளை மறைத்தபடி அவர் கையில் வைத்தார். “நீ இதை வைத்துக்கொண்டு நீ விரும்பும் தொழிலைச் செய்து வா. எல்லாம் நன்மையாகவே நடக்கும்”, என அருள்வாக்கு கூறினார்.
அதன்பின்னர், ஊர் திரும்பிய அவருக்கு அனைத்தும் ஏற்றமாகவே இருக்க, அம்மன்பால் ஈடுபாடு கொண்ட அவர், ஆலயம் எழுப்பத் திட்டமிட்டார்.
திருப்பணியில் மகிமை:
சிமெண்ட் கூரையின் கீழ் அருள் வழங்கி வந்த நாகம்மனைத் தோண்டி எடுத்து உயரமான பீடத்தில் வைத்து புதிய ஆலயம் எழுப்ப அடியார் முயன்றார். ஆழம் எடுக்க எடுக்க அந்த கல்நாகம் பருத்த உடலுடன் முழு வடிவமாக பூமியின் கீழே நீண்டு கொண்டே போனது. அது மட்டுமின்றி, நாகர் உருவத்தைச் சுற்றி ஏராளமான நீர் சுரந்து கொண்டு வெள்ளமாக நின்றது. இத்தனைக்கு அருகேயுள்ள திருக்குளம் வறண்டு காணப்படுவதுதான் அதிசயம்.
இதற்கு மேலும், தோண்டுவது அம்மனின் சக்தியையே சோதிப்பதற்கு ஒப்பாகும் என்று அஞ்சிய பக்தர், பழையபடியே தோண்டிய பகுதிகளை மீண்டும் மண்ணால் மூடிவிட்டு இருக்கின்ற இடத்திலேயே உயர்ந்த மண்டபம் கட்டப்பட்டு ஆலயம் எழுப்பி, குடமுழுக்கு விழா நடத்தி முடித்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது மகாமண்டபம் முழுவதுமே கருங்கற்களைக் கொண்ட சிறிய வேலைப்பாடுகளுடன் நடந்தேறி வருகின்றது.
அமைவிடம்:
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் தும்பூர் தாங்கல் தலம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து தென்மேற்கே 160 கி.மீ, விழுப்புரத்தில் இருந்து வடகிழக்கே 12 கி.மீ, செஞ்சியில் இருந்து தெற்கே 29 கி.மீ, திருவாமாத்தூரிலிருந்து, வடகிழக்கே 10 கி.மீ, தொலைவில் தும்பூர் தாங்கல் அமைந்துள்ளது.
விழுப்புரம் – செஞ்சி பேருந்து வழித்தடத்தில் தும்பூர் என்ற இடத்தில் இறங்கி ஷேர் ஆட்டோ மூலம் கிழக்கே சுமார் 2 கி.மீ பயணம் செய்து தும்பூர் தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஆலயத்தினை அடையலாம். சொந்த வாகனம் வைத்திருப்போர் எளிதில் சென்றுவர சாலை வசதி உள்ளது.
தரிசன நேரம்:
காலை 6.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஆலயம் காலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும். அர்ச்சகர் இல்லம் ஆலயத்தை ஒட்டியே உள்ளதால், ஏமாற்றமின்றி அம்மனைத் தரிசிக்கலாம்.
ஆலய அமைப்பு:
மேற்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. வலது புறம் விநாயகர் சன்னதியும், இடதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சன்னதியும் அமைந்துள்ளன. அருகே அரசமரமும், அதன் அடியில் நாகர்களும் அமைந்துள்ளன. இவற்றில் பக்தர்கள் தாலிச்சரடு உள்ளிட்ட காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். சிற்ப வேலைப்பாடுடன் கூடிய மகாமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதையடுத்து அன்னை நாகம்மன் உருவம் மேற்கு முகமாய் மெய்சிலிர்க்கும் வண்ணம் காட்சி தருகின்றது. அகன்ற நாகமாய் அன்னை கருணையோடு காட்சி தருகின்றாள். அன்னையின் தலைப்பகுதி மட்டும் 5 அடி அகலமும், 3அடி நீளமும் கொண்டதாகும்.
அருகே வலதுபுறம் அழகிய திருக்குளம் நீர் வேண்டி நிற்கிறது. பின்புறம் நவக்கிரக சன்னதி தனியே அமைந்துள்ளது. விநாயகர் சன்னதியின் எதிரில் அஷ்டலட்சுமி சன்னதி அமைந்துள்ளது. இச்சிறப்புமிகு ஆலயத்தின் குடமுழுக்கு விழா 108 பசுக்களைக் கொண்ட கோ பூஜையுடன், கடந்த 2013ஆம் ஆண்டு இனிதே நடந்து முடிந்தது.
வட்டப்பாறையும், முத்தாம்பிகையும்:
தும்பூர் தாங்கல் நாகம்மன் ஆலயத்திற்குத் தென்மேற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் இவ்வாலயத்தோடு தொடர்புடைய பழம்பெரும் தேவாரத் தலமான, திருவாமாத்தூர் அமைந்துள்ளது. திருவாமாத்தூர் அருள்மிகு முத்தாம்பிகை உடனாய அருள்மிகு அபிராமேஸ்வரர் ஆலயம், மாடுகள் தற்காத்துக் கொள்ள கொம்புகள் பெற்ற தலமாகும்.
தனிக்கோயிலாக விளங்கும் முத்தாம்பிகை அம்மனே நாகமாக வந்து தர்மத்தையும், சத்தியத்தையும் நிலை நாட்டியதாகக் கூறப்படுகின்றது.
தும்பூர் தாங்கலில் வெளியே காட்சி தரும் நாகத்தின் நிறைவுப் பகுதியான வால், முத்தாம்பிகையின் திருமேனியில் இன்றும் காணப்படுகிறது. இதனை அபிஷேக காலங்களில் மட்டுமே காண முடியும். இந்த அம்மனின் அருகே இடதுபுறம் அமைந்துள்ள பகுதியே வட்டப்பாறை ஆகும். இது பெரிய வடிவத்தில் மேடையாக அமைந்துள்ளது.
இதன் மீது பொய் சத்தியம் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்பது இன்றளவும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.
இதே ஊரில் கௌமார மடம் நிறுவிய வண்ணச்சரம் தண்டபாணி சுவாமிகளின் ஜீவ சமாதியும், திருமடம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகத்தின் நடுப்பகுதி:
தும்பூரில் தாங்கல் நாகம்மனின் தலைப்பகுதி ஆலயமாக விளங்குவது போல, நடுப்பகுதி ஆலயத்தின் பின்புறம் சுமார் 300 அடி தூரத்தில் தெற்கே பூமிக்கு வெளியே காணப்படுகிறது. இது மண்வெட்டியால் வெட்டப்பட்டு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
பல நூறாண்டுகளுக்கு முன்பு வயதான ஒருவர் வயலில் மண்ணைச் சீர் செய்த போது, ஏதோ ஒரு பொருளின் மீது வெட்டுப்பட, ரத்தம் பீறிட்டு வந்தது. அதைக் கண்ட அந்த விவசாயி மயக்கமடைந்து விழுந்தார்.
விவரம் அறிந்து அங்கு வந்த ஊர்மக்கள் உண்மையை உணர்ந்து அம்மனிடம் மன்னிப்பு வேண்டி நின்றனர். அதன்பின் பீறிட்ட இரத்தம் நின்று போனது. ஆனால் அந்த வடு மட்டும் இன்றும் மாறாமல் நிலைத்துவிட்டது. அதனையே இன்று நாம் கண்டு வியக்கலாம்.
இதன்மூலம் நாகத்தின் அளவு பிரம்மாண்டமானது என்பதையும், அது பூமிக்குள்ளாகவே நீண்டு அது சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு சென்று அதன் வால் பகுதி திருவாமாத்தூர் முத்தாம்பிகை அம்மனின் திருமேனியில் படும் வரை கல் நாகமாகவே நீண்டு நெடிது வளர்ந்துள்ளதையும் உறுதியாக நம்ப முடிகிறது.
பரிகாரத் தலம்:
ராகு கேது தோஷங்கள், காள சர்ப்ப தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களுக்கும் கண்கண்ட பரிகாரத் தலமாக தும்பூர் தாங்கல் ஆலயம் திகழ்கின்றது. ஆலயத்தின் வடமேற்கே அமைந்துள்ள இயற்கையான புற்றில் இதற்கான பரிகார பூஜை செய்யப்படுகிறது.
உறவினர்களால் வஞ்சிக்கப்படுவோர் எவரும் இங்கு வந்து மனமுருக வேண்டுதல் செய்து சென்றால், நிச்சயம் நியாயத் தீர்ப்பு கிடைக்கும் என்பது இன்றளவும் அசைக்க முடியாத நம்பிக்கையாகவே உள்ளது. இதேபோல, விரக்தி அடைந்து துன்பப்படும் எவரும் நம்பிக்கையோடு வந்து வழிபட்டால், எவருக்கும் வாழ்வில் இன்பம் அளித்து காப்பவள் அன்னை என்பதை பல்வேறு பக்தர்களும் அனுபவப்பூர்வமாக கண்டுவருகின்றனர். அதனால் பக்தர்கள் கூட்டமும் கூடிக் கொண்டே வருகிறது.