எந்த மரத்தடி பிள்ளையார் என்ன வரம் தருவார்?
ஆலமரத்தடியிலும், அரசமரத்தடியிலும், வன்னிமரம், வேப்பமரம், சந்தன மரம் என்று பல மரங்களின் அடியிலும் வீற்றிருப்பவர் பிள்ளையார். வெயிலும், மழையிலும் நனைத்தபடியே மக்களுக்கு அருள் புரிந்து வருகிறார். சாதாரண மஞ்சளிலும், பசுஞ்சாணத்திலும் பிடித்து வைத்தால் அவர் பிள்ளையார். அவருக்கு அருகம்புல் சாற்றி மனமுருகி வழிபட்டு வந்தால் நாம் கேட்ட வரங்களை கொடுப்பார் என்பது ஐதீகம்.
விநாயகப் பெருமானுக்கு சங்கடஹர சதுர்த்தி மிகவும் விஷேசமான வழிபாடு. சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை நினைத்து விரதமிருந்து முறையாக யார் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்பட பல தோஷங்கள் நீங்கும். அதோடு, கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம். கஷ்டங்கள் தீரும்.
சங்கடம் என்றால் துன்பம். ஹர (கர) என்பதற்கு அறுப்பவன் என்று பொருள். சதுர்த்தி என்றால் அமாவாசை, பெர்ணமிக்கு பின்னர் வரும் நான்காவது நாள் என்று பொருள். விரதமிருந்து வழிபடும் போதும் சங்கடங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் யாவையும் விநாயகப் பெருமான் அழிப்பார். இதுவே சங்கடஹர சதுர்த்தி நாளாகும். இந்த நாளில் விநாயகருக்குரிய மந்திரத்தை சொல்லி வழிபட்டு வர வேண்டிய வரம் கிடைப்பதோடு, நினைத்த காரியம் முடியும் என்பது ஐதீகம்.
எந்த மரத்தடி பிள்ளையாரை எப்பொழுது வணங்கி வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்…
அரசமரத்தடி பிள்ளையார்:
அரசமரத்தடியில் வீற்றியிருக்கும் பிள்ளையாரை எப்பொழுது வணங்கினாலும் பலன் கிடைக்கும். மேலும், மூல நட்சத்திர நாளில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையை படைத்து வழிபட்டு வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
பூச நட்சத்திர நாளில் அரசமர பிள்ளையாருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்தால் விளைபொருள் மற்றும் பூமியால் லாபம் கூடும். பண பற்றாக்குறை இருக்காது.
ஆலமரத்தடி பிள்ளையார்:
ஆலமரத்தடி விநாயகரை வழிபட்டால் ஞாலம் போற்றும் வாழ்வு அமையும். மகம் நட்சத்திர நாளில் சித்ரான்னங்கள் (கலந்த சாதம்) நிவேதனம் செய்து வழிபட்டு வந்தால் தீராத நோயும் தீரும்.
வன்னி மரத்தடி பிள்ளையார்:
வன்னிமரத்தடி பிள்ளையாரை வழிபட்டு வந்தால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். 5 தீபங்கள் ஏற்றி வழிபட கன்னிப் பெண்களின் கவலை தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
அவிட்ட நட்சத்திரத்தன்று வன்னிமரத்தடி பிள்ளையாரை நெல் பொரி கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
புன்னை மரத்தடி பிள்ளையார்:
புன்னை மரத்தடி பிள்ளையாரை ஆயில்ய நட்சத்திர நாளில் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டு வர கணவன் – மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு நீங்கும். மேலும், வறுமையில் வாடும் நோயாளிகளுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றவர்கள் கூட ஒன்று சேரும் வாய்ப்பு உண்டு.
வேப்ப மரத்தடி பிள்ளையார்:
வேப்பமரத்தடியில் வீற்றியிருக்கும் பிள்ளையாரை வழிபட்டு வர வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வளர்ச்சிக் கூடும். தயிர் சாதத்தை நைவேத்தியமாக படைத்து பிரசாதமாக கொடுத்து வந்தால் தீராத கடனும் தீரும். ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும்.
உத்திரட்டாதி நட்சத்திர நாளில் தீபம் ஏற்றி வழிபட பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிட்டும்.
நெல்லி மரத்தடி பிள்ளையார்:
நெல்லி மரத்தடி பிள்ளையாரை வழிபட்டு வந்தால் நீங்கள் சொல்லும் சொல்லுக்கு மதிப்பு கூடும். வெற்றி கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெய் கொண்டு 108 விளக்குகள் ஏற்றி வழிபடுவதோடு ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்தால் இரும்பு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெண் குழந்தை இல்லை என்று கவலைப்படும் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறக்கும்.
மாமரப் பிள்ளையார்:
கேட்டை நட்சத்திர நாளில் விபூதிக் காப்பிட்டு, ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உடை, உணவு என்று கொடுத்து வந்தால் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். எதிரிகள் தொல்லை இருக்காது. நண்பர்களுக்குள் இருந்த போட்டி, பொறாமை மாறும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
மகிழ மரத்தடி பிள்ளையார்:
அனுஷம் நட்சத்திர நாளில் மாதுளம் பழத்தின் முத்துக்கள் கொண்டு மகிழ மரத்தடி பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்தால் குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவார்கள். வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள் நலமுடன் இருப்பார்கள்.
நாவல் மரத்தடி பிள்ளையார்:
நாவல் மரத்தடி பிள்ளையாரை வழிபாடு செய்தால் குடும்ப ஒற்றுமை கூடும். ஆனைமுகனுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் பொன், பொருள் சேரும்.
ரோகிணி நட்சத்திர நாளில் ஏழை, எளிய மக்களுக்கு வெண்ணெய் தானம் செய்தால் பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள். அதே போல் பிரிந்திருந்த குடும்ப உறவுகள் ஒன்று சேருவார்கள்.
வில்வ மரத்தடி பிள்ளையார்:
சித்திரை நட்சத்திர நாளில் வில்வ மரத்தடி பிள்ளையாரை வழிபட்டு ஏழைகளுக்கு தானம் செய்தால் பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள்.
சந்தன மரத்தடி பிள்ளையார்:
சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் சந்தன மரத்தடி பிள்ளையாரை பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வியாபாரம் அமோகமாக இருக்கும்.
இலுப்பை மரத்தடி பிள்ளையார்:
ரேவதி நட்சத்திர நாளிலும், செவ்வாய் கிழமைகளிலும் இலுப்பை மரத்தடி பிள்ளையாருக்கு பசு நெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபடுவதோடு, மஞ்சள் நிற ஆடைகளை சிறுமியர்களுக்கு தானம் கொடுத்தால் வீடு கட்டுபவர்கள் எந்தவித தடையுமின்றி கட்டி முடிக்கலாம்.