எம பயம் நீங்க காசி கால பைரவர் கறுப்பு கயிறு!

135

எம பயம் நீங்க காசி கால பைரவர் கறுப்பு கயிறு!

வாரணாசியில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்று தான் காசி கால பைரவர் கோயில். இந்த கோயிலில் தான் கால பைரவர் கடுமையான மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். கால் என்றால் இறப்பு மற்றும் விதி ஆகிய இரண்டை குறிக்கும். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய 3 வேலைகளையும் செய்வதால், பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

கால பைரவரைக் கண்டால் மரணம் கூட அஞ்சுவதாக நம்பப்படுகிறது. நாய்-ஐ வாகனமாக கொண்டுள்ளார். கழுத்தில் மண்டை ஓடுகளுடன், ஒரு கையில் கத்தி மற்றொரு கையில் கொடியவனின் தலையை கொண்டுள்ளார். யாராக இருந்தாலும், காசியில் வாழ வேண்டும் என்றால், கால பைரவரின் அனுமதி பெற்றால் மட்டுமே முடியும் என்பது ஐதீகம்.

சனி பகவானுக்கு குருவாக விளங்கக் கூடியவர் கால பைரவர் தான். இவரை வணங்கினால் தனது சிஷ்யகோடிகளிடம் சொல்லி சனி பகவானின் பாதிப்புகளை விளக்குவார் என்பது நம்பிக்கை. சனீஸ்வரன், யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கௌரவக் குறையை அடைந்தார். இதையடுத்து, சனீஸ்வரனின் தாயாரான சாயா தேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு வந்தார். அவரது அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி அடைந்தார்.

தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு உடனடியாக அருள் புரியும் கடவுளாக காவல் தெய்வமாக கால பைரவர் இருக்கிறார். பைரவர் பூஜை செய்தால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஜாகத்தில் எந்த கிரகத்தால் தோஷம் இருக்கிறதோ அல்லது எந்த கிரக அமைப்பு பலவீனமாக இருக்கிறதோ அதற்குரிய பைரவரை வணங்கி வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும்.

நவக்கிரக பைரவர்கள்:

நவக்கிரகங்கள் – பிராண பைரவர் – பைரவரின் உபசக்திகள்

சூரியன் – சுவர்ணாகர்ஷண பைரவர் – பைரவி

சனி – குரோதன பைரவர் – வைஷ்ணவி

ராகு – சம்ஹார பைரவர் – சண்டிகை

கேது – பீஷண பைரவர் – சாமுண்டி

செவ்வாய் – சண்ட பைரவர் – கௌமாரி

புதன் – உன்மத்த பைரவர் – வராஹி

குரு – அசிதாங்க பைரவர் – பிராமஹி

சந்திரன் – கபால பைரவர் – இந்திராணி

சுக்கிரன் – ருரு பைரவர் – மகேஸ்வரி

 

காசியில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை  பாதுகாக்கின்றனர். அந்த 8 பைரவர்களும், வாகனங்களும் இதோ…

பைரவர் – பைரவரின் சக்தி – வாகனம்

  1. அசிதாங்க பைரவர் – பிராமஹி – அன்னம்
  2. ருரு பைரவர் – மகேஸ்வரி – ரிஷபம்
  3. குரோதன பைரவர் – வைஷ்ணவி – கருடன்
  4. சண்ட பைரவர் – கௌமாரி – மயில்
  5. சம்ஹார பைரவர் – சண்டிகை – நாய்
  6. பீஷண பைரவர் – சாமுண்டி – சிம்மம்
  7. கபால பைரவர் – இந்திராணி – யானை
  8. உன்மத்த பைரவர் – வராஹி – குதிரை

இப்படி விதவிதமான வாகனங்களில் காட்சி தரும் பைரவர் ஒரு சில கோயில்களில் எந்த வித வாகனமும் இல்லாமல் தனியாய் காட்சியளிக்கிறார்.

 

காசியில் எல்லையை தொடும்போது எமனும் திரும்பி போவார் என்பது ஐதீகம். காசி கறுப்பு கயிறு எமபயம் நீங்கி அனைவரையும் வாழ வைக்கின்றது.

ஒரே பைரவர் 8 வகையான பணிகளை 8 திசைகளில் ஏற்கும் போது அவர் அஷ்ட பைரவர்களாகத் தோன்றுகிறார். எனவே, அவரே 64 காலங்களிலும், 64 வகையான பணிகளை ஏற்று செய்யும் போது 64 விதமாக தோற்றமளிக்கிறார். நீலகண்ட பைரவர், கேர பைரவர், குல பைரவர், ருத்ர பைரவர், விஷ்ணு பைரவர், சசிவாகன பைரவர், பயங்க பைரவர், கபால பைரவர், உன்மத்த பைரவர், மேகநாத பைரவர், பரம பைரவர், நானாரூப பைரவர் உள்பட 64 வகையான பைரவ மூர்த்திகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.