எம பயம் நீங்க வழிபட வேண்டிய சிவன் கோயில்!

39

எம பயம் நீங்க வழிபட வேண்டிய சிவன் கோயில்!

கர்நாடகா மாநிலம் உத்தர் கன்னடா மாவட்டத்திலுள்ள பாட்கால் என்ற ஊரில் உள்ள கோயில் முருதேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் முருதேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தை முதல் தேதியில் தொடங்கி 8 நாள் பிரம்மோற்சவம், தேரோட்டம், சிவராத்திரி, கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் கோயிலில் திருவிழா நடக்கிறது.

உலகத்திலேயே 2-வது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் (முருதேஸ்வரர்) நகரம் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான்.

சிறு குன்றின் மீது எழில் கொஞ்சும் பச்சை புற்கள் சூழ அமைந்திருக்கிறது முருதேஸ்வர் ஆலயம். மூன்று புறங்களிலும் அரபிக் கடல் சூழ்ந்திருக்க அழகிய தீபகற்பமாய் திகழ்கிறது முருதேஸ்வர் ஆலயம்.

ராஜகோபுரம்:

முருதேஸ்வர் ஆலயத்தின் ராஜகோபுரம்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கோபுரமாக கருதப்படுகிறது. அதோடு உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாகவும் முருதேஸ்வர் ஆலயத்தின் ராஜகோபுரம் அறியப்படுகிறது.

பிரமாண்டமான முருதேஸ்வர்:

பிரம்மாண்டமாக 123 அடியுடன் காட்சியளிக்கும் இந்த சிவன் சிலை உலகிலேயே 2-வது பெரிய சிவன் சிலையாக அறியப்படுகிறது. மேலும் சூரிய ஒளி நேரடியாக சிலை மேல்படும்போது ஒளிரும்படியாக இந்த சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கணபதி, நாகர், ஆஞ்சநேயர், சுப்பிரமணியர், நவக்கிரகம், தத்தாத்ரேயர் சன்னதிகள் உள்ளன. ராட்சத சிவன் சிலையின் கீழ் மற்றொரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சிவபார்வதியை ராமர், சீதா, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் பூஜிப்பது போன்ற சிலை வடிக்கப்பட்டுள்ளது. சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

முருதேஸ்வர் கடற்கரை:

அரபிக்கடல் அமைதியாகவும், அழகாகவும், காணப்படுவதால் நீங்கள் கடலில் நீந்துவது, படகு சவாரி செய்வது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். கோயிலை சுற்றி உள்ள இடங்களில் மக்கள் சிறு உலா போகலாம், அதோடு அரபிக் கடலில் ஆதவன் மறைந்துபோகும் கண்கொள்ளா காட்சியை பார்த்து மகிழலாம்.

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வேலை கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும், 108 கலச அபிஷேகம் செய்யப்படுகிறது. எம பயம் நீங்க சுவாமிக்கும் பார்வதி அம்பாளுக்கும் ருத்ராபிஷேகம் செய்கின்றனர். சுவாமிக்கு நெய்வேத்தியமாக எள், நெய், வெல்லம் பச்சையப்பயிறு பொடி ஏலக்காய் சேர்த்த பஞ்ச கஜ்ஜாய பிரசாதம் படைக்கப்படுகிறது.

ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் நாகர் சன்னதியில் பாக்குப் பூ செலுத்தி பரிகாரம் செய்கின்றனர். பக்தர்களை குடும்பத்துடன் மண்டபத்தில் அமர வைத்து சர்வதே பூஜை என்னும் தோஷம் நீக்கும் பூஜை நடத்துகின்றனர். முருகேஸ்வரர் சன்னதியில் அணையா விளக்கு உள்ளது. இதில் எண்ணெய் ஊற்றி, காசு போட்டு பக்தர்கள் தங்களது முகத்தை எண்ணெயில் பார்க்கின்றனர். இவ்வாறு செய்தால் செல்வ விருத்தி உண்டாகும் என்றும் நம்புகின்றனர்.

இந்தக் கோயிலில் 20 நிலைகளும், 237.5 அடி உயரமும் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இரண்டு அடி உயரத்தில் மூலவர் முருகேஸ்வரர் அருள் பாலிக்கிறார். ஆனால், கோயில் பின்புறம் 123 அடி உயரத்தில் சிவபெருமான் 4 கைகளுடன் அமர்ந்த நிலையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இது உலகின் 2 ஆவது பெரிய சிவன் சிலை. இதன் எதிரில் ராட்சத நந்தி உள்ளது. ராவணன், கணபதியிடம் லிங்கத்தை வழங்குவது, சித்தர்கள் தவக்காட்சி, கைலாயத்தில் சிவன், கீதா உபதேசம், சூரியபகவான் சிலைகளும் காணப்படுகிறது.

பிராணலிங்கம் ஒன்றை இலங்கைக்கு கொண்டு செல்ல கயிலைமலையில் ராவணன் தவமிருந்தான். அதைக் கொண்டு சென்றால் தேவர்கள் செயலிழப்பர் என்பதால், நாரதர் இந்திரனிடம் முறையிட்டார். இந்திரன் இது பற்றி சிவனிடம் முறையிடச் சென்றான். அதற்குள் ராவணன், அந்த லிங்கத்தை சிவனிடம் பெற்றுவிட்டான்.

ராவணா இந்த லிங்கத்தை தரையில் வைக்க கூடாது, வைத்தால் எடுக்கவே முடியாது, நேராக இலங்கை கொண்டு செல் என்று நிபந்தனை விதித்தார். ஆனால், லிங்கத்தை கைப்பற்ற விஷ்ணு முடிவு செய்தார். ராவணன் சந்தியாவந்தனம் செய்யத் தவற மாட்டான் என்பது அவருக்குத் தெரியும். இதைப் பயன்படுத்தி அவன் இலங்கை சென்று சேர்வதற்குள் தன் சக்கரத்தை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் நிறுத்தினார்.

இதையடுத்து இருள் சூழ்ந்தது. அந்த இருளை மாலை நேரம் என்று கருதி ராவணன் சந்தியாவந்தனம் செய்ய முடிவு செய்தான். இதனிடையே விநாயகர் அங்கு பிரம்மச்சாரி வேடத்தில் வந்தார். அவரிடம் இந்த லிங்கத்தை கையில் வைத்துக் கொள் நான், சந்தியாவந்தனம் செய்யும் வரை கீழே வைத்துவிடாதே என்றான். ஐயா! லிங்கத்தின் பாரம் தாங்க முடியாவிட்டால் 3 முறை அழைப்பேன். நீர் வராவிட்டால் லிங்கத்தை கீழே வைத்துவிடுவேன் என்றார் பிரம்மச்சாரியாக வந்த விநாயகர்.

ராவணன் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தான். தேவர்கள் 3 உலகங்களின் பாரத்தையும் பிராணலிங்கத்தின் மீது செலுத்தினர். பாரம் தாங்க முடியாத விநாயகர், மூன்று முறை ராவணனை அழைத்தார். ராவணன் வராத காரணத்தால் விநாயகர் லிங்கத்தை கீழே வைத்துவிட்டார். ஆத்திரமடைந்த ராவணன் விநாயகரின் தலையில் ஓங்கி குட்டினான்.

கீழே வைக்கப்பட்ட லிங்கத்தை 20 கைகளாலும் எடுக்க முயன்றான். அவன் தூக்கிய வேகத்தில் நான்கு துண்டுகளாக உடைந்து நான்கு விழுந்தது. அதில் ஒரு இடம் தான் முருகேஸ்வரர் இங்கு சிவாலயம் எழுப்பப்பட்டது.