எம பயம் நீங்க ஸ்ரீஞீலிவனநாதர் வழிபாடு!

99

எம பயம் நீங்க ஸ்ரீஞீலிவனநாதர் (ஞீலிவனேஸ்வரர்) வழிபாடு!

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஞீலிவனநாதர் (ஞீலிவனேஸ்வரர்) கோயில். திருமண வரம், சந்தான பாக்கியம் ஆகிய வரங்களோடு நீண்ட ஆயுளையும் அளித்து, பேரன், பேத்தி என்று வாழும் யோகத்தையும் அளிப்பவர் ஸ்ரீ ஞீலிவனநாதர்.

எமனுக்கு பாவ விமோட்சனம்:

மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்த எமனை திருக்கடையூரில் வைத்து சிவபெருமான் வதம் செய்தார். எமன் இல்லாத பூவுலகம், மரணம் இல்லாமல் அனைத்து உயிர்களும் அதிகரித்துக் கொண்டே இருந்ததாம். இப்படி உயிர்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், கவலை கொண்ட பூமாதேவி, சிவபெருமானிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து, எமனுக்கு பாவ விமோட்சனம் கொடுத்து அருள் பாலித்தார்.

இதனால், ஸ்ரீஞீலிவனநாதர் (ஞீலிவனேஸ்வரர்) கோயிலில் எமனுக்கு தனி சன்னதியும் உள்ளது. ஆதலால், இந்த கோயிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு எம பயம், துர்பயம் ஆகியவை உண்டாகாது என்று வரலாறு கூறுகிறது. மேலும், இந்த கோயிலில் ஸ்ரீஞீலிவனநாதரை வணங்கி ஆயுஷ்ய ஹோமம் மற்றும் மிருத்யுஞ்சய ஹோமம் செய்து கொள்பவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். இந்த கோயிலில் நவக்கிரகங்கள் இல்லாத நிலையில், நந்திக்கு அருகில் உள்ள 9 குழிகளில் எண்ணெய் விட்டு தீபம் அதையே நவக்கிரகமாக வழிபட்டு வரும் பழக்கம் வந்துள்ளது.

ஸ்ரீஞீலிவனநாதர்:

ஸ்ரீஞீலிவனநாதர் (ஞீலிவனேஸ்வரர்) கோயிலில் உறையும் வாழை மரங்கள் சப்த கன்னியரின் அம்சம் என்றழைக்கப்படுகின்றன. கவுமாரி, வைஷ்ணவி, பிராம்மி, இந்திராணி, மாகேஸ்வரி, வாராகி, சாமுண்டி என்று 7 கன்னியரும் ஒன்று கூடி பார்வதி தேவியிடம் திருமண வரம் வேண்டி தவம் இருந்ததாகவும், அவர்கள் முன் தோன்றி பார்வதி தேவி அவர்களுக்கு வரம் கொடுத்து வாழை மர வடிவில் அந்த கோயிலிலேயே குடி கொண்ட தாகவும் வரலாறும் கூறப்படுகிறது. அந்த கோயிலின் வாழை மரம் இருக்கும் பகுதியில் சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார் என்று கூறப்படுகிறது. ஆதலால், இந்த கோயிலில் வாழை மரங்களுக்கு பூஜை செய்யும் வழக்கம் உள்ளது. மேலும், வாழை பரிகார பூஜையும் செய்யப்படுகிறது.

வாழை பூஜை, பரிகாரம்:

வாழை மரங்களுக்கு பூஜையும், பரிகாரமும் செய்யப்படுவதால், திருமணத் தடை விலகும், நாகதோஷம் நிவர்த்தியாகும், நீண்ட ஆயுள் கிடைக்கும். கோயிலில் வளரும் வாழையின் இலை, காய் மற்றும் கனி என்று அனைத்துமே இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ஒருவேளை, ஈசனைத் தவிர வேறு யாரேனும் வாழையின் இலை, பழங்கள் ஆகியவற்றை பறித்தாலோ அல்லது உண்டாலோ அவர்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்படும் என்பது கோயிலில் உள்ளவர்களின் கருத்தாக கூறப்படுகிறது.

ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைக்கப்படுகின்ற ஒரு வகைக் கல்வாழை. ஆதலால், இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் வாழையை, தண்ணீரில் விட்டு விடுகின்றனர்.

7 வகை தீர்த்தங்கள்:

கல்யாண தீர்த்தம், விசாலாட்சி தீர்த்தம், எம தீர்த்தம், அக்னி தீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம், அப்பர் தீர்த்தம் மற்றும் தேவ தீர்த்தம் என்று 7 வகை தீர்த்தங்கள் உள்ளன. அதில், அப்பருக்கு பொதி சோறு கொடுத்த இடம் அப்பர் தீர்த்தம். அப்பரின் பசியை சிவபெருமான் (ஈஸ்வரன்) தீர்த்து அருளியதால் இந்த கோயிலில் உள்ள ஈசன் சோற்றுடைய ஈஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த கோயிலில் கல்(யாண) வாழைகளுக்கு முன்னே அமர்ந்து செய்யும் பரிகார பூஜை மற்றும் தோஷ நிவர்த்தி பூஜை ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமண வாழ்க்கை அமைவதோடு, நீண்ட ஆயுளும் கிடைக்க இந்த கோயிலுக்கு சென்று வருவது நன்மை அளிக்கும்.