எல்லா வேண்டுதலையும் நிறைவேற்றி தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்!

69
அனைத்து தடைகளும் நீங்கி வெற்றியைத் தரக்கூடிய ஹனுமன் ஸ்லோகங்கள்!

எல்லா வேண்டுதலையும் நிறைவேற்றி தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆண்டவா… என் குடும்பம் எப்போதும் ஒற்றுமையாக இருக்கணும்! பகவானே… என் பசங்க நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கி பாஸ் ஆகணும்! கடவுளே… எனக்கு கல்யாண பாக்கியம் குடுப்பா…! ஆயுளும் ஆரோக்கியமும் அளிக்கணும் தாயே! தெய்வமே… தீவினை எல்லாம் தீய்ஞ்சு போக அருள்புரி! இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல் இருக்கும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு கோரிக்கையையும் வெவ்வேறு கடவுள்முன் வைப்பீர்கள்.

உங்கள் வேண்டுதல் எதுவானாலும் சரி… வெவ்வேறு கோயிலுக்குப் போக வேண்டாம். எல்லாவற்றையும் ஒரே தலத்தில், ஒரே கடவுளிடம் சொன்னால் போதும்; விரைவிலேயே அனைத்தும் ஈடேறிவிடும்! என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!

அந்த ஆனந்தத்தை நீங்கள் அனுபவித்து உணர வேண்டுமானால், நீங்கள் செல்ல வேண்டிய தலம், சென்னை தாம்பரம் அருகே உள்ள கௌரிவாக்கம். அங்கேதான் அருளாட்சி செய்கிறார் பஞ்சமுக அனுமன். பொதுவாக பஞ்சமுக அனுமன் கோயில்களில், அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில் நான்கு முகங்கள் நாற்புறம் நோக்கி இருக்க, மற்றொரு முகம் அவற்றின் மேலமைந்து இருக்கும்.

ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம். அப்படி ஓர் அபூர்வ அமைப்பில் இத்தலத்தில் காணப்படுபவர்தான் உங்களின் எல்லா கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய (பஞ்சமுக) அனுமன். இப்படி ஒரு வித்தியாசமான கோலத்தில் இவர் இங்கே கோயில் கொண்டது எப்படி? குடியிருப்புகள் மிகக் குறைவாக இப்பகுதி இருந்த காலகட்டம்.

இந்து மதத்துக்கு உரிய கோயில்கள் இங்கே குறைவாகவே இருந்தது. அதுவும் வெகுதொலைவு போய் கும்பிடணும். அப்போதான் இப்பகுதியில் வசித்த ஒரு பக்தருக்கு எல்லா வரங்களையும் தரக்கூடிய தெய்வத்துக்கு ஒரு கோயில் கட்டினால் என்ன? அப்படின்னு ஓர் எண்ணம் வந்துச்சு. அப்போ அவர் கனவுல பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை பண்ணலாம்னு அசரீரி மாதிரி கேட்டிருக்கு உடனடியா அப்படி ஒரு சிலையைத் தேடிப்போனபோது, வித்தியாசமாக ஒரே நேர்க்கோட்டுல, ஐந்து முகங்களும் அமைந்த, பக்தர்களைத் தன் ஐந்து முகங்களாலும் பார்க்கிற மாதிரியான அபூர்வமான அமைப்புள்ள இந்த அனுமன் சிலை கிடைச்சிருக்கு.

சிலை வந்தாச்சு. கோயில்கட்ட இடம் பார்த்தாச்சு. அப்புறம் என்ன பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டியதுதான் பாக்கி. இப்படித்தான் அப்பகுதியில் இருந்த நாங்க எல்லோருமே நினைச்சோம். ஆனா, அங்கே கோயில் கட்ட முடியாதபடி பல்வேறு சர்ச்சைகள் வேற்று மதத்தவரால் ஏற்படுத்தப்பட்டு, கோயில் அமைக்க தடைபோட்டுட்டாங்க. ரெண்டு வருஷம் போராடியும் தீர்வு கிடைக்கவே இல்லை.

கடைசியில – சஞ்சீவி மலையையே தூக்கிட்டு வந்த அனுமன், நம்ப பாரத்தைத் தாங்க மாட்டாரா என்ன?ன்னு நினைச்சு, அவர்கிட்டேயே பொறுப்பை ஒப்படைச்சுட்டோம். சொன்னா நம்பமாட்டீங்க… அதன்பிறகு மளமளன்னு எல்லாம் நடந்து முடிஞ்சு அனுமன் ஜம் என்று பிரதிஷ்டையாகி கும்பாபிஷேகமும் நடந்துச்சு.

இதோ இப்போ வரைக்கும் ஏகப்பட்ட தடைகளைத்தாண்டி கோயில் வளர்ந்து கம்பீரமா நிற்குது. இதுக்குக் காரணம், நாங்க யாரும் இல்லை. தன் வால் கோட்டையைத் தானே தனக்கு சிம்மாசனமா அமைச்சுக்கற அனுமன், இந்த கோயிலையும் தன் இருப்பிடமா தானே அமைச்சுகிட்டு எழுந்தருளி இருக்கார் என்பதுதான் உண்மை! என்று அப்பகுதிவாசிகள் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரே ஒரு சன்னதியோடு இருந்த இந்தக் கோயிலில் இன்று விஜய கணபதியும் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். மூன்றுநிலை ராஜகோபுரம் ராமநாமத்தைச் சொல்லும் அனுமன்போல் கம்பீரமாக நிமிர்ந்து நின்று நம்மை அழைக்கிறது. ஜடாரிமுன் பவ்யமாக தலை வணங்கும் பாவத்துடன் ராஜகோபுரத்தின் வழி உள் நுழைகிறோம்.

நேர் எதிரே உள்ள சன்னதியில் ஐந்து முகங்கள், பத்துக்கரங்களுடன் அருள்நிறை விழிகளோடு அன்பர்களுக்கு அருளக் காத்திருக்கிறார் அனுமன். சின்னஞ்சிறு சன்னதி. அதன் முன்னே சென்று நின்றதும், பக்தர்களுக்கு எளியவராக சிலை வடிவில் காட்சிதரும் அனுமன்மீது நம் பார்வை படர்கிறது.

மறுநிமிடம் அந்த அஞ்சுமுக அனுமன் சட்டென விஸ்வரூபம் எடுத்து தன்பார்வையை நம்மீது பதித்து நெஞ்சு முழுவதும் நிறைந்த அஞ்சேல் என்று அபயக்கரம் நீட்ட உடல் சிலிர்க்கிறது. பெரும்பாரமாக இருந்த கஷ்டங்கள் அப்போதே நீங்கி விட்டது போன்று உணர்வு எழ, காற்றின் மகன் வந்து அமர்ந்துவிட்டதில் மனம் லேசாகிறது.

கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரக தோஷமும் போக்கி எல்லா நலமும் தரும். நரசிம்ம முகம் தீமையைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், இவர் சன்னதிமுன் நிற்கும் ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டியதைக் கேட்கிறார்கள்.

மெதுவாக சன்னதியை வலம் வந்தால் ஏராளமான மட்டைத் தேங்காய்கள் ஓரிடத்தில் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அமாவாசைகளில் இங்கு வரும் பக்தர்கள் காரியத்தடைகள் விலகவும், மணப்பேறு, மகப்பேறு வேண்டியும் அனுமனை வழிபட்டுக் கட்டியவையாம் இவை, ஒவ்வொரு அமாவாசையின்போதும் அதிகரித்து அனுமன் வால்போல் நீண்டு இன்று ஆயிரக்கணக்கினையும் தாண்டியுள்ளதே, இந்த அனுமனின் ஆற்றலுக்கு சாட்சியாக இருக்கிறது.

அதிகபட்சம் தொண்ணூறு நாட்களுக்குள் வேண்டுதல் நிறைவேறிவிடுகிறதாம். அனுமனின் ஒவ்வொரு முகத்திற்கும் உரிய தனிச்சிறப்பாக, வராகஜெயந்தி, நரசிம்மஜெயந்தி, கருடஜெயந்தி, அனுமத்ஜெயந்தி, ஹயக்ரீவ ஜெயந்தி என தனித்தனியே எல்லா விசேஷங்களும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தினமும் பிரசாத விநியோகமும் உண்டாம்.

இத்தலத்தில் கோயில் கொண்டு அஞ்சு முகத்துடன் பக்தர்தம் நெஞ்சம் நிறைந்து அருளும் அனுமன், கொஞ்சமும் குறைவிலாது பக்தர்கட்கு அளிக்கிறார் தன் குளிர்வான அருளை. சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் 6 கி.மீ.யில் உள்ள கௌரிவாக்கத்தில், பழனியப்பா நகரில் இருக்கிறது இந்தப் பஞ்சமுக அனுமன் ஆலயம். பிராட்வே மற்றும் தி.நகரிலிருந்து கிழக்கு தாம்பரம் செல்லும் பேருந்துகளில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.