ஒரே கோயிலில் 2 அம்மன்களுடன் நர்த்தன வல்லபேஸ்வரர்!

85

ஒரே கோயிலில் 2 அம்மன்களுடன் நர்த்தன வல்லபேஸ்வரர்!

கடலூர் மாவட்டம் திருக்கூடலையாற்றூர் என்ற ஊரில் உள்ள கோயில் நர்த்தன வல்லபேஸ்வரர். இந்தக் கோயிலில் நர்த்தன வல்லபேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். தாயார், ஞானசக்தி, பராசக்தி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தில் 13 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. மேலும், சித்திர மாதம் முதல் 3 தேதியில் மூலவர் மீது சூரிய ஒளி பட்டு சூரிய பூஜை நடக்கிறது. சோழர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 214ஆவது தேவாரத்தலம் ஆகும்.

பொதுவாக சிவன் கோயில்களில் சிவபெருமான் உடன் ஒரு அம்மன் இருப்பது வழக்கம். ஆனால், மிக அபூர்வமாக சில கோயில்களில் இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. அதில் இந்தக் கோயிலும் ஒன்று நர்த்தன வல்லபேஸ்வரர், ஞானசக்தி மற்றும் பராசக்தி ஆகிய இரு அம்மனுடன் இந்தக் கோயிலில் அருள் பாலிக்கிறார். ஞானசக்தி சன்னதியில் குங்குமமும், பராசக்தி சன்னதியில் விபூதியும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

இவர்களை வழிபடுவதன் மூலமாக கல்வி அறிவு விருத்தியாகும். ஆற்றல் பெருகும் என்பது நம்பிக்கை. கல்வியில் சிறந்து விளங்க இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. வேண்டுதல் நிறைவேறியதும், அம்மனுக்கும், சிவனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

பொதுவாக படிக்கிற குழந்தைகளுக்கு மறதி பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எவ்வளவு படித்தாலும் அடுத்த நாளே படித்ததை மறந்துவிடுகிறார்கள். மகரிஷி அகத்தியர் கூட தான் கற்ற வித்தைகள் மறக்காமல் இருப்பதற்கு இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றனர். எனவே இங்கு குழந்தைகள் அழைத்து வந்து படித்த பாடல்கள் மறக்காமல் இருக்க இறைவனை வேண்டலாம்.

மேலும், பிரம்மாவும், சரஸ்வதியும் விஜயம் செய்த தலம் இது. எனவே கல்விக்கு தொடர்பான பிரார்த்தனைகளைச் செய்ய ஏற்ற தலமாக இந்தக் கோயில் விளங்குகிறது. பிரம்மா மற்றும் சரஸ்வதி இருவரும் இங்கு வந்து தவம் புரிந்து சிவனின் நர்த்தனம் கண்டனர். ஆகையால் தான் இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

மணிமுத்தாறு, வெள்ளாறு நதிகள் இங்கு கூடுவதால் இந்தக் கோயிலுக்கு தட்சிணப்பிரயாகை என்ற பெயரும் உண்டு. எமதர்மராஜாவின் பிரதிநிதியான சித்திரகுப்தருக்கு சன்னதி இருப்பது ஒரு சில கோயில்களில் மட்டுமே, அந்த சிறப்பையும் இந்தக் கோயில் பெற்றுள்ளது.

நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது. தனி சன்னதியில் பொங்கு சனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஏழரை சனி நடப்பவர்கள் பிரதோஷ காலத்தில் நந்தியையும், பொங்கு சனியையும் தரிசித்தால் தோஷம் குறையும் என்பது நம்பிக்கை.

அகத்தியருக்கு கார்த்தியாயனன் என்ற மகன் பிறந்தான். அவனும் தந்தையைப் போன்று மிகப்பெரிய ரிஷி ஆனான். அதன்பின் அகத்தியர் தனக்கு ஒரு மகள் வேண்டுமென்று இந்தக் கோயிலில் உள்ள இறைவனை வேண்டினார். இறைவனின் விருப்பப்படி மகாலட்சுமி இங்கு ஓடும் மணிமுத்தாறு நதியிலிருந்த தாமரை மலர் மீது விளையாடுவதை கண்டார்.

அந்தக் குழந்தையைக் எடுத்து அம்புஜவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். விஷ்ணு பகவான் வராக அவதாரம் எடுத்த போது தனது துணைவி இங்கு அம்புஜவல்லியாக வளர்வதை அறிந்து மணம் செய்து கொண்டார். இந்தக் கோயிலில் விஷ்ணுவுக்கும் தனி சன்னதி உள்ளது.

சோழ நாட்டை ஆண்டு வந்த தினகர மகாரஜன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவளை கொன்றுவிட்டான். இதனால், அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் காரணமாக மனைவி மற்றும் மக்களை இழந்து சுற்றித்திரிந்தான். அப்போது ஒரு சொரிநாய் அவனது பின்னால் வந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அந்த சொரிநாய் ஒரு நதியில் மூழ்கி எழுந்தவுடன் ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

இதையடுத்து, அவரும் அந்த நதியில் மூழ்கி, குளித்தவுடன் அவரது தோஷம் நீங்கப்பெற்று இழந்த தனது நாடு, நகரத்தை திரும்ப பெற்றான். அந்த மன்னன் நீராடிய இடத்தில் இரண்டு நதிகள் கூடின. அந்த நதிகளின் கரையில் சிவன் கோயில் கட்டினான். இரு நதிகள் கூடியதால் அந்த ஊருக்கு திருக்கூடலையாற்றூர் என்று பெயரும் வைத்தான்.

மன்னன் கட்டிய கோயில் பழுதடைந்த நிலையில், கோயிலில் உள்ள சிலைகளைக் காணவில்லை. அப்போது பொன்னப்ப குருக்களின் கனவில் தோன்றிய அம்மன், தான் ஆற்றில் கிடப்பதாக கூறியிருக்கிறாள். இதையடுத்து, ஆற்றில் கிடந்த அம்மன் சிலைகளை எடுத்து வந்து குருக்கள் தற்போதுள்ள கோயிலை கட்டி சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளார் என்று வரலாறு கூறுகிறது.