கங்கையில் நீராடிய பலனைத் தரும் நம்ம ஊரு தீர்த்த தலங்கள்!

42

கங்கையில் நீராடிய பலனைத் தரும் நம்ம ஊரு தீர்த்த தலங்கள்!

கங்கையில் நீராடிய பலனை அள்ளித் தரும் தீர்த்தங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருக்கின்றன. அந்த புண்ணிய தீர்த்தங்கள் உள்ள நதிகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

காசி கங்கை நதியில் புனித நீராடினால், பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. ஆனால், அனைவராலும் காசிக்கு சென்று கங்கை நதிக்கரையில் நீராட முடியுமா? என்று கேட்டால் முடியாது என்பது தான் பதிலாக இருக்கும். அந்த வகையில், காசி கங்கையில் நீராடி பலனை அள்ளித்தரும் தீர்த்தங்கள் உள்ள புண்ணிய நதிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

மயிலாடுதுறை மயூரநாதர் கோயில்:

இந்த கோயிலின் முன்பாக உள்ள காவிரியின் துலா கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடினால், கங்கை நதியில் நீராடிய பலன் கிடைக்கும்.

திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் திருமடம்:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருவிசநல்லூர் என்ற ஊரில் ஸ்ரீதர ஐயாவாள் திருமடம் இருக்கிறது. இந்த மடத்திற்குள் தீர்த்தக்கிணறு ஒன்று உள்ளது. இதில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவாசை நாளில் கங்கை நீர் வெளியேறும். அப்போது, அந்த நதியில் புனித நீராடினால் புண்ணிய பலன் கிடைக்கும்.

ஸ்ரீவாஞ்சி வாஞ்சிநாதசுவாமி கோயில்:

திருவாரூர் மாவட்டம் ஸ்ரீ வாஞ்சியம் (திருவாஞ்சியம்) என்ற ஊரில் உள்ள வாஞ்சிநாதசுவாமி கோயிலில் குப்த கங்கை என்ற திருக்குளம் ஒன்று உள்ளது. இந்த திருக்குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் புனித நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில்:

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில். இங்குள்ள கடலில் தினந்தோறும் நண்பகல் நேரத்தில் கங்கை வந்து நீராடுவதாக ஒரு ஐதீகம். இதனால், அந்த நேரத்தில் கோயில் அர்ச்சகர்கள் கடலுக்கு தீபாரதனை காட்டுவார்கள்.

இதனால் அந்த நேரத்தில் கோவில் அர்ச்சகர்கள், கடலுக்கு தீபாராதனை காட்டுவார்கள். அப்போது கடலில் நீராடினால், கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும்.

ஏகாம்பரநாதர் கோயில்:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், தஞ்சை பெரிய கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகியவற்றில் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தங்களில் நீராடினால், கங்கையில் புனித நீராடிய புண்ணியம் கிடைக்கும்.

நூபுர கங்கை தீர்த்தம்:

மதுரை அழகர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அங்குள்ள மலையில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அருகில் நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. ஆனால், எங்கிருந்து வருகிறது என்று கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த தீர்த்தத்தில் நீராடினால், கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர்:

சனி பகவானுக்கு பெயர் பெற்றது திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர். இங்குள்ள கங்கா தீர்த்த குளத்தில் நீராடினால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

முக்குடல் தீர்த்தம்:

திருவாரூர் அருகிலுள்ள குருவிராமேஸ்வரம் என்ற இட த்தில் முக்கூடல் தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் புனித நீராடினால், கங்கையில் நீராடிய புண்ணியம் உண்டாகும்.

திருப்பூர் – விஸ்வேஸ்வரர் கோயில்:

திருப்பூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள விஸ்வேஸ்வர்ர் கோயில் தீர்த்தக் கிணற்றில் கங்கை தேவியே நீராடிய என்ற புராணக் கதை ஒன்று உள்ளது. இந்த தீர்த்தக் கிணற்றில் நீராடினால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

ராமேஸ்வரம் கோடி தீர்த்தம்:

ராமேஸ்வரம் கோடி தீர்த்தத்தில் நீராடினால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்த ராமபிரானுக்கு தண்ணீர் தேவைப்பட, தனது அம்பை எடுத்து பூமியில் எய்த போது அதிலிருந்து கங்கை நீர் வெளிப்பட்டது. அதுவே கோடி தீர்த்தம் எனப்பட்டது.

சிவகங்கை – மகா கிணறு:

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ள சவும்யநாராயணப் பெருமாள் கோயிலில் மகா கிணறு ஒன்று உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டு ஐப்பசி மாதம் வரும் அமாவாசை நாளில் நீராடினால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருக்கடையூர் மயானம்:

திருக்கடையூர் வீரட்டானம் கோயிலுக்கு அருகில் 1 கிமீ தொலையில் திருக்கடையூர் மயானம் ஒன்று உள்ளது. அங்கு காசி தீர்த்தம் இருக்கிறது. அந்த தீர்த்தமானது மார்க்கண்டேயருக்காக கங்கை நதி தீர்த்தமாக உருவெடுத்த இடம். ஆதலால், அங்கு நீராடினால், கங்கையிலேயே நீராடிய பாக்கிய பலன் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.