கடன் வாங்கி வீடு கட்டலாமா?

78

கடன் வாங்கி வீடு கட்டலாமா?

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும். அதில், குடும்பம், பிள்ளைகள், குழந்தைகள், பேரக் குழந்தைகள் என்று அனைவருடனும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தான் அனைவருமே ஆசைப்படுவோம். ஆனால், ஆசைப்படும் அளவிற்கு வீடு கட்டுவதற்கு காசு, பணம் இருக்குமா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல முடியும்.

வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்று நமது முன்னோர்கள் சும்மா ஒன்றும் சொல்லிவிடவில்லை. அதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை ஆராய்ந்து அனுபவித்து தான் இது போன்ற பழமொழியை வகுத்துள்ளனர். சொந்தமாக வீடு கட்டுவது என்பது ஒன்றும் சர்வ சாதாரணமான காரியமல்ல.

நிலம், கட்டுமானப் பொருட்கள் விலை, கொத்தனார் சம்பளம், மரச் சாமான்கள் என்று அனைத்துக்கும் கூலி உள்ளிட்ட ஏகப்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க வேண்டுமென்றால் கை நிறைய காசு, பணம் வைத்திருக்க வேண்டும். ஒரு சர்வ சாதாரணமாக கிச்சன், ஒரு பெட்ரூம், ஹால் என்று தனித்தனியாக சேர்ந்த மாதிரி ஒரு சிறிய வீடு கட்ட வேண்டுமென்றாலே குறைந்தது ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையில் ஆகும்.

நான் ரூ.30 ஆயிரம் வரையில் சம்பாதிக்கிறேன். ஆகையால் எனக்கு லோன் எளிதாக கிடைக்கும். அதனால், வங்கி மூலமாக ரூ.5 முதல் ரூ.7 லட்சம் வரையில் கடன் பெற்று சொந்தமாக வீடு கட்டிவிடுவேன் என்று நினைக்கலாம். அதன்படியே கட்டியும் விடலாம். ஆனால், அந்த வேலை உங்களுக்கு நிரந்தரமாக இருக்குமா? அந்த வேலையில் உங்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்குமா? இல்லை இடமாற்றம் ஏதேனும் வந்துவிடுமா? என்றெல்லாம் உங்களுக்கு தெரியாது.

ஒருவேளை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலை பறிபோய்விட்டால், வேறு வேலை கிடைப்பதில் உள்ள சிக்கல், காசு, பணம் தட்டுப்பாடு ஆகிய பிரச்சனைகள் இருக்கிறது. என்னதான் நீங்கள் கை நிறைய சம்பளம் வாங்கினாலும், உங்களது விவரங்களை ஆராய்ந்து பார்த்து தான் உங்களுக்கு லோன் தருவார்கள். அந்த லோனை நீங்கள் திரும்ப கட்டவில்லை என்றால் நடுத்தெருவுக்கு வந்துவிடுவீர்கள்.

கடன் வாங்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அதான், கடன் வாங்கி சொந்தமாக வீடு கட்ட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், மொத்த பணத்தையும் கடனாக வாங்க வேண்டாம் என்று தான் நான் சொல்கிறேன். ரூ.10 லட்சத்தில் வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டால் குறைந்தது ரூ.5 முதல் ரூ.7 லட்சம் வரையில் கையிருப்பு வைத்திருக்க வேண்டும். ரூ.10 லட்சத்தையும் கடனாக பெற்று வீடு கட்டினால், நீங்கள் கடனிலிருந்து மீண்டு வருவது முடியாத காரியமாகும்.

அப்படியில்லை என்றால், ரூ.5 லட்சத்தில் வீடு கட்ட நினைத்தால் ரூ.3 முதல் ரூ.3.5 லட்சம் வரையில் கையில் வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள பணத்திற்கு மட்டும் வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாம். வெறும், ரூ. 2 அல்லது ரூ. 3 லட்சம் என்றால் அடைத்துவிடலாம். ஆனால், அளவுக்கு அதிகமானால், கடன் அடைப்பதிலேயே உங்களது வாழ்நாள் முழுவதும் செலவாகிவிடும்.

ஆகையால், கடன் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று ஆசை வைத்திருபவர்கள், முதலில் இந்தப் பதிவை படித்துவிட்டு அதன் பிறகு நன்கு யோசித்து ஒரு முடிவு எடுங்கள்….