கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிபட வேண்டிய கோயில்!

54

கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிபட வேண்டிய கோயில்!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டா என்ற ஊரில் உள்ளது வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில். இந்த கோயிலில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி மூலவராக காட்சி தருகிறாள். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி, பௌர்ணமி, ஆடி வெள்ளி, வாசவி ஜெயந்தி ஆகிய நாட்களில் திருவிழா நடைபெறுகிறது.

‘கன்னிகா பரமேஸ்வரியின் சரிதத்தைப் படிப்பவர்களும், காதார கேட்பவர்களும் இவ்வுலகில் சகல செல்வங்களும் பெற்று வாழ்ந்திடுவர்’ என்கிறது கந்தபுராணம். ஆரிய வைசியர் குலத்தினர், தாங்கள் செய்த புண்ணியம் மற்றும் வழிபாட்டு பலன்கள் காரணமாக திருக்கயிலை மலையில் வாழும் வாய்ப்பைப் பெற்றனர். அவர்களில் சோமதத்தன் என்பவரின் மகள் கீர்த்தி. இவள் பேரழகு படைத்தவள். அவளது அழகில் மயங்கிய சித்திரகண்டன் என்ற கந்தர்வன், அவளை மணம் செய்ய விரும்பி, தன் விருப்பத்தினை வைசிய குல முனிவர்களிடம் தெரிவித்தான்.

மேலும் படிக்க: 501, 1001, 10001 என்று ஒற்றைப்படையில் மொய்ப்பணம் வைக்கிறார்கள் தெரியுமா?

இதற்கு கீர்த்தியும், முனிவர்களும் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சித்திரகண்டன், “பூலோகத்தில் பிறந்து அக்னியில் விழுந்து அழிந்து போவீர்களாக” என்று வைசியர்களுக்கு சாபம் கொடுத்தான். “அகம் பாவம் பிடித்த நீயும், பூலோகத்தில் பிறந்து தலை வெடித்து அழிவாய்” என்று வைசியர்களும் பதிலுக்கு சாபம் கொடுத்தனர். இதற்குப் பிறகும் கூட சித்திரகண்டன், கீர்த்திக்கு தொந்தரவு கொடுத்து வந்தான். இதனால் பொறுமை இழந்த வைசியர்கள் நந்திதேவரிடம் முறையிட, சித்திரகண்டனை நந்திதேவர் தன் பார்வையால் எரித்து அழித்தார்.

இதையடுத்து கீர்த்தியின் தந்தையும், தாயும் பூலோகத்தில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரிக் கரை அருகே உள்ள பெனுகொண்டாவில் வந்துதித்தனர். கீர்த்தியின் தந்தை குசுமச் செட்டியாகவும், தாயார் குசுமாம்பிகையாகவும் பிறந்தனர். இவர்களது மகளான கீர்த்தி, வாசவாம்பாள் எனும் வாசவியாக பிறந்தாள். வாசவியின் உடன் பிறந்த சகோதரராக நந்திதேவரே, விரூபாட்சன் என்ற பெயரில் அவதரித்தார். இதே காலத்தில் ராஜமகேந்திரவரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த விஷ்ணுவர்தன், தான் சென்ற இடம் எல்லாம் வெற்றி வாகை சூடினான். விஷ்ணுவர்தன் வேறு யாருமல்ல, முனிவர்களால் எதிர் சாபம் பெற்ற சித்திரகண்டன் என்னும் கந்தர்வன் தான்.

இதையும் படியுங்கள்: இழந்த செல்வம் திரும்ப கிடைக்க முருகனுக்கு 7 வெள்ளிக்கிழமைகள் விரத வழிபாடு!

விஷ்ணுவர்தன், வெற்றிக் களிப்பில் பெனுகொண்டா நகருக்கு வந்தான். அங்கே வாசவியைக் கண்டு காதலுற்றான். எப்படியாவது வாசவியை மணக்க ஆசைப்பட்டான். வாசவியின் தந்தையிடம் பெண் கேட்டான். வைசிய குலத்தில் தோன்றிய பெண்ணை, சத்திரிய குலத்தில் தோன்றிய அரசனுக்கு மணம் முடித்து தர இயலாமையை எடுத்துக் கூறியும், விஷ்ணுவர்தன் கேட்பதாக இல்லை. அவர்கள் குடும்பத்தை துன்புறுத்தத் தொடங்கினான். தொடர்ந்து வற்புறுத்தினான். இதையடுத்து தன் குலத்தாருடன் ஆலோசித்து பதில் கூறுவதாக குசுமச் செட்டி கூறினார். 18 நகரங்களில் இருந்து 714 கோத்திரத்தார் குசுமச் செட்டியின் அழைப்பால் வந்து சேர்ந்தனர்.

பெனுகொண்டா நகரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வைசிய மகா சபையில் கூடி பிரச்சினையை விவாதித்தனர். 612 கோத்திரக்காரர்கள் ‘பெண் கொடுக்கலாம்’ என்று உடன்பட்டனர். மீதமுள்ள 102 கோத்திரக்காரர்களும் ‘பெண் கொடுக்க வேண்டாம்’ என்றனர். இதனால் கோபமடைந்த 612 கோத்திரக்காரர்களும் நாட்டை விட்டு வெளியேறினர். இவ்வளவு பிரச்சினைக்கும் தானே காரணம் எனக் கருதிய வாசவி, இதற்குத் தானே பரிகாரம் செய்ய எண்ணி தீக்குளிக்க முடிவெடுத்தாள்.

அவள் கட்டளைப்படி அங்குள்ள நகரேஸ்வரர் எனும் சிவபெருமான் ஆலயத்தின் முன் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, அதில் வாசவி அக்னிப் பிரவேசம் செய்தாள். அவளுடன் 102 கோத்திரக்காரர்களும் தங்கள் குழந்தைகளை மட்டும் விட்டு விட்டு, தங்கள் மனைவியர்களுடன் அக்னிப் பிரவேசம் செய்து திருக்கயிலையை அடைந்தனர். வாசவி அக்னிப்பிரவேசம் செய்த செய்தியைக் கேட்டவுடன், விஷ்ணுவர்தன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறியது.

இதனைக் கேள்விப்பட்ட அவனது மகன் ராஜராஜேந்திரன், தன் தந்தையின் தவறுக்கு மன்னிப்புக் கேட்டு, பிராயச்சித்தமாக தன் ராஜ்ஜியம் முழுவதையும் வைசியர்களுக்கே காணிக்கையாகக் கொடுத்தான். ஆனால் அங்கிருந்த 102 கோத்திரக்காரர்களின் வாரிசுகளும் அதனை ஏற்கவில்லை. அப்போது வாசவி அக்னிக் குண்டத்தில் இருந்து பார்வதி தேவியின் வடிவாக, கன்னிகா பரமேஸ்வரியாகத் தோன்றி மன்னன் மகனை ரட்சித்தாள். பின்பு தன்னுடன் அக்னிப்பிரவேசம் செய்தவர்களை வாழ்த்தினாள்.

வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயில், ஆந்திர மாநிலம் பெனுகொண்டாவில் உள்ளது. கோமுட்டி எனும் ஆரிய வைசியர்களின் காசி என பெனுகொண்டா போற்றப்படுகிறது. கருவறையில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இங்கு விநாயகர், நகரேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீதேவி- பூதேவி உடனாய வேங்கடேஸ்வர பெருமாள், காலபைரவர், நவக்கிரக சன்னிதிகளும் உள்ளன. குழந்தை பாக்கியம், திருமண வரம், தம்பதிகள் ஒற்றுமை என வேண்டும் வரங்கள் தருபவளாக வாசவி தேவி அருள்கிறாள்.

அமைவிடம்:

சென்னையில் இருந்து சுமார் 398 கிலோ மீட்டர் தூரத்தில் ஆந்திர மாநிலத்தில் பெனுகொண்டா வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.