கண்பார்வை குறைபாடு நீங்க சென்று வர வேண்டிய கோயில்!

59

கண்பார்வை குறைபாடு நீங்க சென்று வர வேண்டிய கோயில்!

கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது, அவளிவநல்லூர் சாட்சிநாதர் கோவிலில். இங்கு மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.

சாட்சிநாதன் சௌந்தரநாயகி:

இக்கோவிலில் சாட்சிநாதர் என்றும், அம்பாள் சௌந்தரநாயகி, சௌந்தரியவல்லி என்றும் அருள்பாளிக்கிறார். இங்கு தல மரம் பாதிரி மரம் ஆகும்.  தீர்த்தம் சந்திர புஷ்கரணி.

தல வரலாறு:

பஞ்சாரண்யத் தலங்களுள் இரண்டாவது. சாட்சிநாதபுரம், புல்லாரண்யம், பாதிரிவனம் ஆகிய பெயர்கள்  இத்தலத்திற்கு உண்டு. பிரமனும் சூரியனும்,அகத்திய முனிவரும்  வழிபட்ட தலம் இது. வராக வடிவம் கொண்ட திருமால் இப்பெருமானை வழிபட்டுப் பேறு பெற்றார்.

புராணக்கதை:

பண்டை நாளில் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்த பெண்ணை ஒருவருக்கு மணம் முடித்தார். மணந்து கொண்டவர் சிறிது காலங்கழித்து, காசி யாத்திரை சென்றார். அவர் காசி சென்றிருந்த காலத்தில் மூத்த பெண்ணுக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார்.

தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக்கண்டு, “இவள் என் மனைவியல்ல என்றும் உருவத்தில் ஒத்திருந்த இளையவளே என் மனைவி” என்று வாதிட்டார். இதனால் இரு பெண்களையும் பெற்ற ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் “அவள் இவள்” என்று சுட்டிக் காட்டி மறைந்தார்.

மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பண்டைய உடலும் கண்களும் பெற்றாள்; கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள் இவள் என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று.

ராஜகோபுரம் இல்லாத ஆலயம்:

இவ்வாயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர். உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.