கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் வணங்கவேண்டிய கண்ணாயிரநாதர் கோவில்

41

கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் வணங்கவேண்டிய கண்ணாயிரநாதர் கோவில், திருக்காறாயில்!(திருக்காரவாசல்) சிவஸ்தலம் பெயர்: திருக்காறாயில் (தற்போது திருக்காரவாசல் என்று வழங்குகிறது) இறைவன் பெயர் கண்ணாயிரநாதர் இறைவி பெயர்: கைலாயநாயகி

தலத்தின் வரலாறு: கார் அகில் மரக்காடு நிறைந்து இத்தலம் இருந்ததால் காறாயில் என்று பெயர் பெற்றது. பிரம்மாவிற்கு ஒருமுறை தான் எல்லோரையும் விட பெரியவன் என்ற கர்வம் வந்தது.
அதனால் சிவபெருமானைக்கூட வழிபடாமல் அவரை அலட்சியம் செய்தார். சிவபெருமான் அவரது அகத்தையை அகற்றிட திருவுளம் கொண்டு அவரது படைக்கும் தொழில் பதவியை அவரிடமிருந்து பறித்து விட்டார். பதவி பறிபோன பிரம்மா கர்வம் அடங்கி பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால் காரை மரங்கள் நிறைந்திருந்த திருக்காராயில் (திருக்காரவாசல்) வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார்.எனவே கண்ணாயிரநாதர் என்று பெயர் பெற்றார். கருவறையில் கண்ணாயிரநாதர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி நமக்கு அருட்காடசி தருகிறார். கண்ணாயிரநாதருக்குச் சமமாக, பக்கத்திலேயே ஆதிவிடங்க தியாகராஜரின் சன்னதி அமைந்திருக்கிறது. தியாகராஜர் சந்நிதி முன்னுள்ள நந்தி நான்கு கால்களுடன் நின்று கொண்டிருக்கும் காட்சியைக் காணலாம். ஆலய அமைப்பு:திருக்காறாயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற தலமாகும். கிழக்கு நோக்கிய இக்கோவிலுக்கு ராஜகோபுரமில்லை. முதல வாயிலைக் கடந்து உள் சென்றவுடன் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் உள்ள நந்தி ஆகியவற்றைக் காணலாம். ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் உள்ள சேஷ தீர்த்தம் என்ற கிணறு.
ஆதிசேஷன் இங்குள்ள கிணற்றின் வழியாக கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டதால், சேஷ தீர்த்தம் உண்டானது. இது இந்திர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. சேஷ தீர்த்தம் என்னும் கிணற்று நீர், மருத்துவ குணம் மிக்கது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு அந்த நீர் அபிஷேகம் செய்யப்பட்டு, வேண்டுவோர்க்கு அளிக்கப்படுகிறது.

கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்கு தரும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து சேஷதீர்த்தத்தில் நீராடி, பிரசாதமாக வழங்கப்படும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை பெற்று சாப்பிட்டு வந்தால் நோய் விரைவில் குணமாகும் என்பதும்,தோல் சம்பந்தப்பட நோய் உள்ளவர்கள் பவுர்ணமி நாட்களில் தரப்படும் சேஷ தீர்த்தத்தை சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விரைவில் குணமாகும்.
ஒவ்வொரு பௌர்ணமியிலும் இந்த சேஷ தீர்த்தத்து நீரைப் பருகி வந்தால் தீராத நோய்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில் இந்திரன் சேஷ தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையாரை பூஜிப்பதாக ஐதீகம்.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இந்த ஆலயத்திற்கு எப்படிப் போவது:
திருவாரூர் . திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து தெற்கே சுமார் 13 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. பிரதான சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது.
இத்தலத்திற்கு அருகில் உள்ள பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள்:
திருநெல்லிக்கா, திருகைச்சினம், திருக்கொள்ளிலி ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் உள்ளன.