கனிந்த வாழ்க்கைக்கு கருடன், விஷ்ணு வழிபாடு!

84

கனிந்த வாழ்க்கைக்கு கருடன், விஷ்ணு வழிபாடு!

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி நாளில் கருட பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது. பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் திகழும் கருடனுக்கு உகந்த விரதம் கருட பஞ்சமி விரதம். இந்த விரதம் குழந்தைகளுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.

கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செய்வது கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனைப் போல பலசாலியும், புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே. கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பாகவும் விளங்குகிறது.

கருடாழ்வார்:

கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும். தன உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார்.

பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன் புறம் நீட்டியவாறு இருப்பார்.

காத்தல் தொழிலைக் கொண்ட திருமாலுக்கு வாகனமாய் இருப்பவர் கருடாழ்வார். சுபர்ணன், பன்னகாசனன், புஷ்பப்ரியன், மங்களாயன், சுவர்ணன், புன்னரசு என்ற திருநாமங்களும் இவருக்கு உண்டு. இவரின் தாயான வினதையை முன்னிட்டு வைநதேயன் என்றும், பெரிய திருவடி என்றும் அழைக்கப்படுகிறார் கருடாழ்வார்.

கருட பஞ்சமியும், ஆடி சுவாதியும் கருடாழ்வாரின் அவதார நன்னாட்கள். காஷ்யப முனிவருக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி கத்ரு; மற்றொருத்தி வினதை. கருட பகவானின் தாயாரான வினதைக்கும், கத்ருவுக்கும் எப்போதும் விரோத மனப்பான்மை உண்டு. கத்ருவுக்கு நாகங்கள் பிறந்தன.

அவற்றுக்கு கருடன் மீது எப்போதும் பகை எண்ணமே இருந்தன. கருடனும், நாகமும் பகைவர்களாக இருந்தபோதிலும் கருடன் திருமாலுக்கு வாகனமாகவும், ஆதிசேஷன் திருமாலின் அரவணை (படுக்கை)யாகவும் அமைந்தனர்.

இரண்டு மனைவிகள் என்றாலே சண்டையும், சச்சரவுகளும், பொறாமையும் வெறுப்பும் அதிகரித்துக் கொண்டே போக, எப்படியாவது ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும்; தானேஅதிகாரம் செலுத்தி மற்றவரை அடிமை கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போனது.

வினதையை வீழ்த்தி தனக்கு அடிமையாக்க வேண்டும் என்று நினைத்த கத்ருவிற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. காத்ருவும், வினதாவும் சகோதரிகள். ஒருமுறை வானில் பறந்து கொண்டிருந்த உக்கைஷ்ரவா என்ற தேவலோகக் குதிரையைக் கண்டனர். குதிரையின் வால் என்ன நிறம் என்பது பற்றி இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. வினதா அதை வெள்ளை என்று சொல்ல காத்ரு வெள்ளைக் குதிரைக்கு கருப்பு வால்தான் இருக்க முடியும் என்று பந்தயம் வைத்தாள்.

யார் பந்தயத்தில் தோற்றுப் போகிறார்களோ அவர்கள் மற்றவரிடம் காலம் முழுவதும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நிபந்தனை. மறுநாள் அந்த குதிரையின் வால் நிறத்தை மீண்டும் உறுதி செய்து கொள்வது என்று இருவரும் பேசிக் கொண்டனர்.

அன்று இரவே காத்ரு தன் குழந்தைகளான ஆயிரம் பாம்புகளிடம் குதிரையின் வால் போல் தோற்றமளித்து தான் பந்தயத்தில் ஜெயிக்க உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டாள். பாம்புகள் மறுநாள் அக்குதிரையின் வால் போல் காட்சி தந்து வினதாவை ஏமாற்றின.

வினதாவும் அதை நிஜமென்று நம்பி காலம் முழுவதற்கும் தன் சகோதரிக்கு கட்டுப்பட்டு இருக்கத் தொடங்கினாள். இந்த வினதாவுக்கு மகனாகப் பிறந்தவனே கருடன். தன் தாயின் நிலை கண்டு வருந்திய கருடன் தன் பாம்பு சகோதரர்களிடம் தன் தாய்க்கு விடுதலை வாங்கித் தருமாறு வேண்டிக்கொண்டான்.

பாற்கடலை கடையும்போது கிடைக்கும் அமுதத்தை தமக்கு கொண்டு வந்து தந்தால் கருடனின் தாயை தங்கள் அன்னையிடம் இருந்து மீட்டுத் தருவதாக பாம்புகள் வாக்களித்தன. பலவகையான போராட்டங்களுக்கு பிறகு மிக பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த அமிர்த கலசத்தை கருடன் தூக்கிச் செல்ல தன் தாயின் மேல் அவன் வைத்திருந்த பிரியத்தை எண்ணி மனம் மகிழ்ந்த நாராயணன் அவனை தனது வாகனமாகிக் கொண்டார்.

விஷ்ணுவை தன் மீது அமர்த்திக் கொண்டு வெகு வேகமாக கருடன் பறந்த போது இந்திரன் தன் வஜ்ராயுதத்தை ஏவி அவனைத் தடுக்கப் பார்த்தான். ஆனால் வஜ்ராயுதம் கருடனுக்கு எந்த தீங்கும் இழைக்கவில்லை.

கருடனின் சக்தி அறிந்த இந்திரன் அமிர்தத்தை வேறு எவருக்கும் தரக்கூடாது என்று கட்டளை இட்டான். அதற்கு கருடன் “என் தாய் விடுதலை ஆனதும் தாங்களே வந்து அமிர்த கலசத்தை மீட்டுக் கொள்ளுங்கள். பதிலுக்கு பாம்புகள் எனக்கு உணவாகும் வரத்தை நீங்கள் அருள வேண்டும்” என்று கோரிக்கை வைத்தது.

இந்திரனும் கருடனின் சொல்லால் மனம் நெகிழ பாம்புகள் இருக்கும் இடத்தில் அமிர்த கலசத்தை ஒரு புல் தரையின் மீது கருடன் வைத்தான். ஆகம முறைப்படி சுத்த பத்தமாக ஸ்நானம் செய்த பிறகே அமிர்தத்தை பருக வேண்டும். அதற்கு முன்பு தன் தாயை விடுவிக்க வேண்டும் என்று கருடன் சொல்ல வினதாவும் விடுதலை ஆனாள். பாம்புகளும் ஸ்நானம் செய்யச் சென்றன.

அந்நேரம் இந்திரன் வந்து அமிர்த கலசத்தை மீண்டும் எடுத்துச் சென்றான். அமிர்த கலசத்தை காணாத பாம்புகள் ஏமாற்றத்தில் திகைத்தன. அதுமுதல் கருடன் பாம்புகளை உணவாக்கிக்கொள்ள ஆரம்பித்தது. பெருமாள் கருடனை ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது.

இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு. திருமால் அருளிய வரத்தின்படி திருக்கோயில்களில் கருடக்கொடியாகவும், திருமாலுக்கு வாகனமாகவும் திகழும் கருடன், திருமாலை நமக்குக் காட்டியருளும் குருவாகவும் போற்றப்படுகிறார்.

கருடன் மற்ற பறவைகளைப் போல் இறக்கைகளை விரித்துக்கொண்டு பறப்பதில்லை. கருடனின் பார்வையும் மிகக் கூரானது. கருடக் குரலின் அடிப்படையில் “கருடத்வனி’ என்று ஒரு ராகமே அமைந்துள்ளது. ஒவ்வொரு திருமால் கோயிலிலும் கருட ஸேவைத் திருவிழா பலமுறை நடக்கும். மாசி மகத்தன்று கருட சேவையில் பகவான் திருக்கோயில்களின் அருகேயுள்ள புஷ்கரிணிக்கோ, ஆறு அல்லது சமுத்திரங்களுக்கோ சென்று தீர்த்த வாரி கண்டருள்வார்.

கருடனுக்கு வடை மாலை சாற்றுவது வழக்கம். பூரண கொழுக்கட்டையைப் போன்ற அமிர்த கலசம் இவருக்கு நிவேதனம். “கருடத்வனி’ ராகமாய் நம் வாழ்க்கை இனிமை பெற, கருட பஞ்சமியன்றும் கருட ஜெயந்தியன்றும் கருடாழ்வாரையும், அவர் தாங்கிச் செல்லும் திருமாலையும் வழிபடுவோம்.

கருடபறவை மங்களம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இப்பறவை வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் இந்துக்களால் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோயிலில் குடமுழுக்கு, வேள்வி மற்றும் பிற சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்போது போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவது நல்ல சகுனம் என்று நம்பப்படுகிறது.

சபரிமலை ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்துக்காக கேரளா மாநிலம் பந்தளம் எனும் ஊரில் உள்ள அரண்மனையிலிருந்து திருவாபரணப் பெட்டிகள் ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரும்போது கூடவே கருடன் பறவை நேர் மேலே வட்டமிட்டபடி தொடர்ந்து வருவதை இன்றும் காணலாம்.

பெருமாள் கோயில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதசுவாமி கோயிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார். இதுபோன்ற சிலை வேறு எங்கும் இல்லை.

ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது.

வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில் நறையூர் நம்பி கோயிலில் அமைந்துள்ள கல் கருடன் புகழ் பெற்றது

திருவள்ளூர் மாவட்டம் கோயில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார். இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின்புறம் உள்ளது.

கருடவாகன சேவை:

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை. பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது.

கருட புராணம்:

பதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம். பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது

கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

கருடாழ்வாரை தரிசிக்கும்போது

குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச! விஷ்ணு வாஹ! நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம: என கூறி வணங்க வேண்டும்.

பெரிய திருவடி என வைஷ்ணவர்களால் போற்றப்படும் கருடாழ்வாரை இந்தத் திருநாளில்  தரிசனம் செய்வதாலும்,  வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும். ஸ்ரீரங்கத்தில் பெரிய கருடன் மற்றும் அமிர்த கலச கருடன், கும்பகோணம் நாச்சியார் கோயில் கல் கருடன் ஆகியவை கருடாழ்வாரின் சிறப்புமிக்க ஸ்தலங்களாகும்.